கோணங்கியும் ஜெயமோகனின் ஞான மரபும்

 

                  தேவரும் நாயரும் 

                 "போற்றிப் பாடடி பெண்ணே" 


 By நட்சத்திரன் செவ்விந்தியன்

நீங்க பீ·ப் சாப்பிடுவீங்களா? தமிழ்நாட்டிலே இதெல்லாம் ரொம்ப ஆர்த்தடக்ஸா இருப்பாங்கள்ல?” என்றேன். ”நாங்க தேவமாரு பொதுவா மாடு எல்லாம் சாப்பிட மாட்டோம். நான் எல்லாத்தையும் சாப்பிட்டுருவேன். இப்ப காதல்கவிதை எழுதறவனில ஒருத்தன போட்டுத்தள்ளி ·ப்ரை பண்ணி சாப்பிடணும்ணு ரொம்பநாளா ஆசை…”

  - தன்னை  தேடி வந்து கேரளாவில்   கோணங்கி சந்தித்தது பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் 


ஜெயமோகனுடைய குரல் பாசிசக்குரல். பாசிசத்திற்கு அச்சொட்டான பாடப்புத்தக வரைவிலக்கணம் உண்டு. அவ்வரைவிலக்கணத்தை விரித்து விளக்கினால் சுயாதீனமாக இயங்கவேண்டிய இயல்கள் மற்றும்  துறைகளான சட்டம், நீதி, குற்ற(வியல்) சனநாயகம், விஞ்ஞானம் முதலியவற்றை ஒரு சிலரின் நலன்களுக்காக கட்டுப்படுத்துவதே பாசிசம் என்பது வரும்.

"எழுத்தாளன், புனிதன், மனிதன்"  என்ற தன் கட்டுரையில் ஜெயமோகன் அச்சொட்டாகச் செய்திருப்பது சுயாதீனமான இயல்கள் மற்றும் துறைகளை கட்டுப்படுத்த முயன்றிருப்பதுதான். மனுக்குலம் பல  நூற்றாண்டுகாலங்களாக சேகரித்த  அறிவாலும் அறிவுப்பிரயோக அனுபவத்தாலும் கண்டு செழித்த உண்மைகள் இரண்டு

1.  சட்டத்தின் முன் யாவரும் சமன். இதில் பாமரன் - பண்டிதன், பணக்காரன் - பிச்சைக்காரன், அரசன் - குடிமகன், ஆண் - பெண், ஆதிக்க சாதி - அடக்கப்பட்ட சாதி, நிலவுடமையுள்ளவன் - இல்லாதவன் எல்லோரும் சட்டத்தின் முன் சமமானவர்களே.

2. ஒரு மனிதனுக்கு ஒரு தேர்தல் வாக்கு. அதிகாரமும் செல்வாக்குள்ளவர்களுக்கும்ஒரு வாக்கே.   

இந்த இரண்டு தத்துவங்களையும்  உடைத்து "பாமரர்களின்" உரிமைகளை மறுப்பதும் " இலக்கியம் தெரிந்தவர்களுக்கு"  சலுகைகளும் குற்றவிலக்கும்(Impunity) கேட்பதே ஜெயமோகனின் பாஸிசம். 

ஜெயமோகன் மிச்சிறப்பான தமிழ் புனைகதாசிரியர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒரு சமூகவிஞ்ஞானியோ ஆய்வாளரோ விமர்சகரோ அல்லர். ஒரு சமூக விஞ்ஞானி ஆயின் காய்தல் உவத்தல் இன்றி Bias and Agenda இன்றி இயங்கவேண்டும். தருக்கம், தரவுகள் அடிப்படையில் விஞ்ஞான இயங்கியல், விதிகள் என்பவற்றை பிரயோகித்து இயங்கவேண்டும். பாசிசம் முதலிய ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கை அல்லது சித்தாந்தத்திடம்(Doctrine) அறிவுத்துறையை அடகுவைக்கமாட்டாதவராக இருக்கவேண்டும். 

ஜெயமோகன் ஒரு சமூகவிஞ்ஞானி அல்லாத பாசிஸ்ட் என்பதற்கு “எழுத்தாளன், புனிதன், மனிதன்” என்ற அவரது  கட்டுரை மட்டுமல்ல இதுகாலவரையான அவரது பல அ- புனைவு எழுத்துக்களே சாட்சி.

கோணங்கியின் திறமைகளில் முதலாவது ஒருவரைப்பார்த்தால் உடனே சாதி, பிராந்தியம் இரண்டையும் கண்டு பிடித்து விடுவது. சரக்குமாஸ்டர்களில் பொதுவாக வடநெல்லைக்காரர்கள் — இப்போதைய காமராஜ் மாவட்டம்- அதிகம். பெரும்பாலும் நாடார்கள். மதுரைக்காரர்களும் உண்டு, தேவர்கள் குறைவு. ”பேரணாம்பட்டிலே ஒரு சௌராஷ்டிர சரக்குமாஸ்டர் இருக்கார். அவரு ஒருத்தருதான் சமையல்பண்ற ஒரே சௌராஷ்டிரக்காரர்…” ஓட்டலில் ஆட்டுக்குழம்பை ஒருவாய் சாப்பிட்டு ”சமையக்காரர் கோனார்னு நெனைக்கிறேன்..”என்று சொல்பவர் அவர். எழுத்தாளர்கள் கூட இப்பிரிவினைக்குள் வருவார்கள் ”சமயவேல் வீட்டிலே சாப்பிட்டேன். ஆசாரிமார் வீட்டிலே மீன்கொழம்பு நல்லா இருக்கும்

 - ஜெயமோகனின் கட்டுரையிலிருந்து 


ஜெயமோகனின் குறித்த கட்டுரை மனுக்குல விடுதலைக்கெதிரான ஒரு ஆதி அடிப்படைவாத பாசிஸ்ட்டின் அறைகூவல். அசல் லாபியிங்(Lobbing) அதனை வரி வரியாக அதிலுள்ள அனைத்து அபத்தங்கள், போலி நியாயங்கள்(Fallacy) தரவுப்பிழைகள்,Bias and Agenda முதலிய அனைத்துமே அம்பலப்படுத்தப்பட்டு கண்டிக்கப்படவேண்டியவை. குறித்த கட்டுரையின் பின்வரும் பகுதிகள் மிக்க பிரச்சனைக்குரியவை. 👇


"நடுவே ஒரு குரல். இலக்கியமறியாதவனை பாமரன் என்று சொல்லக்கூடாது என்று. இலக்கியமறியாதவன் இலக்கியப் பாமரனேதான். முற்றிலும் தெரியாதவன் அந்த அளவுக்கு பாமரன். பாமரனை பாமரன் என்று சொல்வதுதான் அந்தப் பாமரத்தனத்தை அடையாளம் கண்டுகொள்ள, அடுத்த தலைமுறையாவது அதிலிருந்து மீள ஒரே வழி

இலக்கியவாதியிடம் மிக அரிதாக அதீதப் பிறழ்வுகளும் இருக்கலாம். அதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒரு பாமரனிடம் அது இருந்தால் அது மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதும்தான். ஏனென்றால் அவன் எதையும் உருவாக்குபவன் அல்ல. இலக்கியவாதியிடம் அவனுடைய படைப்புசக்தியின் மறுபக்கமாகவே அது உள்ளது. அதன் பொருட்டு அவன் மன்னிக்கப்படவேண்டும், ஏற்கப்படவேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் அதன்பொருட்டு அவன் பாமரர்களால் வேட்டையாடப்படலாகாது. அப்புரிதல் ஒரு சமூகத்தில் சிலரிடமாவது வேண்டும்"

        - ஜெயமோகன்


பாமரன் என்ற சொல்லே ஜெயமோகனின் மந்திரமே மிக்க பிரச்சனைக்குரிய சொல். தமிழில் பாமரன் என்பதன் அர்த்தங்களாக பின்வருவன சொல்லப்படுகின்றன.

படிப்பறிவில்லாதவன்(Illiterate)

முட்டாள்

அறிவில்லாதவன்

பாமரனுக்கு எதிர்ப்பதமாக பண்டிதன் என்ற சொல் சொல்லப்படுகிறது. 

பாமரன் என்ற சொல் சார்ந்து எது அறிவு என்பதை வரைவிலக்கணப்படுத்துவதே சிக்கலானது. எழுதப்படிக்கத் தெரிந்திருப்பது தான் அறிவா? எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் அறிவிலிகளா? இருபதாம் நூற்றாண்டுக்கு முன் உலகின் சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாகத்தான் இருந்தார்கள். மனுக்குல வரலாற்றின் மகத்தான சாதனையாளர்கள் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள். நல்ல உதாரணம் மொகாலயச் சக்கரவர்த்தி அக்பர். அக்பர் பாமரனா? அல்லது இலக்கியப் பாமரனா? யேசு கிறிஸ்துவின் உண்மையான முழுமையான வரலாறு நமக்கு தெரியாது. யேசுவுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா இல்லையா? யேசு பாமரனா? இலக்கியப்பாமரனா? 

இலக்கியப் பாமரன்களே கோணங்கிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்று நிறுவுவதே ஜெயமோகனின் அஜெண்டா. இலக்கியப் பாமரன் என்பதை புனைவிலக்கியம் தெரியாத அதாவது Literature cognition(இலக்கிய ஞானம்) தெரியாதவர் என்ற அர்த்தத்திலேயே ஜெயமோகன் எழுதுகிறார். சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிறி வந்தபோது சாருவுக்கு Literature- cognition தெரியாது என்று விமர்சகர்கள் கிழித்தார்கள். சாருவின் புனைவு எழுத்துக்கள் அனைத்தையும் படித்தவர்கள் இதனை ஒப்புக்கொள்வார்கள். அப்பேற்பட்ட இலக்கியப் பாமரன் சாநிக்கு ஜெயமோகன் விஷ்ணுபுரம் இலக்கிய விருது கொடுத்திருக்கிறார். 

இலக்கியப் பாமரனுக்கு விஷ்ணுபுரம்                                   விருது



பாமரனின் மற்ற அர்த்தமான எழுதப்படிக்கத் தெரிந்திருந்தாலும் அறிவிலும் அறிவுத்துறைகளிலும் நாட்டமில்லாத முட்டாள்கள் என்பதை எடுத்துக்கொண்டாலும் எல்லா சமுகங்களிலும் பெரும்பாலானவர்கள் இவர்களே. இலக்கியப்பாமரர்களாகவோ கிளாசிக் மியூசிக் பாமரர்களாகவோ புத்திஜீவிகள்(Intellectual) அல்லாத பாமரர்களாக இவர்கள் இருந்தாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தான் கோணங்கியைப் போலல்லாது ஒழுங்காக வேலைக்குப்போய் சம்பாதிக்கிறார்கள். தம்நாட்டு பொருளாதாரத்திற்கு வரி செலுத்துகிறார்கள்.  சாரு நிவேதிதா முதலிய இணைப் பிச்சைக்காரர்களுக்கு தாரளமான பிச்சைபோடுகிறார்கள். சினிமா ரிக்கெற் வாங்குவதன் மூலமாக ஜெயமோகன் போன்ற சினிமா வசனகர்த்தாக்களை பணக்காரர் ஆக்குகிறார்கள்.   ஒழுங்காகத் திருமணஞ்செய்து மனைவிக்கு விசுவாசமாக இருந்து பிள்ளைபெற்று அவர்களை வளர்த்து நாட்டுக்கான எதிர்காலச் சந்ததிகளை உருவாக்குகிறார்கள்.  தம் “பாமர” பொருளாதார அறிவை வைத்து பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்வதன் மூலம் சந்தை சக்திகளினதும் சந்தை விதிகளினதும் பங்காளர்களாக இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகிறார்கள். தம் “பாமர” அரசியல் அறிவை வைத்து ஒழுங்காக தேர்தல்களில் வாக்களித்து சந்தர்ப்பத்திற்கேற்ப சிறப்பான மக்களாட்சியை ஏற்படுத்துகிறார்கள். இந்த “பாமரர்களே” சனநாயகத்தின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அக்கடெமிக் லெவலில் இலக்கியமோ,  கலைகளோ, புள்ளிவிபரவியலோ, நுண் கணிதமோ, வான் இயற்பியலோ அல்லது Actuarial science தெரியாதது குற்றமா? இல்லவே இல்லையே.

இந்த ஜெயமோகனின் குரலை எங்கோ கேட்டமாதிரி இல்லையா? ஆமாம் நீங்கள் கேட்ட குரல்தான். உலக நாடுகள் பூராகவும் மகத்தான  மக்களாட்சியை நடைமுறைப்படுத்த முயன்றபோது கேட்ட எதிர்க்குரல்தான். “பாமரர்களான” பெண்களுக்கும்( ஜெயமோகனின் மொழியில் 👉குருவி மண்டைகள்), தலித்துகளுக்கும், எழுதப் படிக்கத்தெரியாத பாமரர்களுக்கும், சொத்துடமை/ நிலவுடமை இல்லாதவர்களுக்கும் வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்ற சொன்ன குரல்தான். சர்வசன வாக்குரிமையை எதிர்த்த குரல்தான். ஜெயமோகனின் அவரது இந்திய ஞானமரபின் குரல்தான். 

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் ஊடகத்துறையில் லாபியிங் என்பதற்கு ஆதாரமாக ஜெயமோகனின் இக்கட்டுரையை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும். இதைவிட நல்ல பிரதி கிடைக்கப்போவதில்லை. 

ஜெயமோகனின் கட்டுரையிலுள்ள இரண்டாவது முக்கியமான மோசடி கிறிமினல் குற்றங்களையும் தனிமனித பலவீனங்களையும் தனிமனித கட்டற்ற  சுதந்திரங்களையும் அவற்றின் வித்தியாசங்களை மறைத்து  சமப்படுத்தி எழுதி தன் லாபியிங் கட்டுரைக்கு ஆதரவு தேடுவது. 

1. சமப்பாலுறவாளராக Homosexual ஆக இருப்பது கிறிமினல் குற்றமல்ல. அது மனித உரிமை. ஜெயமோகனின் மொழியில் ஒரு பாலுறவாளர்களும் பிறழ்வு கொண்டவர்களே. பிறழ்வு என்ற அவரது சொல்லே பல வகைகளில் பிழையான சொல். சமப்பாலுறவு பிறழ்வு அல்ல. Transgressive Literature என்பதை ஜெயமோகன் பிறழ்வு இலக்கியம் என்று மொழிபெயர்ப்பதே பக்கா தவறு. இதனை ஜெயமோகன் ஆதரவாளரான போகன் சங்கரே சுட்டிக்காட்டியிருக்கிறார் . 

2. குடிகாரர்களாக, தாசிகளிடம் போவர்களாக இருப்பது குற்றமல்ல. அது தனி மனித உரிமை. குடித்து சீரழிவது ஒழுக்கம் சார்ந்த தனிப்பட்ட அவலம். சட்டப்பிரச்சனை அல்ல இது. 

3. ஒரு மனுசியோ மனிசனோ தன் வாழ்க்கைத்துணைக்கு விசுவாசமில்லாமல் சிலரோடோ பலரோடோ உறவு வைத்துக் கொள்வதும்(Adultery) ஒரு கிறிமினல் குற்றமல்ல. பாதிக்கப்பட்ட வாழ்க்கைத்துணை இதற்கெதிராக சிவில் வழக்கே நட்ட ஈடுகேட்டு தொடரமுடியும். தன் வாழ்க்கைத்துணையை சிறையில் அடைக்கச்சொல்லி வழக்கு தொடரமுடியாது. 


ஜெயமோகனின் கட்டுரையில் வெளிப்படுகிற இன்னொரு பண்பு தூய்மைவாதம்(Puritanism). ஒழுக்க சீலர்களாக இருப்பது. 

தூய்மைவாதம் உலகம் பூராகவும் பாசிஸ்டுகள் பிரச்சாரப்படுத்திய ஒரு வாதம். இதனை முன்னெடுத்த பாசிஸ்டுகள் தங்களுக்கு இதனை விதிவிலக்காகவே கொண்டார்கள். ஆனால் தாய் ஆளுகின்ற மக்களுக்கு இது இருக்கவேண்டுமாம். பாசிஸ்ட் கிட்லர் ஒரு பெண்பொறுக்கி அல்லர். பின் நாட்களில் அவர் மாமிசமில்லாத உணவுகளே 

உட்கொண்டவர். மது அருந்துவதையும் தவிர்த்தவர். 

இதுபோலவே ஜெயமோகனும் தன்னைக் கட்டமைக்கிறார். அவர் அருண்மொழி ஏகபத்தின விரதம் கொண்டவர். மது அருந்துவதில்லை. 


ஆனால் அவருடைய சீடர்கள் பலர், அவருடைய மகத்துவத்தை நித்தமும் நிலைக்க உழைக்கிற சீடர்கள் பலர் வரலாறு இதற்கு விதிவிலக்கு. என்னால் இதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். உண்மையில் தன்னுடைய மகளான சைதன்யாவை தன்னுடைய பெரும்பாலான சீடர்களுக்கு சம்பிரதாயத்துக்குக் கூட அறிமுகப்படுத்தும் பயம் ஆசானுக்கிருக்கிறது. ஆசான் உலகத்து ஒற்றர்கள் எல்லோரையும் விடத் திறமையான ஒற்றர். தன் சீடர்களின் புலனாய்வுக் கோப்புக்கள் அவர் அறிந்தவை. உண்மையைச் சொல்லப்போனால் பாசிஸ்டுகள் குற்ற வரலாறுடையவர்களையே தங்கள் வேலைக்கு அமர்த்துவார்கள். அவர்களுடைய குற்ற வரலாறுகளை பணயமாக வைத்து அவர்களைக் கட்டுப்படுத்தலாம் என்பதே இதற்குப் பின்னாலுள்ள தத்துவம். 

4  இப்போது கோணங்கி மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கிறிமினல் குற்றங்கள். இவை கோணங்கியின் தனிப்பட்ட பலவீனம் என்று உதாசீனம் செய்யப்படமுடியாதவை. ஆனால் இவையிரண்டும் ஒன்றே என்று திரிப்பதுதான் ஜெயமோகனின் மோசடி. 

தொடர்பான கட்டுரைகள்

1. ஜெயமோகன் எனக்கு எழுதிய கடதம்

2. ஒரு மூடன் கதை சொன்னான்


Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்