யாழ்ப்பாண Trendsetter குறும்படம்
By நட்சத்திரன் செவ்விந்தியன்
யாழ் நகரிலுள்ள மிக அழகான ஊர்கள் குருநகரும் பாசையூரும். யாழ் நகரின் மீன்பிடித்துறைமுகம் இங்குதான் அமைந்துள்ளது. அழகிய கலைச்சிற்பங்களான கத்தோலிக்க தேவாலயங்களின் இடம். பலமான உதைப்பந்தாட்ட கிளப்புக்களின் ஊர். சுருக்கமாகச் சொன்னால் இதுதான் யாழ்ப்பாணத்தின் வடசென்னை.
இன்றைய பின்நவீனத்துவ மேலை நாடுகளில் காதல் டேற்றிங்கிலிருந்து தொடங்கும். ஈழத்திலோ இந்தியாவிலோ அது மாதக்கணக்காக ஒரு பெண்ணை பின்தொடர்ந்து ஊருக்கே அறிவித்தபின் ஒரு Proposal செய்யும் சூதாட்டத்திலிருந்து தொடங்கும். ஏறத்தாள திமிங்கிலங்களும் சேவல்களும் குரங்குகளும் செய்யும் சடங்குதான். ஆனால் விலங்குகள் சில நாட்களில் செய்யும் சடங்கை யாழ்ப்பாண ஆண் வருடங்களாகச் செய்யவேண்டும்.
இக்குறும்படத்தில் காதலர்களின் டயலாக் அற்புதம்.
Proposal Jaffna version of Dating
ஸ்ரெல்லா ஒருக்கா நில்லு. உன்னோடை கதைக்கோணும்.
என்ன கதைக்கோணும்
ஏன் உனக்குத் தெரியாதோ
இல்லை
6 வருசமா உனக்குப் பின்னால திரியுறன். 3 வருசமா கேட்டுக்கொண்டிருக்கிறன். உனக்கு என்னில விருப்பமிருக்கா இல்லையா
இல்லை
அந்தோனியராணை?
(அந்தோனியர் மீது சத்தியம் செய்வதை தவிர்த்து காதலி மேலே நடக்கிறாள். பின்தொடரும் காதலன்
செய்யுற தொழில் ஆணையாகச் சொல்கிறேன். ஓமோ இல்லையோ எண்டுமட்டும் சொல்லு. அதுக்குப்பிறகு உனக்குப் பின்னால வரமாட்டன்.. எனக்கு இப்ப ஒரு முடிவு சொல்லு ஓமா இல்லையா?
இப்ப இல்லை
அப்ப என்னதான் சொல்லவாறாய்
உனக்கு இப்பவே முடிவு தெரியவேணுமோ
ஓம்
அப்ப இல்லை
குறும்படம் ஒரு ருவன்ரி ஓவர் கிரிக்கெட் போட்டி போன்றது. ஒரு கவிதையைப்போன்றது. அந்தக் கவிதை இந்த டயலாக்கில் சிறைப்பட்டிருக்கு. அதுதான் இன்றைய யாழ்ப்பாண காதலர்களுக்கு இப்படம் புடிச்சிருக்கு.
போருக்குப் பின்னைய காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து பல குறும்படங்கள் வந்தன. தேசியப்போராட்டத்தை பொருளாகக்கொண்டவையே பெரும்பாலானவை. இதுவே ஈழத்தமிழ் சினிமா என்று றெண்ட் ஆனதற்கு காரணமிருக்கிறது. எழுபதுகளில் வாடைக்காற்று முதலிய ஈழத்தமிழ் சினிமாக்கள் வந்தபின் எண்பதுகளில் போர் காரணமாக ஈழச்சினிமா வெளிவரவில்லை. பிறகு ஈழச்சினிமா என்று வெளிவந்தவை விடுதலைப்புலிகளால் இயக்கப்பட்ட போராட்ட பிரச்சாரச் சினிமாக்களே. பிரச்சாரச் சினிமாக்களாயினும் அவற்றின் அழகியலைக் குறைத்து மதிப்பிடமுடியாதவாறு வந்தன. போர் முடிந்தபின் அவ்வகைப்படங்களே ஈழத்தமிழ் சினிமாவின் றெண்ட் ஆனது. மதி சுதாவின் படங்கள் இவ்வடிட்படையானவை.
சாம் சூசைட் பண்ணப்போறான் படத்தின் இயக்குனர் ஜீவதர்சன் திரைப்படங்களை பார்ப்பதன் மூலமாக சினிமாவை சுயமாகக் கற்றுவந்தவர். போருக்குப்பின்னைய யாழ்ப்பாணத்தின் வடசென்னையான ஊரில் நடக்கும் சமகால எளிய காதல்கதை இனிவரவுள்ள ஈழ சினிமாக்களுக்கான ஒரு Trendsetter ஆகியுள்ளது.
அருளானந்தம் ஜீவதர்சன் Trendsetter postwar ஈழசினிமா
ஜீவதர்சன் எனக்கு அறிமுகமானது முகநூல் மூலமாகத்தான். ஒரு தடவை அவருடைய முகநால் பதிவுகளால் கவரப்பட்டு அவருடன் மெசன்ஜறில் கதைத்தேன். அவருடைய பதிவுகள் ரொம்ப Authentic ஆக இருந்தன. அவர் தமிழ் தேசிய வாதியுமல்ல. தமிழ் தேசியவாதத்திற்கு எதிரானவருமல்ல. இன்றைய யாழ் சமூகத்தை அச்சொட்டாக காய்தல் உவத்தல் இன்றி நடுநிலமையாக விமர்சிக்கின்ற சமூக விமர்சகராக இருந்தார். யாழ்ப்பாண வேள்விக்கிடாய் சடங்கு பற்றியும் சமகால வன்முறை பற்றியும் அவர் போட்ட முகநூல் மதிப்பீடுகள் அபாரம்.
அருளானந்தம் ஜீவதர்சனின் இயக்கத்தில் வந்த முதல் படம். குறும்படம். இது யாழ்ப்பாண தமிழை ஒழுங்காகக் கதைத்த “வீடியோ” என்பதால் மட்டுமே சமூக வலைத்தளத்தில் ஹிற் ஆனது என்று ஞானதாஸ் காசிநாதர் போட்ட முகநூல் பதிவில் உண்மையில்லை.
இன்றைய IBC மாட்டு மணியின் வீடியோக்களில் இருக்கிற யாழ்ப்பாத்தமிழின் பக்கா துல்லியம் இப்படத்தில் இல்லை. குறைபாடுகள் இருந்தாலும் ஒரு குறும்படத்தின் முழுமையான அம்சங்களை கருத்திலெடுக்கப்பட்டே இப்படம் வெற்றிபெற்றதாயிருக்கிறது. காசிநாதரின் மதிப்பீட்டுக்கு ஏற்கெனவே நியாயமான எதிர்ப்பதிவுகள் முகநூலில் வந்துள்ளன.
தொடர்பான கட்டுரைகள்
1. அருளானந்தம் ஜீவதர்சன் இயக்கவுள்ள முழுநீள திரைப்பிரதி: கனகிபுராணம்
2. வாடிவாசல், அசுரன், Funny boy : கலையும் வணிகமும்
3. இந்தியா நமக்களித்த அருங்கலையகம் : யாழ் கலாச்சார நிலையம்
Comments
Post a Comment