இசை வியாபாரி இளையராஜா

 


By Aravindan Kannaiyan

ராஜாவை இசை வியாபாரி என்பதற்கு அவர் இசையமைத்த ஆபாசப் பாடல்களே சாட்சி. என்பதுகளில் தமிழ் சினிமாவை பீடித்த நோய் காபரே நடனங்கள். சிலுக்கு, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஆகியோரை மறக்க முடியுமா. ஜானகியை வைத்து முக்கல் முனகலுக்கே புது அர்த்தம் கொடுத்தவர் ராஜா. அந்த முக்கல் முனகலைக் கூடத் தான் சொல்லிக் கொடுத்து தான் ஜானகி பாடினார் என்று அந்தப் பெருமைக் கூட அந்தப் பாடகிக்குக் கிடைத்துவிடக் கூடாதென்று தானே உரிமைக் கொண்டாடினார் ஞானி.

ராஜாவின் "மேதமை" என்று பேசும் போது நாம் அன்று யாரும் செய்யாததையா ராஜா செய்தார் என்று ஆராய வேண்டும். அப்படிப் பார்க்கும் போது இன்று அதிகம் பேசப்படும் ‘நாயகன்’ இசையை ‘காட்பாதர்’ இசையோடு (நாயகனுக்கு 13 வருடம் முன்பு வந்த காட்பாதர்) ஒப்பிட்டால் ராஜா ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது தெளிவு

ராஜாவின் ஸிம்பொனி🎹

 இளையராஜா இசையமைத்ததாகச் சொல்லப்படும் சிம்பொனியை கேட்டவர் விண்டிலர் விண்டவர் கேட்டிலர். தமிழகமே அல்லோல கல்லோலப் பட்டது இளையராஜா இங்கிலாந்து போய்ச் சிம்பொனி இசையமைத்தார் அதுவும் ராயல் பில்ஹார்மினிக்கால் அழைக்கப் பட்டு என்ற செய்தியால். 

அந்தச் சிம்பொனி இன்றுவரை வெளிவரவில்லை ஆனால் ஒரு பேட்டியில் எஸ்.பி.பி அது குறித்து மிகவும் வளைந்து, நெளிந்து, குழைந்து கேட்டார் ராஜாவிடம். தனக்குச் சிம்பொனி என்றால் என்னவென்று தெரியாது என்றும் அவ்வகை இசையின் சிறப்பு என்னவென்று விளக்குமாறும் கேட்டார். ராஜா சிம்பொனி பற்றி எளியக் குறிப்பைச் சொன்னார். சிம்பொனி இசையமைப்பதின் சவால் பல வாத்தியங்கள் ஒருங்கே இசைக்கப்படும் போது எப்படி ஒலிக்கும் என்று கற்பனையிலேயே அந்தச் சத்தத்தை உணர்ந்து எழுத வேண்டும் என்றார். 20 நிமிட இசையை எழுதுவதற்கு மிகவும் மெனெக்கட வேண்டியிருந்தது என்றார். 

பொதுவாகச் சிம்பொனி 60 நிமிடங்களுக்கு நீளும் நான்கு பாகங்களைக் கொண்டது. வெறும் செவிக்கு இனியதாக இருப்பதோ பற்பல வாத்தியங்களின் இசைவு மட்டுமல்ல சிம்பொனி. 20 நிமிடத்திற்கே நுரைத் தள்ளியது ராஜாவுக்கு. ஆபராக்கள் எனும் இசை நாடகங்கள், பாலே என்னும் இசை நாட்டியம், ஆகியவற்றின் இசை சில மணி நேரங்கள் நீள்வது. மொஸார்த்தின் 'Le Nozze de Figaro' 3.5 மணி நேரம் நீளம். சமீபத்தில் ராஜா ஒரு கச்சேரியில் சிம்பொனி இசையை நிகழ்த்தினார். 20-30 வயலின்களும் வேறு வாத்தியங்களும் ஏனோ தானோவென்று இரைச்சலாக ஒலித்தன. 

ஒரு காலத்தில் ராஜாவின் "மனிதா மனிதா" பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் வயலின் இசையை அமர்க்களம் என்று எண்ணியது உண்டு. இன்றோ அது இலக்கில்லாமல் ஏனோ தானோவென்று எழுதப் பட்ட சத்தமான ஒலியாகவே தோன்றுகிறது. வெறுமே உச்ச ஸ்தாயியில் 20-30 வாத்தியங்கள் முழங்கினால் எளிய செவியுணர்வுக்கு அது பிரம்மாண்டமாகத் தோன்றும் என்ற 'lowest common denominator' அப்ரோச் தான் அது. 

மெட்டுக்குப் பாட்டுப் போட்ட மாணிக்கவாசகரும் பாரதியும்🎤

இளையராஜாவின் 'திருவாசகம்' ஆல்பத்தை ராஜா பக்தர்கள் "ஆஹா இதோ எங்கள் ராஜாவும் சிம்பொனி எழுதிவிட்டார்" என்றார்கள். அது சிம்பொனி கிடையாதென்பது வேறு, மேற்கத்திய இசை மரபில் எழுதப்பட்ட தமிழ் திரையிசை அவ்வளவே. ஒரு நல்ல இசைக் கலைஞன் என்றால் பாடலுக்கு இசை அமைக்க வேண்டும் ஆனால் ராஜாவோ 'மெட்டுக்குப் பாட்டு' என்றே வாழ்க்கையை நடத்துபவர். தன் மனதில் தோன்றிய மெட்டுக்கு எந்தப் பாட்டு ஒத்து வரும் என்று யோசித்துப் பாட்டைத் தேர்ந்தெடுத்தார். 

ஷூபர்ட் இசையமைத்த 'விண்டரீஸ்' (Winterreise) எனும் இசைத் தொகுப்பு பற்றி ஒரு அற்புதமான புத்தகம் சமீபத்தில் வெளிவந்தது. அப்புத்தகம் பற்றி அறிய நேர்ந்த போது எனக்கு 'விண்டரீஸ்' பற்றித் தெரிய வந்தது. இலக்கியத்துக்கு இசையை ஆடையாக அணிவிப்பதென்றால் அது தான். அப்புத்தகத்தை எழுதியவர் இசைக் கலைஞர் பாஸ்ட்ரிஜ் (Bostridge). ஷூபர்ட் தேர்ந்தெடுத்த கவிதையை அதன் பின்புல ஜெர்மானிய கலாசார மரபு, என்ன வகையான இசை ஏன் அப்படி எழுதப்பட்டது என்றெல்லாம் விஸ்தாரமாக எழுதியுள்ளார். ஷூபர்ட்டுக்கு கொடுக்கும் மரியாதையை என்னால் எப்படி ராஜாவுக்குக் கொடுக்க முடியும்? 

தாகூரைப் பற்றிப் படமெடுத்து தாகூருக்குச் சினிமாப் பாடலாசிரியரை வைத்துப் பாட்டெழுதி தாகூரை வாயசைக்க வைத்திருந்தால் வங்காளம் கொதித்திருக்கும். பாவம் பாரதி தமிழனாகப் பிறந்துத் தொலைத்தான். இயக்குனர்களுக்கே எப்படிச் சிச்சுவேஷன் அமைக்க வேண்டும் எப்படி இசையைச் சேர்ப்பது என்றெல்லாம் ராஜாவே சொல்லித் தருவார் என்று புல்லரிக்க அவர் அடிப்பொடிகள் கூறுவார்கள். 'பாரதி' படத்தில் பாரதியாருக்கு மெட்டுக்குப் பாட்டுப் போட்டு பாரதியை அவமதித்தவர் ராஜா. 'அமடேயஸ்' படம் புணைவு என்றாலும் மொஸார்ட்டின் இசையை மட்டுமே வைத்து இசையமைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அந்த இசையமைப்பாளர் அப்படத்தை ஒத்துக் கொண்டார். 

கண்ணதாசனை அவமதித்த ராஜா👇

மிகச்சாதாரணமானப் பாடலைக் கூட நல்ல இசை மேன்மையுறச் செய்யும் என்ற அர்த்தம் தொனிக்கும் தமிழ்ப் பாடலை எந்தப் புண்ணியவானோ இசை மேன்மையாகத் தெரிய வேண்டுமென்றால் பாடல் சாதாரணமாகத் தன் இருக்க வேண்டும் என்று சொல்லித் தொலைத்து விட்டான். 

பல மேடைகளில் ராஜா கண்ணதாசனின் கவித்துவமான பாடல் வரிகளைப் பரிகசிப்பார். "தாமரை மலரில் மனதினை வைத்து தனியே காத்திருந்தேன்" என்ற வரிகளைப் பேசிக் காட்டி "கேட்பவர்களுக்கு இது புரியாது. அது என்ன தாமரை மலரில் மனதை வைப்பது, அது எப்படி" என்று இழுத்துப் பிறகு அந்த வரிகளைப் பாடிக் காண்பித்து இப்போது இசை எப்படிக் கவனத்தைத் திருப்பி அர்த்தமில்லாத வரிகளை அழகு செய்கிறது என்பார். கூட்டம் ஆர்ப்பரிக்கும். தமிழர்கள். நல்ல பாடல் என்பது திரை இசைக்கு அடி நாதம் என்பதை உணராமல் மெட்டுக்குப் பாட்டு எனும் பைத்தியக்காரத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டார் ராஜா. 

ரஹ்மானின் இசையால் ஈர்க்கப்பட்டு அவர் இசையமைத்த பாடல்களை வைத்துத் தோரணம் கட்டி நியு யார்க்கில் ஒரு இசை நாடகத்தை அரங்கேற்றினார் ஆண்ட்ரூ லாயிட் வெப்பர். ‘நியூ யார்க்கர்’ பத்திரிக்கை அம்முயற்சியைச் சாடியது, குறிப்பாகப் பாடல் வரிகளின் அசட்டுத்தனத்தை வைத்து, ‘ஷக்கலக்க பேபி’ என்றா பாடல் வைப்பது என்றது விமர்சனம். மொஸார்ட் தன் ஆபராவுக்குத் தேர்ந்த பாடலாசிரியன் தான் வேண்டுமென்று நினைத்து அதையே பௌமார்ச்சிஸ் (Beaumarchis) மூலம் சாதித்ததையும் நினைவுக் கூற வேண்டும். 

சமக் காலத்திய உதாரணம் வேண்டுமென்றால் இன்று அமெரிக்காவில் மிகப் புகழ் பெற்ற இசை நாடகமான “ஹாமில்டண்”-ஐ சொல்லலாம். அமெரிக்காவின் பிதாமகன்களில் ஒருவரான அலெக்ஸாண்டர் ஹாமில்டன் பற்றிய சரித்திரப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட இசை நாடகம். அந்நாடகத்தில் மற்றொரு சிறப்பு வெள்ளைக்கார ஹாமில்டனாக நடித்திருப்பவர் கறுப்பு இனத்தவர். ஒரு வாழ்க்கை சரித்திரப் புத்தகத்தை இசை நாடகமாக மாற்றி அதை மாபெரும் வெற்றியடையச் செய்தது மிகப் பெரிய சாதனை. இவர்களுக்குக் கொடுக்கும் மரியாதையை நான் எப்படி ராஜா, ரஹ்மான் ஆகியோருக்குக் கொடுப்பது? 

பாடல் என்பது இசைக்கு உயிர் நாடி அது தெரியாததோடல்லாமல் ஒரு சமூகத்தையே கவிதையின் முக்கியத்துவம் பற்றிப் புரிந்து கொள்ள முடியாத தற்குறிகளாக மாற்றியதில் ராஜாவுக்குப் பெரும் பங்குண்டு. 

இசை என்பது ஏமாற்று வேலை’🎵

இளையராஜாவைப் போல் ரசிகனையும் இசையயும் ஏமாற்றுபவர்கள் வேறு யாரும் கிடையாது எனலாம். மீண்டும் மீண்டும் பேட்டிகளில் அவர் ‘இசை என்பது ஏமாற்று வேலை’ என்று நேரிடையாகவோ அல்லது அந்த அர்த்தத்திலோ சொல்லியிருக்கிறார். 

எஸ்.பி.பி எடுத்த நேர்காணலில் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஒரு சிச்சுவேஷனுக்கு முதலில் மென்மையான மெலடியைப் போட்டதாகவும் அதை நிராகரித்த கமல் “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி அன்பேன்” போன்ற துள்ளல் இசை வேண்டுமென்று கேட்டார் என்றும் அதையே “புது மாப்பிள்ளைக்கு” என்று தான் போட்டுக் கொடுத்ததாகவும் சொல்லிவிட்டு “இது ஏமாற்று வேலையில்லாமல் வேறென்ன” என்று சொல்லி, உண்மையாகவே, வெள்ளெந்தியாகச் சிரிப்பார்.  "புது மாப்பிள்ளைக்கு' பாடல் ஒரு ஏமாற்று வேலை

ஒரு மேடை நிகழ்ச்சியில் கங்கை அமரன் அவர் கஷ்டப்பட்டு அமைத்த பாடல் பற்றிக் கேட்ட போது “புதிய உத்திகள் வேண்டுமானல் முயற்சி செய்து பார்க்கலாம். மியூஸிக்ல யாரும் புதுசுப் பண்ண முடியாது. ஏன்னா ‘ராகங்கள் பல கோடி எதுவும் புதிதில்லை’ந்னு நானே எழுதியிருக்கிறேன்” என்றார். 

பாக், மொஸார்ட், பீத்தோவனின் இசைப் பற்றி மிகப் பெரும்பாலான தமிழர்களைவிட, ஏன் மிகப் பெரும்பாலோரை விட என்றும் சொல்லலாம், ராஜாவுக்கு நுணுக்கமாகத் தெரியும். அவரால் விடிய விடிய அவர்கள் அமைத்த இசையின் விஸ்தாரங்கள் குறித்துத் தொழில் நுட்பம் குறித்துப் பேச முடியும். ஆனால் அவர் அந்தச் சிருஷ்டிகளின் படைப்பூக்கம் குறித்தோ அவற்றை ஒரு கலைப் படைப்பாகவோ பேசத் தெரியாது. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை வெறும் கணிதக் கூறுகளாகவும் உத்திகளாகவும் பேசலாம் அதுவும் ஒரு வகைப் புரிதல் ஆனால் அது முழுமையான புரிதல் அல்ல. ராஜாவுக்கு இசையின் தொழில் நுட்பங்கள் புரிந்தளவு இசை எனும் கலை வடிவத்தின் படைப்பு ஊற்றுக் கண் புரிந்ததா என்பது கேள்விக் குறியே? 

தமிழ் திரையிசை எனும் “lowest common denominator” வகையினருக்கே இசையமைத்து தன் தகுதிக்கு மீறிய அங்கீகாரம் அளிக்கப் படுகிறது என்பதைத் தன் உள்ளத்திலாவது உணர்பவர் தான் “சங்கீதம் என்பது ஏமாற்று வேலை” என்று சொல்லி சிரிக்க முடியும். 

இசையைப் பற்றிய அறிவார்ந்த புரிதல் நம் கல்வி முறையில் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை, கல்வி முறைக்கு வெளியேயோ சநாதன மரபில் சிக்குண்ட இசையயே பார்க்கிறோம். நமக்கு ஒரு பாப் மார்லியைப் புரிந்து கொள்ள மேலோட்டமாகத் தான் முடிகிறது. ராஜா ஒரு முறை, பாப் மார்லியைப் பற்றிக் கருத்துக் கேட்டதற்கு, “அரசியல் ஒரு சாக்கடை, எனக்கு அதில் இஷ்டமில்லை” என்று சொன்னதாக நினைவு. பாவம் சினிமாவுக்கு இசையமைத்த சித்தாளுக்குப் பாப் மார்லி இசை வெறும் அரசியலாகத் தெரிந்ததில் என்ன ஆச்சர்யம். 

தாரைத் தப்பட்டை’ - திரையிசை எனும் வியாபாரம்🥁

ராஜா, திரைத் துறையில் ஈடுபடும் பலரைப் போல், ஒரு வியாபாரி, அவ்வளவே. குடுத்த காசுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டுக் கல்லா கட்டுபவர். இதற்குச் சிறந்த உதாரணம் சமீபத்தில் வந்த ‘தாரைத் தப்பட்டை’ படம். 

தமிழகத்தில் நேர்ந்துள்ள சமூகச் சீரழிவின் முக்கிய அடையாளம் நாட்டார் கலை எனும் கரகாட்டம் சீரழந்து இன்று வெறும் ஆபாசம் என்னும் எல்லையைக் கூடக் கடந்து மிக மிக அருவருப்பான வன் புணர்வு நிகழ்வுகளாக மலிந்திருப்பது தான். யூட்யூபில் கரகாட்டம் என்று தேடிப் பாருங்கள். 

அந்தச் சீரழிந்த அருவருப்பையே பாலா கடைப் பரப்பினார் இசை ஞானியின் இசையின் துணையோடு. இசை எனது ஏமாற்று வேலை என்றும் நம்பும் வியாபாரி தான் அப்படியொரு படத்துக்கு இசையமைக்க முடியும். இதில் கேவலம் அது மட்டுமல்ல. அத்திரைப்படத்தின் பிண்ணனி இசைக்கு இவருக்கு தேசிய விருது ஏனெனில் இவர் தம்பி விருது குழுவின் உறுப்பினர். இவருக்குப் பிண்ணனி இசைக்கு விருது கொடுத்துவிட்டு வேறொருவருக்குப் பாடலுக்கான இசை வழங்கப்பட்டது. ராஜா, அவருக்கெ உரித்தான காலிப் பெருங்காய டப்பா அகங்காரத்துடன், பாடல் இசைக்கான விருதும் தனக்கே கொடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்றார். இவர் தம்பியே பிறகு குட்டை உடைத்தார் அப்படத்தின் முக்கியமான பாடல் ராஜா வழியிலான ‘ஏமாற்று’ என்பதை. இது தான் ராஜாவின் லட்சணம். 

டோலக்கும் வயலினும்’🎻

“ராஜாவா ரஹ்மானா” என்ற பிரபலமான கேள்விக்கும் குமுதம் பத்திரிக்கையின் கேள்வி-பதில் பகுதியில் “இந்திப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த தமிழர்களைத் தமிழ்ப் பாட்டு கேட்க வைத்தவர் ராஜா, இந்திக்காரர்களையும் தமிழ் பாட்டுக் கேட்க வைத்தவர் ரஹ்மான்” என்று பதில் கொடுத்தது. 👌 துல்லியமான பதில். 

1960-70 தமிழ் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரிடமும் படித்தவர்களிடையேயும் ஹாலிவுட்டின் மியூஸிக்கல் படங்கள், மேற்கத்திய இசைக் குழுக்களின் ரெக்கார்ட்ஸ், ஷம்மி கபூரின் யாஹூ வகைப் பாடல்கள் பிரபலம். தமிழ் சினிமாவில் ஸ்தூல உருவங்களோடு மிகத் திராபையான செட்டிங்குகளோடு சாதாரண இசையைப் பிண்ணனியாகக் கொண்டு படங்கள் வெளிவந்த போது இந்திப் படங்களில் ஷம்மி கபூரும் ஷர்மிளா டாகூரும் அவர்கள் இசையும் பணக்காரத்தனமான படப்பிடிப்புகளும் பிரபலம். 

ஆனால் அரசியல் தளத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் சமூகத்தை மெல்ல மெல்ல மாற்றின. இந்திப் படங்களின் மோகம் குறைந்தது. மேற்கத்திய இசைப் பற்றிய அறிதல் அருகியது. சரியான தருணத்தில் ராஜா தமிழ்த் திரை இசையில் காலடி வைத்தார். 

ராஜாவைக் குறித்துப் பிரம்மிக்கச் சில விஷயங்களுண்டு. இசைப் பாரம்பர்யமே இல்லாத ஏழைக் குடும்பத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்தவருக்குள் எப்படி இப்படியொரு கணல் கொழுந்து விட்டது. எம்.எஸ்.விக்கு மேற்கத்திய இசைப் பரிச்சயமில்லை. அவர் குழுவில் சேர வாய்ப்பிருந்தும் ராஜா ரிஸ்க் எடுத்து மேற்கத்திய இசை அறிந்த ஆனால் அவ்வளவு பிரபலமில்லாத தன்ராஜ் மாஸ்டரிடம் பயின்றதோடல்லாமல் மேற்கத்திய செவ்வியல் இசைக்கான ட்ரினிட்டி பல்கலையின் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றார் எனப் படித்த ஞாபகம். 

கே.வி.எம், எம்.எஸ்.வி ஆகியோருக்குப் பி.ஜி.எம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் கொஞ்சமாவது பி.ஜி.எம் குறித்துப் பிரக்ஞையோடு இசையமைத்தவர் ராஜா. தமிழ் திரையிசையை அதன் அடுத்தத் தளத்திற்குக் கொண்டு சென்று தமிழ் திரையிசை வரலாற்றில் கே.வி.எம், எம்.எஸ்.வி என்றொரு வரிசையில் தன் பெயரையும் பொறித்துக் கொண்டார் ராஜா. அது தான் அவருக்கு இன்றும் இசையில் இருக்கும் இடம். 

ராஜாவின் மேதமை என்று பேசும் போது நாம் அன்று யாரும் செய்யாததையா ராஜா செய்தார் என்று ஆராய வேண்டும். அப்படிப் பார்க்கும் போது இன்று அதிகம் பேசப்படும் ‘நாயகன்’ இசையை ‘காட்பாதர்’ இசையோடு (நாயகனுக்கு 13 வருடம் முன்பு வந்த காட்பாதர்) ஒப்பிட்டால் ராஜா ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது தெளிவு. 

இந்தியாவை விட்டு அமெரிக்கா வந்த பிறகு என் அறிதலின் எல்லைகள் விஸ்தீரித்தன. விலையுயர்ந்த ஆடியோ சிஸ்டத்தில் இன்று ராஜாவின் பாட்லகளைக் கேட்டால் அன்று சாதாரண 2-in-1-இல் கேட்டதை விட நல்ல அனுபவங்களாகத் தெரிகிறது. அதே சமயம் எண்பதுகளின் மத்தியில் ஆரம்பித்து அவரின் பல பாடல்களில் ப்ரீலூட் (prelude) இண்டர்லூட் (interlude) தவிரப் பெரும்பாலும் டோலக்கோ தபலாவோ பாட்டின் தாள கதிக்கு ஏற்ப ஒலிப்பது எரிச்சல் தர ஆரம்பித்தது. ஒரு பாட்டிற்கான இசை என்பது துணுக்கு துணுக்காக நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவது மடமை. இசை என்பது முழுமையான அனுபவம். பாடல் வரிகளும் இசையும் ஒரு முழுமையான அனுபவத்தைத் தர வேண்டும். அது மிக, மிக அரிதாகாவே ராஜாவின் பாடல்களில் கிடைக்கிறது எனக்கு. பெரும்பாலும் அற்புதமாக ஆரம்பிக்கும் பிரீலூட் தடக்கென்று பாட்டினுள் வழுக்கிச் சென்று டோலக்கில் முடியும்.

சமீபத்தில் பி.பி.சி.க்குக் கொடுத்த பேட்டியில் எண்பதுகளில் வந்த இசை பெரும்பாலும் ‘டோலக்கும் வயலினும் தான்’ என்று ரஹ்மான் பேசியதைக் கண்டபோது ‘யுரேகா’ என்று கத்தத் தோன்றியது. 

ராஜாவின் பக்தர்களுக்கு ரஹ்மான் பெயர் ஒவ்வாமைத் தரும். எம்.எஸ்.வி காலத்தில் இருந்து ராஜா எப்படி அடுத்தப் படியோ அப்படியே ராஜாவின் காலத்தில் இருந்து ரஹ்மான் அடுத்தப் படி. ராஜா பாடலின் ஒலியின் தரத்தில் கவனம் செலுத்தியதேயில்லை ரஹ்மானோ அதில் அதீத கவனம் செலுத்துகிறார் அதனாலேயே ராஜாவின் விசிறிகள் ரஹ்மானை சவுண்ட் இஞ்சீனியர் என்று பகடி செய்வார்கள். தவறு. சுருங்கச் சொன்னால் ராஜா எப்படி எம்.எஸ்.விக் கற்றுக் கொள்ள முனையாத மேற்கத்திய செவ்வியல் இசையைக் கற்றுத் தமிழ் திரையிசையில் ஒரு புதிய பாதைய துவக்கினாரோ அது போல் ரஹ்மான் ராஜா கற்றுக் கொள்ள விரும்பாத சமகால உலக இசை மரபுகளைக் கற்று அதைத் திரையிசையோடு பிணைத்து இன்னொரு யுகத்திற்கு அடிக்கோலினார். 'ராசாளி' போன்ற ஒருப் பாடலை ராஜாவால் கொடுக்க முடியாது.

ராஜாவை இசை வியாபாரி என்பதற்கு அவர் இசையமைத்த ஆபாசப் பாடல்களே சாட்சி. என்பதுகளில் தமிழ் சினிமாவை பீடித்த நோய் காபரே நடனங்கள். சிலுக்கு, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஆகியோரை மறக்க முடியுமா. ஜானகியை வைத்து முக்கல் முனகலுக்கே புது அர்த்தம் கொடுத்தவர் ராஜா. அந்த முக்கல் முனகலைக் கூடத் தான் சொல்லிக் கொடுத்து தான் ஜானகி பாடினார் என்று அந்தப் பெருமைக் கூட அந்தப் பாடகிக்குக் கிடைத்துவிடக் கூடாதென்று தானே உரிமைக் கொண்டாடினார் ஞானி. 

ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர் வாங்கிய போது “ஆ அது வெறும் இந்தியப் படத்துக்குக் கிடைத்த அங்கீகாரம். அதில் இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது’ என்று ராஜா கும்பல் வயிறு எரிந்து சொன்னது. ‘127 hours’ திரைப்படம் முற்றிலும் இந்தியச் சூழலே இல்லாத படம் அதற்கும் ஆஸ்கர் பரிந்துரைக் கிடைத்தது ரஹ்மானுக்கு. 

American Hustle’ போன்ற ஒரு சாதரணப் படத்தில் எத்தனையோ இசை மரபுகள் இடம் பெறுகிறது ஆனால் ராஜா போன்ற உலக இசை மரபுகளின் பரிச்சயம் இல்லாத ஒருவரை அது போன்ற படங்களுக்கு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவருக்குப் பரிச்சயமில்லை என்று நான் சொல்வது அவரது பேட்டிகளையும் அவர் இசை அமைத்ததையும் வைத்தே அவருக்குத் தனிப்பட்ட முறையில் என்ன தெரியும் தெரியாதென்பதை நானறியேன். 

ரஹ்மானுக்கும் எல்லைகள் உண்டு. சங்கர், மணிரத்னம் என்ற கும்பலில் உழன்று கொண்டிருக்கும் போது ‘ஹாமில்டன்’ போன்ற ஒரு மாபெரும் இசை நிகழ்வை அவரால் எழுதி விட முடியாது. ரஹ்மானுக்கு, ராஜாவைப் போன்றே, திரை இசை என்பதைத் தாண்டி வரலாற்றில் இடம் கிடையாது. என்ன ஒன்று ராஜாவைப் போலல்லாது கொஞ்சமாவது சர்வதேசத் தரத்தை எட்டிப் பிடித்தார் ரஹ்மான். 

கௌதம் மேனன் ராஜா, ரஹ்மான் இருவரின் இசையை வைத்தும் படம் எடுத்தார். ரஹ்மானின் இசையின் தரத்தின் முன் 80-களில் உறைந்து விட்ட இசையையே மீண்டும், புளித்த மாவிலே தோசைச் சுடுவது போல், கொடுத்தார் ராஜா. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ இசையின் முன் ‘நீ தானே எந்தன் பொன் வசந்தம்’ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பித்தது. 

ரஹ்மான் என்னை எரிச்சல் படுத்தும் தருணமும் உண்டு. ‘ரிதம்’ படத்தில் பஞ்ச பூதங்களுக்காக எழுதப் பட்டப் பாடல்களில் ஒன்றில் வடகத்திய பாடகர் “ள”கரத்தைக் கொலைச் செய்து லகரமாக உச்சரிப்பது நாராசம். மீண்டும் சொல்கிறேன் பாடலும், இசையும் ஒருங்கே ஒர் நல்லனுபவத்தைக் கொடுப்பது தான் முழுமையான படைப்பு. 

நான் ஏன் ராஜா, ரஹ்மான் கச்சேரிகளுக்குச் செல்வதில்லை: நான் பொதுவாகக் கும்பல்கள் கூடிக் கூச்சலிடும் இடங்களுக்குச் செல்ல விருப்பம் இல்லாதவன். அது பியான்ஸே நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி ராஜ, ரஹ்மான் கச்சேரிகளாக இருந்தாலும் சரி. முதலில் நாம் இசை நிகழ்வுகளை ஏன் நேரில் காண வேண்டும்? “Who needs Classical Music” என்ற அற்புதமான புத்தகத்தில் நாம் இசைத் தட்டுகளில் இசையைக் கேட்டு ரசிப்பதற்கும் நேரில் காண்பதும் வெவ்வேறு அனுபவங்களையும் அவ்வனுபவங்களின் வேற்றுமையே வெவ்வேறு புரிதலையும் தரும் என ஆசிரியர் சொன்னது எனக்கு ஒரு திறப்பைக் கொடுத்தது.

சிம்பொனியை இசைத் தகட்டில் கேட்பதற்கும் நேரில் காண்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு. அதே போல் ஆபரா. ஆனால் ஒரு பாப் நிகழ்ச்சி கொண்ட்டாட்ட மன நிலயை முன்னிறுத்தி கூட்டுக் களியை நம்பி நடத்தப்படும் அலங்காரம். அங்கே இசை பிரதானமல்ல. 

இசை நமக்கு அப்பாடல்களை முதலில் கேட்டப் போது உண்டான உணர்வை மீள் உருவாக்கம் தந்து நம்மை அந்த அனுபவத்தின் சூழலுக்கு மீண்டும் அழைத்துச் செல்லும். “அடி நீ தானா அந்தக் குயில்” எனும் வரிகளின் போது சிவாஜியின் முகமலர்ச்சி எனக்கு அந்த வரிகளைக் கேட்கும் போதெல்லாம் மனக் கண்ணில் விரியும். கூடவே அதை ரசித்த அந்தப் பால்யக் காலம். ‘நேத்து ராத்திரி யம்மா’ என்று கேட்கும் போதெல்லாம் சிலுக்கு நினைவுக்கு வராதவர்கள் 80-களில் தங்கள் விடலைப் பருவத்தைக் கழிக்காதவர்கள்.

பியான்ஸே நூறு மில்லியன் அமெரிக்கர்கள் கண்டு களிக்கும் சூப்பர் பௌல் எனும் நிகழ்ச்சியின் இடைவேளையில் மிகவும் பாரட்டப்பட்ட நடன நிகழ்வை அரங்கேற்றினார். அந்த இடைவேளையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு டாலர் சம்பளம் கிடையாது வெறும் கௌரவம் தான். ஆனால் சிறு பிசிறு நடந்திருந்தாலும் பியான்ஸே இகழப்பட்டிருப்பார். ராஜா கொடுத்து வைத்தவர். பல நூறு டாலர்கள் பணம் கொடுத்துக் கண் மூடித்தனமாக ரசிக்கும் கும்பலுக்கு முன் தப்பும் தவறுமாக இசைக்கும் குழுவினரைக் கடிந்து அதற்காகக் கைத் தட்டலும் வாங்கித் தனக்கு அந்தத் தவறுகளில் எந்தப் பொறுப்புமே இல்லாதது போல் ஞானியாகப் பரிமளிப்பார். 

ராஜாவின் மேடை நிகழ்ச்சிகளுக்குச் சென்று அங்கேயிருந்து ஒவ்வொரு பாடலுக்கும் இதில் தாளம் தப்பியது, அதில் ராகம் பிசிறு என்று கமெண்ட் போட்டு விட்டுக் கடைசியாக இப்படியான நிகழ்வை நேரில் கண்டது தங்கள் பூர்வ ஜென்மப் புண்ணியம் என்று உருகுபவர்களை நேரில் காண எனக்கு ஆசை. 

ரஹ்மானின் நிகழ்வு ஒன்றை, திரைப் பாடல் நிகழ்ச்சி, விமர்சணம் (Review) செய்த நியூ யார்க் டைம்ஸ் விமர்சகர் நிகழ்ச்சி நேர்த்தியாகப் பிசிறில்லாமல் நடந்ததாக எழுதினார். நல்ல வேளை அவர் ராஜா நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை இல்லையென்றால் தமிழ் நாட்டின் மானம் கப்பலேறி இருக்கும். 

எனக்கு ரஹ்மான் மேடை நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில் பிரியமில்லை. ரஹ்மான் நிகழ்ச்சிகளில் அவர் தமிழ் பாடல்களை இசைக்கும் போது இந்திக் காரர்கள், டிக்கெட் வாங்க்யோரில் பெரும்பான்மை, ஓ என்று இரைச்சலிட பின் இந்திப் பாடல்கள் இசைக்கும் போது நம் தமிழ் சிங்கங்கள் பதிலுக்குக் கூச்சலிட நிகழ்ச்சியே அலங்கோலமானது 2000-இல். அதன் பிறகு இப்போதெல்லாம் ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளுக்கான விளம்பரத்திலேயே “மிகக் குறைந்த அளவே தமிழ் பாடல்கள்” இருக்கும் என்று சொல்கிறார்கள். யூட்யூபில் நான் நினத்த நேரத்தில் நிம்மதியாக என்னால் கண்டு களிக்க முடிவதை நான் ஏன் இந்தக் கும்பலோடு ரசிக்க வேண்டும்? 

மேலும் ராஜாவுக்கு மேடை நாகரீகம் சற்றும் கிடையாது. சமீபத்திய நிகழ்ச்சியில் ஒரு வாத்திய கலைஞரை பல்லாயிரக் கணக்கானோர் முன்பு “அறிவிருக்கா” என்று இகழ்ந்தார். இது அநாகரீகம். இசைக் குழுவின் பொறுப்பு ராஜாவுடையது. சரியான அளவு ஒத்திகை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கலைஞர் தவறே செய்திருந்தாலும் அக்குழுவின் தலைவராகத் தானே பொறுப்பேற்றுச் சபையோரிடம் மன்னிப்புக் கோர வேண்டியது ராஜா. கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் சினிமாவுக்குப் போன சித்தாளெல்லாம் ரசிகனாகக் கிடைத்ததால் தான் ராஜாவால் இப்படியொரு அநாகரீகச் செயலை செய்ய முடிந்தது. 

இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு பெண் பாடகியை ஒருமையில் அழைத்து மேடையிலேயே ஒரு பாடலுக்கு ஒத்திகை நடத்தினார் அப்பெண்ணுக்கு அப்பாடலைப் பாடத் தெரியுமா என்று. மார்க்கெட் இழந்து வேலை வெட்டியில்லாத இசை ஞானி இன்னும் நூறு நிகழ்ச்சி நடத்தினாலும் இந்தத் தரத்தில் தான் நடத்துவார் ஏனென்றால் அது தான் அவரின் தரம். 

ரஜினி, கமல், ராஜா, எஸ்.பி.பி - ஓரு வாக்குமூலம்✍

நான் சாதாரணன். நான் ஒன்றும் காலையில் எழுந்தவுடன் பீத்தோவனைக் கேட்டு, மதியத்தில் ஷேக்ஸ்பியர் படித்து, மாலையில் பாப் டிலனில் கரைந்து, இரவு ரவி ஷங்கரோடு கழிப்பவன் அல்ல. சராசரி வாழ்க்கை தான் என்னுடையது. ஆனால் சராசரிக்கும் மகோன்னதத்துக்கும் வித்தியாசம் அறிந்து ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் வைத்து விடுபவன். ரஜினி, கமல், ராஜா, எஸ்.பி.பி என் வளர் பருவத்தின் முக்கியப் பகுதிகள். இன்று முதுமையை நோக்கி நகரும் அவர்கள் வாழ்வில் நிகழும் தொழில் முறைத் தோல்விகள், பொருளாதார் இடர், உடல் நலக் குறைவு ஆகியன பற்றிக் கேள்விப்படும் போது மனம் ஒரு நிமிடமாவது அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று நினைக்கும். ஆனால் இன்று என் கலா ரசனைக்கு எதையும் கொடுத்து விட முடியாத வறிய நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் தலைச் சிறந்த பாடகர் சிம்பொனி பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லும் போது இவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட கிணற்றுத் தவளைகள் என்று புரிகிறது. 

பாலகுமாரனின் ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலைக் கடந்து இன்று வெகு தூரம் பயணித்து விட்டாலும் இன்றும் அந்த நாவலைப் படிக்கும் போது துள்ளித் திரிந்த அக்கால நினைவுகள் வந்து மனதை நிறைத்து அவரைக் கனிவோடு நோக்க வைக்கும். அத்தகைய உணர்வு எனக்கு எப்போதும் ராஜா பற்றியும் உண்டு. 

ராஜாவுக்குக் கொடுக்கும் மரியாதையை யாரும் தேவா, ஹம்ஸலேகா, மரகதமணி, ஜீ.வி. பிரகாஷ் ஆகியோருக்கு யாரும் கொடுப்பதில்லை. ராஜா ரசிகர்கள் ரஹ்மான் குறித்து மனத்தாங்கல் கொள்வது ஏனென்றால் அவர் ஒதுக்க முடியாமல் வளர்ந்துவிட்டவர் என்பதால். தரப்படுத்தல் ஏன் என்றும் கேட்கும் ராஜா ரசிகர்கள் தர வரிசையில் ராஜா முதலில் நிற்பதாக நினைப்பதால் தானே அவரைத் தொழுகிறார்கள்? அத்தரப்படுத்தலைத் தான் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். 

“ராஜாவையும் ரசிப்பேன், தியாகைய்யரின் கீர்த்தனையில் லயிப்பேன், பீத்தோவானை அறிந்துக் கொள்வேன்” என்பதில் தவறே கிடையாது ஆனால் பத்து, பத்து விநாடி பியூக் இசைக் கொடுத்தவரை பாக் என்று உருகும் போது தான் உங்கள் தரப்படுத்தல் கேள்விக்குள்ளாகிறது. 

நம் சமூகத்தினரோடு எனக்கு இருக்கும் ஆகப் பெரிய பிணக்குச் சாதாரணத்தைக் கொண்டாடுவதும் அதைச் சாதாரணம் என்று அடையாளம் காட்டினால் அதனால் வரும் எரிச்சலும் தான். 

‘பாரீஸுக்குப் போ’ சாரங்கன் சொல்வான்: “சினிமாப் பார்க்கும் பழக்கத்தால் அத்துடன் சேர்ந்து உங்களுக்கு வழங்கப்பட்ட அந்தச் சங்கீதம், மீண்டும் இசைத் தட்டுகளிலோ ரேடியோவிலோ உங்கள் காதில் படும் பொழுது உங்கள் ரசனையில் ஒரு சினிமா சூழ்நிலையை உருவாக்குவதால் இந்தச் சங்கீதம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது…அவ்வளவு தான். இண்தியாவின் தேசிய சங்கீதமே இந்தச் சினிமா சங்கீதம் என்று தயவு செய்து உங்கள் முகத்திலேயே நீங்கள் காறித் துப்பிக் கொள்ள வேண்டாம்….நீங்கள் சொல்லும் சினிமா சங்கீதம் ஓர் ‘இசைச் சோரமே’. அமெரிக்காவில் குடியேறியத் தமிழர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்று தான். விதி வசத்தாலோ உங்கள் திறமையாலோ இன்று வேறொரு உலகில் இருக்கிறீர்கள் கொஞ்சம் உங்கள் அறிவை விசாலப்படுத்துங்கள், அதற்கான் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. ராஜாவை ரசிப்பதில் தவறில்லை ஆனால் அவரே நம் பண்பாட்டின் உச்சம் என்றும் நம் கலாசாரத்தின் பிரதிநிதியென்றும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். 

ராஸ்டிரபோவிச் எனும் இசைக் கலைஞன்🎻

ராஸ்டிரபோவிச் ஒரு ருஷ்ய இசை மேதை. செல்லோ எனும் வாத்தியத்தை இசைப்பதில் உலகப் புகழ் பெற்றவர். பெர்லின் சுவர் வீழ்ந்த போது அந்தச் சுவர் இடிக்கப்படும் தருணத்தில் அங்கே அமர்ந்து பாக் இயற்றிய செல்லோ இசையை வாசிக்க ஆரம்பித்து ஓர் வரலாற்றுத் தருணத்தில் நூற்றாண்டுகளுக்கு முன் இறந்த ஜெர்மானிய மேதையின் இசை எப்படி ஒரு கலையின் உச்சம் என்று காண்பித்தார். 

1991-இல் கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவை மீண்டும் கைப்பிடித்தப் போது அங்கேப் போராட்டம் வெடித்தது. ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படும் தருணத்தில் ராஸ்டிரபோவிச் உயிரைப் பணயம் வைத்து மாஸ்கோ வந்தடைந்து தெருவில் போராடும் மக்களோடு ஐக்கியமானார். இசையை மானுடத்தின் மிக உயரியக் கலையாக பாவித்த ஓர் கலைஞனே அப்படிச் செய்ய முடியும். இசையை ஓர் கலையாக பாவிக்கும் சமூகத்தில் தான் அப்படியொருக் கலைஞன் சமூகத்தின் ஆன்மாவாகவும் இருக்க முடியும். 

ராஸ்டிரபோவிச்சுக்குக் கொடுக்கும் மரியாதையை நான் எந்நாளும் இளையராஜா எனும் இசை வியாபாரிக்குக் கொடுக்க முடியாது.

இந்த மகத்தான கட்டுரை இணைப்பு. முழுமையாக இசை வீடியோக்களுடன் உண்டு 

தொடர்பான கட்டுரைகள்

1. மேதகு பட விமர்சனம்

2. ஈழப்போரின் இறுதிக் காட்சிகள்: கள நிலவரம்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்