ஈழத்தின் வலி: "பிரபாகரனின் வைத்தியரின்" 4ம் ஈழயுத்தம் பற்றிய மகத்தான நூல்

" அப்பாவுக்கு ஒன்று நடந்தால் உங்களை சும்மா விடமாட்டேன்"                                                                                    - பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி                             மருத்துவருக்கு மிரட்டல்



By நட்சத்திரன் செவ்விந்தியன் 

பிரபாகரனின் மரணத்துடன் புலிகளின் உறுப்பினர்கள் புலிகளின் உள்வீட்டு  ரகஸியங்களை எழுதும் உரிமை கிடைக்கிறது.  முதலில் வந்த  புத்தகம் புலிகளின் முதல் "நிதியமைச்சர்" கணேசன் ஐயர்(2010) எழுதியது. இரண்டாவது புத்தகம் புலிகளின் மருத்துவர்களில் ஒருவரும் புலிகளின் முன்னணி புலனாய்வுத் தளபதிகளில் ஒருவரானவரின்['கேணல்' கண்ணப்பன்    (மகேஸ்வரன் விஜயகாந், முல்லைத்தீவு)] சகோதரருமான பேராசிரியர் உமாகாந் எழுதிய ஈழத்தின் வலி(2014). மூன்றாவது புத்தகம் புலிகளின் பெண்புலித் தளபதி தமிழினி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில்(2015).





 இம்மூன்று நூலாசிரியர்களும்  தமக்குத்தெரிந்த உண்மைகளை மிக நேர்மையாக காய்தல் உவத்தல் இன்றி தம் அறிவு, அறம் சார்ந்து பேசியதால் இம்மூன்று நூல்களும் மகத்தான நூல்களே. 

கணேசன் ஐயரின் புத்தகம் அவர் புலிகளின் உறுப்பினராக இருந்த 1975 - 1980 வரையான ஆரம்பகாலத்தைப் பற்றிய மகத்தான வரலாறு.  தமிழினியின் புத்தகம் 2ம் ஈழ யுத்தத்திலிருந்து முள்ளிவாய்க்கால் யுத்தம் வரையான அவரது தன்வரலாறு. 

ஆனால்  பாசிச புலி ஆதரவாளர்களை கடுமையாக காயப்படுத்திய புத்தகம் மருத்துவப் பேராசிரியர் மகேஸ்வரன் உமாகாந்தின் ஈழத்தின் வலி. அதற்கு காரணம் ஈழத்தின் வலி மாவிலாறிலிருந்து  முள்ளிவாய்க்கால் வரையான 4ம் ஈழ யுத்தத்தைப்பற்றி, இறுதி யுத்தத்தைப்பற்றிக் காய்தல் உவத்தல் இன்றிப் பேசிய பகுப்பாய்வு நூல். 

கிட்லரின் நாசிப்படைகள் தோற்கடிக்கப்பட்டபின் நாசிகளின் உள்வீட்டு ரகஸியங்களை முதலில் வெளிப்படுத்தி வந்த நூல் Inside the Third Reich. கிட்லரின் கட்டடக்கலைஞரும்  கிட்லர் அரசாங்க அமைச்சராகவும் இருந்த Albert Speer எழுதியது.  அவர் இருபது ஆண்டுகள் போர்க்குற்றங்களுக்காக சிறையில் இருந்து விட்டு வந்து எழுதிய புத்தகம். 





புலிகள் தோற்கடிக்கபட்டபின் மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான 4ம் ஈழயுத்தத்தில் புலிகளின் இறுதிக்கால உள்வீட்டு ரகஸியங்களை முதலில் வெளிப்படுத்தி வந்த புத்தகம் ஈழத்தின் வலி.   20 மாதங்கள் பயங்கரவாத குற்றங்களுக்காக சிறையில் இருந்துவிட்டு வந்த "பிரபாகரனின் மருத்துவர்" எழுதியது.

 


கிட்லரின்  கட்டடக்கலைஞர் அல்பேட் ஸ்பியருக்கும் " பிரபாகரனின் மருத்துவர்"  உமாகாந்துக்குமிடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன.  


"பிரபாகரனின் மருத்துவரும்" கிட்லரின் கட்டடக்கலைஞரும். 20 ஆண்டுப் புனர்வாழ்வை விட ஸ்ரீலங்காவின் 20 மாதப் புனர்வாழ்வு மேல்

 
அல்பேட் ஸ்பியர் 1931ல் நாசிக்கட்சியில் இணைந்து போரின் உச்சத்தில் நாசி அரசாங்க அமைச்சராகி நாசிப் பாஸிசத்தின் தூண்களில் ஒன்றாக இருந்தவர். பேராசிரியர் உமாகாந் சந்தர்ப்ப வசத்தால் புலிகளின் அனுதாபியாகி புலிகளுக்க்காக வேலை செய்தவர். புனர்வாழ்வின் பின்னரும் அல்பேட் ஸ்பியர் யூத இனவழிப்பைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பச்சைப்பொய் சொன்னவர். பேராசிரியர் உமாகாந் தனக்குத் தெரிந்த உண்மைகளைப் பச்சையாகப் போட்டு உடைத்தவர்.  யுத்தம் முடிந்தபின் கைது செய்யப்பட்ட உமாகாந் 20 மாதங்கள் தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்து எழுதிய புத்தகம் ஈழத்தின் வலி. விடுதலையின் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை விரிவுரையாளராக இணைந்து இப்போது அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகியுள்ளார். 

ஈழத்தின் வலி தவறுகளே இல்லாத முடிந்த முடிபான உண்மைகளை எழுதிய புத்தகமல்ல. எந்த விஞ்ஞானமுமே முடிந்த முடிபான "உண்மைகளைப்" பேசுவதில்லை. இயற்கை விஞ்ஞானமோ சமூக விஞ்ஞானமோ எந்த விஞ்ஞானமோ சுட்டிக் காட்டப்படும் தவறுகளை ஆய்ந்து, பரிசீலித்து/மெய்ப்பு பார்த்து தொடர்ந்து "உண்மை'" கண்டறியும் தொடர் பயிற்சியில் ஈடுபடுவது. விஞ்ஞானத்தின் செல்நெறியே  அதுதான். 

புலிகளின் வரலாற்று ஆவணமான மகத்தான இந்நூல் ஈழத்தில் மட்டும் இரண்டு பதிப்புக்களாக ஆயிரத்திற்கும் குறைவான பிரதிகளே அச்சாகின. இதனால் இந்நூல் தமிழ்நாட்டுக்கும் சென்று சேரவும் இல்லை. நியாயமாகக் கிடைத்திருக்கவேண்டிய கவனத்தையும் பெறவில்லை.  நூலாசிரியரான  பேராசிரியர் உமாகாந் இப்போது தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆங்கிலத்திலும் இதனை வெளியிட உள்ளார். 

"உண்மையைப்"  பேசும் விஞ்ஞானத்தின் பாதை வேறு. இலாபத்தை பதிப்பகசெல்வாக்கை வைத்து  இயங்கும் தமிழ் உலகப் பதிப்பகங்களின் பாதை வேறு.  தமிழினியுடைய புத்தகம் புலிகள் மீதான மென்போக்கான விமர்சனத்தையே வைத்தது. (இருந்தும் கண்மூடித்தனமான புலி ஆதரவாளர்கள் இந்நூல் பற்றிய அவதூறுகளை வதந்திகளாகப் பரப்பினர்) எனவே இதனை இன்றைய தமிழ்நாட்டின் மிகச் செல்வாக்கும் பலமும் திறமையான சந்தைப்படுத்தும் வசதிகளையும் கொண்ட காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. காலச்சுவட்டின் இம்முயற்சி துணிகரமானதுதான். சென்னை புத்தகத்திருவிழாவில் அதிகளவில் விலைப்பட்ட புத்தகமுமானது.  போட்டி காரணமாக வேறு தமிழக பதிப்பகங்களும் இதனை வெளியிட்டன. 





2011ல் சிறிய தமிழகப் பதிப்பகம் ஒன்றால் கணேசன் ஐயரின் நூல் வெளியிடப்பட்டது. குறைவான பிரதிகளே அச்சாகின. குறிப்பாக ஈழத்துக்கு இந்நூல் பிரதிகள் போய்ச்சேரவில்லை. ஐயரின் நூலும் பேராசிரியர் உமாகாந்தின் நூலும் தமிழினியின் நூலைப்போலன்றி புலிகளின் வரலாற்றை மிகத்திறமையாகப் பகுத்தாராய்ந்து புலிகள் பற்றிய தீவிரமான விமர்சனங்களை வைத்த நூல்கள். 

ஈழயுத்தம் முடிந்தபின் புலிகளின் உண்மை வரலாற்றை அறிவதில் தீவிரமான வேட்கை கொண்ட தமிழ் வாசகர்கள் உலகம் பூராக உருவானார்கள். சமூக வலைத்தளங்களில் இத்தகைய நூல்களை புலி ஆதரவாளர்கள் கடுமையாக கண்டித்து இந்நூல்கள் பற்றிய அவதூறு வதந்திகளைப் பரப்பினாலும் இத்தகைய நூல்களை அதிகம் இரகசியமாக வாங்கிப் படிப்பவர்களும் தங்களுடைய நேர்மறையான அவதூறுகளால் இந்நூல்களுக்கு பிரபல்யம்(Publicity) பெற்றுக்கொடுப்பவர்களும் புலி ஆதரவாளர்களே.  இந்த உண்மையை நன்கு அறிந்த, தமிழினியின் நூலின் வியாபார வெற்றியை நன்கு உணர்ந்த தமிழக முன்னணிப்பதிப்பகம் ஒன்று ஐயரின் நூலை பதிப்பிக்க விரும்பியது. ஆனால் இன்னமும் அது சாத்தியமாகவில்லை. கொரோனா பெருந்தொற்று பொருளாதார பின்னடைவு காரணமாக  இம்முயற்சி பின்போடப்பட்டிருக்கிறதா? அல்லது ஈழ நூல்களின் பதிப்பு தெரிவில் குறித்த பதிப்பகத்துக்கு  ஆலோசகராக இருக்கின்றவருக்கு  ஐயரின் புத்தகத்தை பதிப்பிப்பதில் விருப்பமில்லாததால் இம்முயற்சி பின்போடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஐயரின் புத்தகம் மீள் பதிப்பிக்கப்பட்டால் தமிழினியில் புத்தகத்தை விட அதிகம் விற்கும் என்பது மட்டும்  நிச்சயம்.


சமூக வலைத்தளங்கள் இக்காலத்தில் பதிப்பகத் துறையில் செலுத்தும் பரஸ்பர தாக்கம் திறமையான பதிப்பகர்கள் அறிவார்கள்.  Best Selling fiction/Non fiction நூல்களை ஏன் Netflix படமாக்குகிறது? Facebook இன் செல்வாக்கு குறைய Twitter Space/ Clubhouse செல்வாக்கு அதிகரிக்கிறதா? 




சமூக வலைத்தளங்கள் சனநாயக தேர்தலில்களில் செலுத்தும் தாக்கத்தை உணர்ந்து இதனை மிகச்சிறப்பாக நல்ல நோக்கங்களுக்காக உபயோகப்படுத்தியவர் 2008 அமெரிக்க சனநாயக தேர்தலில் பராக் ஒபாமா. தமிழ் நாட்டில் முதல்முதலாக சமூக வலைத்தளங்களை தீய நோக்கங்களுக்காக  உபயோகித்தது சீமான்.  2011, 2016 தமிழக தேர்தல்களில் தி.மு.க கோட்டையை கைவிட்டது சீமான் Factor காணமாகவே. சீமானின்  சமூக வலைத்தள narrative ஆன " துரோகி கருணாநிதி" 

காலங்கடந்தாலும் சுதாரித்த மு.க.ஸ்டாலின் 2019 இலிருந்து சமூக வலைத்தளங்களை கனகச்சிதமாக பாவிக்க ஏற்பாடுகள் செய்தார்.  தி.மு.க வின் IT wing உதயமாகிறது  Facebook- Cambridge Analytica மோசடி காரணமாக முகநூல் பின்னொதுங்க ருவிற்றர் முன்னுக்கு வருகிறது. முதலில் Twitter Space வந்தது.  அதற்கு பிறந்த குழந்தை Clubhouse  வந்ததும் சீமானின் Game Over. 

ஏன் இந்த நீண்ட கதை? சுருக்கமாகச் சொன்னால் இன்றைக்கு நியாயமான காரணங்களால் தமிழ் நாட்டின் சமூக வலைத்தளங்களில் அதிக செல்வாக்காக இருப்பது தேர்தலில் வெற்ற தி.மு.க தான். தூக்கத்திலிருந்து தாமதித்து விழித்தாலும் மக்கள் ஆணையால் வென்ற கட்சி என்பதால் சமூக வலைத்தளத்தை அது உபயோகிக்கிறபோது பெரும்பான்மையான தமிழக மக்களிடம் போய்ச்சேர்கிறது. 

சமூக வலைத்தளங்களால் வஞ்சிக்கப்பட்ட கட்சியான தி.மு.க வுக்கு, நிலமையை உணர்ந்து சுதாரித்த ஒரு கட்சிக்கு  மக்களின் ஆணைபெற்று ஆட்சியமைத்த ஒரு கட்சிக்கு அடுத்த கட்டமாக தமிழ்நாட்டு அரசாங்க பதிப்பகம் என்று ஒன்று அமைத்தால் நிலமை என்னவாகும்? ஏற்கெனவே அப்படி ஒரு பதிப்பகம் இருக்கும் என்று நம்புகிறேன். அதனை தூசு தட்ட முதல்வர் ஸ்ராலின் உத்தரவிட்டு கணேசன் ஐயரின் புத்தகத்தையும் பேராசிரியர் உமாகாந்தின் புத்தகத்தையும்  பதிப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  அந்தளவுக்கு Clubhouse ல் புலிகளைப்பற்றிய நியாயமான விமர்சனங்கள் அரங்கேறுகின்ற தகவல் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது.

பின்னிணைப்பு
ஈழத்தின் வலி நூல் மதிப்புரை
By Ajah

"ஈழத்தின் வலி" எனும் நூலின் ஆசிரியர் வைத்திய துறையைச் சார்ந்தவராக இருந்து கொண்டு இந்த தலைப்பில் பயன் மிக்க நூலினை எழுதியுள்ளமை பாரட்டதக்கது. இந்நூலினை ஈழத்தின் அனைத்து பொது மக்களுக்கும் சாதி-மத பேதமின்றி சமர்ப்பணம் செய்துள்ளமை நூலை முனைப்புடன் படிக்க தூண்டுகின்றது.

நூலாசிரியர் ஒரு அரச (சம்பளம் பெறும்) வைத்தியராக இருந்த போதிலும் தான் வைத்திய மாணவராக இருந்த காலத்திலும், அரச வைத்திய சாலையில் கடமையாற்றிய காலத்திலும் புலிகள் இயக்கத்திற்கு பல உதவிகள் புரிந்துள்ளமையை வெளிப்படையாக எழுதியுள்ளமையும் , தனது மூத்த சகோதரன் கண்ணப்பன் புலிகள் இயக்கத்தின் புலனாய்ப் பிரிவு உயர் அங்கத்தவராக இருந்தார் என்பதையும் (பக் -155) , பிரபாகரன் போர்க் குணம் கொண்டவர் என்பதையும் (பக் - 198) , இறுதிக் காலங்களில் விடுதலைப் புலிகள் மிருகங்கள் போன்று நடந்து கொண்டார்கள் (பக்- 93) என்பதையும் , இறுதி நேரத்தில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்டனி " அப்பாவுக்கு ஒன்று நடந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் " எனக் கூறினார் (பக் - 152) என்பதையும் , 2006.08.14ம் திகதி புலிகளின் செஞ்சோலை பகுதியில் விமானப்படையின் குண்டு தாக்குதலுக்கு பலியான மாணவிகள் ஆயுதப் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் போதே கொல்லப்பட்டனர் (பக்-178) என்பதையும் , இறுதிக் காலப்பகுதியில் அங்கவீனமடைந்த நூற்றுக்கணக்கான தமது சொந்த போறாளிகளைக்கூட இரண்டு பஸ் வண்டிகளில் ஏற்றி புலிகள் வெடி வைத்து கொன்றளித்தனர் (பக்-142) என்பதையும், பிரபாகரன் நீர்மூழ்கியின் உதவியுடன் பெருங்கடல் சென்று தப்பித்தார் எனக் கூறுவது வேடிக்கையானது (பக்-147) என்பதையும் , பிரபாகரன் இறந்துவிட்டார் (பக்-170) என்பதையும் வெளிப்படையாக எழுதியுள்ளதன் மூலம் ஆசிரியர் புலிகள் இயக்கம் பற்றிய பல உண்மைகளை நிதர்சனமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

ஈழத்தின் வலியை மாவில் ஆற்றில் இருந்து நந்திக் கடல் வரை எழுத முனைந்த ஆசிரியர் பல இடங்களில் (அவசியம் கருதி) அந்தக் கால கட்டத்திற்கு முன்னரான சம்பவங்களையும் தொட்டுக் காட்டியுள்ள போதிலும் தமிழ் ஈழப் போராட்டத்தின் போது முஸ்லிம் மக்கள் ஈழப் போராளிகளால் கொல்லபட்டது  தொடர்பில் ஒரு வாசனமேனும் எழுதாமல் விட்டிருப்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

விடுதலைப் புலிகளின் பல செயற்பாடுகள் பல இடங்களில் கண்டித்துள்ள ஆசிரியர் , குறைந்தது " புலிகள் ஏன் தோற்றார்கள் " (அத்தி - 33) அல்லது "புலிகளின் வரலாற்று தவறுகள்" (அத்தி-36) என்ற தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ள அத்தியாயங்களிலாவது முஸ்லிம் மக்கள் 1990ம் ஆண்டில் உடுத்த உடையுடன் தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டதையோ, அல்லது பள்ளிவாசல்களில் வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டதையோ ஓரிடத்தில் கூட குறிப்பிடத்தவறியமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

"யார் துரோகிகள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள 39வது அத்தியாயத்தில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் போராளிகள் துரோகிகளாக பார்க்கப்பட்டு இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டனர் என எழுதப்படுள்ளது. இது விடுதலைப் புலிகளை பூசி மெழுகும் ஒரு முயற்சியாகும்.  விடுதலைப் புலிகள் தங்கள் இயக்கத்திலிருந்த முஸ்லிம் போராளிகளைக் கூட கொன்று குவித்தனர் என்பதே அனைவரும் அறிந்த  உண்மையான தகவலாகும். இவ்விடயத்தை திரித்து ஆசிரியர் புலிகளுக்கு வக்காலத்து வாங்கி , அவர்கள் முஸ்லிம் போராளிகளை இயக்கத்தில் இருந்து விலக்கியதுடன் மாத்திரம் நின்றுவிட்டார்கள் எனகூறியுள்ளார்.தங்களின் இயக்கத்திலிருந்த மத்தையா மற்றும் யோகி போன்ற பெரும் பெரும் முக்கிய (தமிழ்) தலைவர்களை கூடக் கொன்றளித்த புலித் தலைவர் தனது இயக்கத்திலிருந்த முஸ்லிம்களை விலக்கியதுடன் நின்றுவிட்டார் எனக் கூறுவது தர்க்க ரீதியாகக் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும்.

ஈழப்போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட வலியை எழுதத் தவறிய ஆசிரியர் " மாவிலாறு அணைக்கட்டு விவகாரம்" எனும் தலைப்பில் எழுதியுள்ளது 12வது அத்தியாயத்தில் 2007ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மூதூரைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் சில முஸ்லிம் இளைஞர்கள் சிறைப்பிடிக்கபட்டனர். இவர்கள் "ஜிஹாத்" எனும் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகின்றது என எழுதியிருப்பது முஸ்லிம்களுக்கிடையில் ஒரு போதும் இருக்காததும், முஸ்லிம்களுக்கு மிகவும் வருத்தத்தை தரக்கூடியதுமான ஒரு கருத்தை ஆசிரியர் அது தனது கருத்து அன்றி-கூறப்பட்ட ஒரு விடயம் என்பது போல எழுதியிருப்பது முஸ்லிம்களை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கும் ஒரு செயலாகும்.

1990ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தமையும் விடுதலை புலிகளின் வரலாற்று தவறுகளில் ஒரு மோசமான தவறாகும் என்பது பல ஈழத் தமிழர்களாலும் , சர்வதேச தமிழர்களாலும் மற்றும் அரசியல் விமர்சகர்களாலும் வெளிப்படையாக கூறப்பட்டது. 2002ம் ஆண்டில் பிரபாகரன் ஊடகவியலார்கள் முன்பு முதல் முறையாகவும் இறுதியாகவும் தோன்றிய போது அவ்விடயத்தை பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் " அது ஒரு துன்பியல் சம்பவம் அது பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்" எனக் கூறினர். இருந்தும் 16 வருடங்களிற்கு பின்னரும் புலிகள் அவர்களுக்கு கிடைத்த முதல் சந்தர்பத்திலேயே முஸ்லிம்களை மூதூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தனர். இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்கள் அற்ற முழுக்க முழுக்க தமிழர்களை மாத்திரம் கொண்ட தமிழ் ஈழம் ஒன்றையே அமைக்க விரும்பினர் என்பதையே உறுதிப்படுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் பல செயற்பாடுகளை விமர்சித்துக் கண்டித்துள்ள ஆசிரியர் தான் பிரபாகரனின் பக்தர் அல்லது பிரபாகரனின் விசிறி என்பதை புத்தகத்தில் பல இடங்களில் வெளிப்படுத்த தவறவில்லை - என்பது மிகை இல்லை .

இனி நூலின் நீதிக்கு வருவோம், ஆசிரியர் நூலின் நீதிக்கு எந்தவிதமான பங்கமும் இளைக்காமல் வாசிப்பு ஓட்டத்திலும், தகவல் கோர்வையிலும் மற்றும் சுவாரசியத்திலும் நடுநிலையினை பேணியுள்ளார் என்பது உறுதி. வரலாற்று படைப்பு கருதியும், தகவல் உள்ளடக்கம் கருதியும் நிச்சயமாக உங்கள் வரிசையில் இடம் பிடிக்க கூடியதொரு நூல் தான்.

ஆசிரியர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைகளையும் , பாரபட்சங்களையும் களையும் இடத்து இதை ஒரு முழுமைபெற்ற ஆக்கம் என்றே கூறமுடியும். ஏன் முடிந்தால் போற்றவும் முடியும்.

தொடர்பான கட்டுரைகள்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்