ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: அத்தியாயம் 04

 


By கணேசன் ஐயர்

1975 ஆம் ஆண்டு ஜீலை மாதம் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்தது.

1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர் உணர்வு.
2. ஒரு புறத்தில் சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது.

தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலச ஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்க்குக் காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் “ஹீரோ” வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது. ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை; மறு புறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.

தமிழ் பேசும் மக்கள் மீதான தேசிய இன அடக்கு முறையும், வன் முறை வடிவில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பொலீசார் எமக்குப் பெரும் தலையிடியாகின்றனர். அவர்களை என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு முன்னமே சிலவேளைகளில் அவர்கள் எம்மை நோக்கி வந்துவிடுகின்றனர்.

21 ஓகஸ்ட் 1975 கிருபாகரனும், சில நாட்களில் 19 செப்டெம்பர் 1975 கலாபதியும் கைதுசெய்யப்பட்ட பின்னர் தான் இலங்கை அரசின் அதிகார மையத்திற்கு துரையப்பா கொலை என்பது சில இளைஞர்களின் கூட்டு நடவடிக்கை என்பது தெரிய வருகிறது. அரசு விழித்துக்கொள்கிறது. ஒரு உள்ளூர் உளவு வலையமைப்பை உருவமைக்கும் வேலையை முடுக்கிவிடுகிறது.

துரையப்பா கொலை தொடர்பாக கலாபதி கைது செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி கொலைசெய்யப்பட வேண்டும் என்பதில் பிரபாகரனும் நாங்களும் ஆர்வமாக இருந்தோம். அவரின் கைதிற்கு மட்டுமல்ல, கலாபதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவரைச் சித்திரவதை செய்வதற்கும் கருணாநிதிதான் முன்நின்றார் என்பதும், நாம் அறிந்திருந்தோம், அவரின் சித்திரவதையில் கலாபதியின் காதைப் பலமாகத் தாக்கி சேதப்படுத்தியிருந்தார் என்று தம்பி அடிக்கடி கூறுவார். கருணாநிதியின் சித்திரவதையின் கோரத்தால் கலாபதியின் ஒருபக்கக் காதின் கேட்கும் தன்மை கூடப் பாதிக்கப்பட்டிருந்து.

14 பெப்ரிவரி 1977 இல் காங்கேசந்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி மாவிட்டபுரத்தில் வைத்துக் கொலைசெய்யப்படுதல் என்பது தான் தமிழ் ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் நடைபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலைச்சம்பவம்.

பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. மாவிட்டபுரம் நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் செல்ல நாம் முடிவிற்காகக் காத்திருக்கிறோம். இறுதியில் பிரபாகரன் குறிபார்த்துச் சுட்டதில் கருணாநிதி அந்த இடத்திலேயே மரணமாகிறார்.

அப்போது தமிழர் கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்களும், இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி இருந்தமையும் எமது போராட்டதை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. கருணாநிதி இறந்து நிலத்தில் வீழ்ந்த பின்னர் உணர்ச்சிவயப்பட்ட பிரபாகரன் அவரின் அருகே சென்று அவருடைய காதினுள் மறுபடி துப்பாக்கியால் சுட்டதாக எம்மிடம் கூறினார். கலாபதியின் காதைச் சேதப்படுத்தியற்கான பழிவாங்கல்தான் அது. பழிக்குப் பழிதீர்க்கும் மனோபாவம் நிறைந்த, உணர்ச்சி வயப்பட்ட தாக்குதலின் கோரம் அங்கே வெளிப்பட்டு மனிதத்தை நோக்கி வினாவெழுப்பியது.

பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர். யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி முகாமிற்கோ, பண்ணைக்கோ வரும் போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று பஸ் தரிப்பிடங்களின் முன்னதாக வண்டியை விட்டு இறங்கி நடந்தே வருவார். அடிக்கடி யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது வழமை. தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற உலகம் இருப்பதாகவே எப்போதும் உணர்வது போன்ற தோற்றப்பாட்டையே அவர் உருவாக்குவார். ஒன்றாக உறங்கும் வேளையிலும் சிறிய சலசலப்புகளுக்கே விழித்துக்கொள்வார். துப்பாக்கி இல்லாமல் எங்கும் வெளியே செல்வதில்லை. தனியேயாகவோ அல்லது கூட்டாகவோ சென்றாலும் தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைச் செருகி வைத்துக்கொள்வார். இவரோரு கூடச் செல்பவர்களையும் துப்பாக்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவது வழமை. நான் கூட பிரபாகரனுடன் செல்லும் போது துப்பாக்கியின்றி வெளியே செல்வதில்லை.

இதே வேளை எமது எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருவகையான மக்கள் சாராத தனிமனிதப் படுகொலைகள்  என்ற வடிவத்தைக் கொண்டதாக அமைகிறது. பொலிஸ் அதிகாரிகளும், அரச ஆதரவாளர்களும், உளவாளிகளும் என்ற முக்கோண வலைப்பின்னலை உடைத்து, இலங்கை அரச இயந்திரத்தை மக்கள் தொடர்பிலிருந்து பலவீனப்படுத்தலே எமது வரையறுக்கப்படாத, ஆனால் செயல்ரீதியான நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வேளையில் துரையப்பா கொலைவழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு இந்தியா சென்றிருந்த பற்குணம் இலங்கை திரும்புகிறார்.

பற்குணம் இலங்கைக்கு வந்த நிகழ்வானது எமக்குப் புதிய உற்சாகத்தை வழங்குகிறது. தலைமறைவாக வாழ்ந்த எங்களை மிகுந்த பிரயத்தனத்தின் பின்னர் அவர் சந்திக்கிறார். சில காலங்களின் பின்னர், அவர் எமது மத்திய குழு உறுப்பினராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இந்தச் சூழலில் சண்முகநாதன் என்ற பொலிஸ் அதிகாரி எமக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிகிறோம். இவரைப் “போட்டுத் தள்ள வேண்டும்” என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுகிறார். கருணாநிதி கொலை தந்த உற்சாகமும் உத்வேகமும் சண்முகநாதனைக் கொலைசெய்ய வேண்டும் என்ற உறுதியை வழங்குகிறது.

அவரை நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், தம்பி பிரபாகரனும், உரும்பிராய் பாலாவும் சண்முகநாதனை, இணுவிலில் உள்ள தேனீர்க் கடையின் முன்னால் காண்கின்றனர். தற்செயலாக அங்கு அவரைக் கண்ட இருவரும் உடனடியாகவே அவரைக் கொலைசெய்யத் திட்டமிடுகின்றனர்.

காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் இன்னுமொரு பொலீஸ் அதிகாரியுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றவர் யாரென்பதையும் பிரபாகரனும் பாலாவும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மற்றைய பொலிசின் பெயரும் சண்முகநாதன் தான். அவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை பார்ப்பவர். கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர் என்பதையும் பாலாவும் பிரபாகரனும் தெரிந்து வைத்திருந்தனர். கொல்லப்படவேண்டிய காங்கேசந்துறை சண்முகநாதனை பிரபாகரன் குறிவைக்கை அவர் பிரபாகரனை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டு தரையில் விழுத்த முயற்சிக்கும் வேளையில், கைத்துப்பாக்கியை வைத்திருந்த பாலா அவரை சுட்டுக்கொலைசெய்து விடுகிறார்.

அதேவேளை அங்கு நின்றிருந்த மற்றைய சண்முகநாதனை நோக்கி, தப்பி ஓடிவிடுமாறு பாலா சத்தமிடுகிறார். அதை அவர் மறுத்து, தனது சக பொலீசைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட அவரைப் பிரபாகரன் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிடுகிறார். 18ம் திகதி மே மாதம் 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை வடபகுதி எங்கும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில், திருப்பித் தாக்குவதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.

இன்னும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வட கிழக்கெங்கும் மேடைகளும், உணர்ச்சிக் கோசங்களும், தமிழுணர்வுப் பாடல்களும், உதய சூரியன் கொடியுமாகக் களைகட்டியிருந்தது. சந்திகளும், சாலைத் திருப்பங்களும், மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் பேசிக்கொள்வதை நாமும் கேட்கிறோம். எங்கும் “தமிழ் உணர்ச்சியின்” அலைகள் இந்துமா கடலையும் தாண்டி ஒலித்தது. தமிழ் தேசியத் தணலின் வெம்மை முழு இலங்கையையும் எரித்துக் கொண்டிருந்தது.

(அத்தியாயம் 05 தோடரும்)

அத்தியாயம் 03 இணைப்பு

தொடர்பான கட்டுரைகள்

1. மேதகு பட விமர்சனம்

2.  அன்ரன் பாலசிங்கம் வரலாறு

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்