முள்ளும் மலரும்(சிறுகதை)
- நட்சத்திரன் செவ்விந்தியன் “துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று” - குறள் 586(ஒற்றாடல்) 1. ஒற்றன் பிரிகேடியர் கரும்புலி மொஹமட் ஒரு 19 வயதுக் கரும்புலி ஒற்றன் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் பொட்டம்மானின் தொடர்பறுபட்டுக் கொழும்பில் மாட்டிக்கொண்டான். கொழும்பின் மிகச்செல்வந்தக் குறிச்சியான கறுவாக்காட்டில் அவன் மொஹமட் என்ற மாலைதீவு முஸ்லீமின் பெயரோடு, மாலைதீவு கள்ளப்பாஸ்போட்டில் ஒரு சர்வதேச மாணவனாகக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தான். அம்மானும் தலைவரும் செத்ததையோ யுத்தம் முடிந்ததையோ அவன் நம்பவேயில்லை. பொட்டம்மான் அவனிடம் 2008இல் கொடுத்தனுப்பிய ஐந்து லட்சம் அமெரிக்க டொலர்களில் அவனது செலவுக்குப் போனதைவிட மிகுதியைக் காசாகவே தனது கறுவாக்காட்டு அறையில் ஒழித்துவைத்திருந்தான். பொட்டம்மான் உருவாக்கிய மிகச்சிறந்த ஒற்றன்/கரும்புலி மொஹமட்தான். மொஹமட்(இயக்கப்பெயர்) 1990 மே 19 அதிகாலை 3.19இல் இரண்டு புலிப் பெற்றோருக்குப் பிறந்தவன். போராளிகளான இருவரும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இருவரும் கிளிந...