தலைவரின் முதல் சகோதரக்கொலை: அத்தியாயம் 02

 

    மைக்கல்: காட்டில் ஒரு யாமக்கொலை


அத்தியாயம் 02

By கணேசன் ஐயர்

70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.

மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம்! எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின!! முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது.

இவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்:

1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.

2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.

3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.

4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

நாம் உருவாக்கிய இந்த மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகள்(TNT) என்ற பெயருடனேயே இயங்குகிறது.

எமது சூழல், அரசியல் வறுமை, தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிப் பேச்சுக்கள், சிங்களப் பேரின வாததின் கோரம் என்று எல்லாமே எம்மை சுற்றி நிற்க எமக்கு நியாயமாகத் தெரிந்தவை தான்.

இந்தக் கோஷங்கள். நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன.

அரசியல் திட்டமென்று நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த இந்தச் சுலோகங்கள் எல்லாம் பின்னதாக ஆயிரமாயிரம் போராளிகள் கொன்று போடப்படுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. எவ்வாறாயினும் முதல் இயக்கப் படுகொலையை செட்டி தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.

அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன் எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவி, அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.

கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி பத்மநாதன் கொலைகளுக்காக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிபதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.

இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி சொன்னதாக எனக்குச் சொன்னார்.

எங்கோ தெருக் கோடியில், உள்ளூரிலேயே அறியப்பட்டத மூலையில், கால்படத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும், உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கமாகவும் பேசப்படுகிற ஒரு சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.

இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.

துரையப்பா கொலை நிகழ்ந்து, எல்லாருமே கைது செய்யப்படுகின்றனர். பொலீசாரும் உளவுப் படையினரும் பிரபாகரனை வேட்டையாட அலைகின்றனர்.

துரையப்பா கொலையின் பின்னதாக காங்கேசந்துறையில் தான் தம்பி பிரபாகரன் தலைமறைவாக வாழ்கிறார். ஏனையோரின் கைதுக்குப் பின்னர் அவர் அங்கு வாழ முடியாத நிலை. அவரது ஊரான வல்வெட்டித்துறையோ வடமராட்சியோ அவர் கால்வைப்பதற்குக் கூட நினைத்துப் பார்க்கமுடியாத நிலையிலிருந்தது. போலிசார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். 

யாழ்ப்பாணத்தினூடே பயணம் செய்வதென்பதே முடியாத காரியமாக இருந்தது. இந்த நிலையில் தான் செட்டியிடம் முன்னர் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எமது ஊரான புன்னாலைக்கட்டுவனை நோக்கி வருகிறார்.



அவ்வாறு அவர் வரும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசு கூட செலவுக்கில்லை. அன்று அவர் உணவருந்தியிருப்பார் என்பது கூடச் சந்தேகமே. அவருடைய சிறிய தொடர்பாளர்கள் கூடக் கைது செய்யப்பட்டுவிட்டனர். எந்த அடிப்படை வசதியுமின்றி அனாதரவான நிலையிலேயே நாம் அவரைச் சந்திக்கிறோம்.

எம்மிடம் வந்த பிற்பாடு முன்னைய தொடர்புகளைச் சிறிது சிறிதாக ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.

எமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் மட்டும் தான். அவர்கள் அனைவருமே கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் கோவிலில் பூசை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேரப் போராளியாகத் தீர்மானித்திருந்தேன். பின்னர் எமது நடவடிக்கைகளுக்குத் தேவைபடும் பணத்தைச் சேகரித்துக் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்வதற்காக நான் எனது பிராமணத் தொழிலைத் தொடர்வதாகத் தீர்மானித்தேன்.

இதற்கு மேலாக எனது வீட்டிலிருந்த நகைகளை அடகு பிடித்தே போராளிகளின் போக்குவரத்துச் செலவு, புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் பணம் போன்ற செலவுகளைச் சமாளித்துக் கொண்டோம். இதே போல, துரையப்பா கொலையின் திட்டமிடலை மேற்கொள்வதற்காக பற்குணம் தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்தே பணம் திரட்டிக்கொண்டார். சில வேளைகளில் பிரபாகரன் ஒரு வேளை மட்டுமே ஏதாவது உணவருந்தித் தான் வாழ வேண்டிய நிலை இருந்தது. எனது வரலாற்றுப் பதிவில் வருகிற இன்னொரு அத்தியாயத்திலும் பிரபாகரன் தனிமைப்பட்டுப் போகிற இன்னொரு சந்தர்ப்பமும் பதியவுள்ளேன்.

இந்த எல்லா இக்கட்டான சூழலிலும் பிரபாகரனின் உறுதி குலையாத மனோதிடம் கண்டு நான் வியப்படந்திருக்கிறேன். பலர் அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது எனலாம். பிரபாகரனும் நானும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. பிரபாகரன் பழகுவதற்கு இயல்பானவர். ஒரு குறித்த இயல்பான தலைமை ஆளுமை கூட இருந்ததை மறுக்க முடியாது.

என்னை பொறுத்த வரை ஆரம்பத்தில் எம்மோடு இணைந்த பலர் மிகத் தவறான சொந்த நலனை முதன்மைப் படுத்தியவர்களாகவே காணப்பட்டனர். புத்தூர் கொள்ளைப் பணத்தில் ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தாம் முழு நேரமாக இயங்குவதானால் தமது குடும்பதைப் பராமரிக்க இந்தப் பணத்தை அவர்கள் கோரினர். இவர்களில் ராஜ் என்னசெய்கிறார் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயவேல் மரணமடைந்திருக்க வேண்டும்.

20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.

இவ்வாறு பெரும் மன உழைச்சல், அர்ப்பணம், தியாகம் என்பவற்றினூடாக ஐந்து பேர் கொண்ட மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகளின் மத்திய குழுவாக உருவாகிறது. புத்தூர் வங்கிப்பணத்தை வைத்துக்கொண்டே பயிற்சி முகாமைப் புளியங்குழத்தில் உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு உருவான பயிற்சி முகாமைத் தவிர ஒரு பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கிறோம். புதிதாக போராளிகளை உள்வாங்கி வடிகட்டி அதன் பின்னர் பயிற்சி முகாமிற்கு அனுப்பும் நோக்கத்துடனேயே இந்தப் பண்ணை உருவாக்கப்படுகிறது. இந்தப்பண்ணை வவுனியாப் பூந்தோட்டத்தில் உருவாகிறது. விவசாய நிலம் ஒன்றிலேயே இதை அமைத்துக் கொள்கிறோம். அந்த நிலம் காங்கேசந்துறை தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் சொந்தமானது.

காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. இதே ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தான் புத்தூர் வங்கிக் கொள்ளை நடந்தது. சில மாதங்களின் உள்ளாகவே பண்ணையையும், பயிற்சி முகாமையும் உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வேளையில் தம்பி பிரபாகரனும் நானும் மட்டுமே முழு நேரச் செயற்பாட்டாளர்களாக இருந்தோம்.

இந்தப் பண்ணைக்கு உள்வாங்கும் நோக்குடன் பத்துப் பேர் வரை பேசியிருந்தோம். அவர்கள் அனைவருமே அங்கு வருவதாக உறுதியளித்திருந்தனர். அவர்களுள் புத்தூர் கொள்ளைப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோரும் அடங்குவர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு அவர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களுக்காக நான் புகையிரத நிலையத்தில் காத்திருந்தேன்.

இதில் ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் பத்துப் பேரில் ஒரே ஒருவர் மட்டுமே அங்கு வந்து சேர்ந்தார் என்பது மட்டுமே. கற்பனைகளோடு காத்திருந்த எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அங்கு வந்து சேர்ந்தவர் ஞானம் என்ற சித்தப்பா மட்டுமே. இவ்வேளையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரபாகரன் பண்ணைக்கு வரவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஆக, நானும், சித்தப்பாவும் பண்ணையில் தனித்துப் போனோம். எம்மிடம் பணம் வாங்கிக் கொண்ட இரண்டு பேரும் கூட அங்கு வரவில்லை என்பது விபரிக்க முடியாத விரக்திமனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது.

 புளியங்குளம்: யானை உலாவும் காடு



இதற்கு மறு நாள் நாம் எதிர்பார்க்காமலே இன்னொருவர் வருகிறார். அவர் பெயர் நிர்மலன். அவரைக் கறுப்பி என்றும் அழைப்போம்.

இவ்வேளையில் எமக்கு எந்த வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. மத்திய குழுவிலிருந்த எம்மைத் தவிர, ராகவன் மற்றும் குலம் ஆகியோரே எம்முடன் இருந்தனர். அதிலும் ராகவன் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டு ஆதரவு மட்டத்திலேயெ இருக்கின்றார். குலம் தனது குடும்பச் சுமைகள் காரணமாக முழு நேரமாகச் செயற்பட முடியாத நிலையில் ஆதரவு மட்ட வேலைகளேயே செய்து வந்தார்.

இப்போது பண்ணை ஆரம்பமாகிவிட நான், நிர்மலன், சித்தப்பா பின்னதாக இணைந்து கொண்ட பற்குணா ஆகியோரே பணியாற்றுகிறோம். இங்கு விவசாயத்தையும் ஆரம்பித்துவிட்டோம்.

இதெ வேளை உரும்பிராயைச் சேர்ந்த தமிழர்சுக் கட்சி முக்கியஸ்தரான சேகரம் என்று அழைக்கப்படும் சந்திர சேகரம் என்பவர் எம்மில் சிலரைச் சந்தித்துக்கொள்வார். அவரின் ஊடாக மட்டக்களப்பைச் சார்ந்த மைக்கல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைக்கிறது.

மைக்கல் மட்டக்களப்பில் ஈடுபட்ட அரச எதிர்ப்புப் போராட்டங்களால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தவராவர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு வந்து உரும்பிராயில் சந்திரசேகரத்தைச் சந்திக்கிறார். சந்திரசேகரம் அவரை எமக்கு அறிமுகப்படுத்த, அவருடனான உறவை நாம் வளர்த்துக் கொள்கிறோம். துடிப்பான கிழக்கு மாகண இளைஞனின் தொடர்பு எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. இந்த உற்சாகத்தின் வேகத்தில் அவரை உடனடியான செயற்திட்டத்திற்குள் உள்வாங்குவதாகத் தீர்மானிக்கிறோம்.

துணிவும், செயற்திறனும் கொண்டவராதலாலும், ஏற்கனவே வன்முறைப் போராட்டங்களில் அனுபவமுள்ளவர் என்பதாலும், எமது புளியங்குளம் பயிற்சி முகாமிற்கு அவரைக் கூட்டிச் செல்கிறோம். அங்கே சில நாட்கள் மைக்கல் எம்முடன் தங்கியிருந்தார். அதன் பேறாக ராஜன் செல்வநாயகத்தைம் என்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்காக அவரை ஏற்படு செய்கிறோம்.

அதன் முதற்படியாக அவரிடம் பணம் கொடுத்து ராஜன் செல்வநாயகத்தின் நடமாட்டத்தை உளவறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை அனுப்பி வைக்கிறோம். எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மைக்கல் பின்னதாக பல நாட்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.

அவர் மட்டக்களப்பு சென்று தனது வேலைகளை முடித்துத் திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நாட்கள் கடந்தன மைக்கல் வரவில்லை. அவ்வேளையில் சேகரத்தைச் சந்தித்த போது, அவர் மைக்கல் இன்னமும் யாழ்ப்பணத்தில் தான் தங்கியிருப்பதாக அறியத் தந்தார். அத்தோடு எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து அவர் பகிரங்கமாக பல இடங்களுக்குப் போய் வருவதாகவும். நாம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.

இதை அறிந்து கொண்ட நாம், மைக்கலை பல தடவைகள் எம்மை வந்து சந்திக்குமாறு கோரியும் அவர் எம்மிடம் வரவில்லை.

மைக்கலிற்கு எமது உறுப்பினர்கள் பலரைத் தெரிந்திருந்தது. எமது ரகசிய இடங்களைத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நாம் மேலும் பதட்டமடைந்தோம்.

அப்போது தம்பி பிரபாகரன் என்னிடமும் குமரச்செல்வம் என்பவரிடமும் மைக்கலைக் கூப்ப்ட்டு எச்சரிக்க வேண்டும் என்றும் எல்லை மீறினால் கொலை செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதை அவர் மத்திய குழுவிலிருந்த ஏனையோருக்குச் சொல்லவில்லை. எம்மிருவருக்கு மட்டுமே அதைத் தெரிவிக்கிறார். நாங்கள் இது குறித்து எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு மத்திய குழுவிலிருந்த பட்டண்ணாவும் சின்னராசும் பயப்படுவார்கள்; அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். அதாவது மைக்கலைக் கொலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுமானால் அதற்கு இவ்விருவரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இவ்விவகாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்ட்டம் என்கிறார் தம்பி பிரபாகரன்.

அந்த வேளையில் பிரபாகரன் சொல்வது எமக்கு நியாயமாகப் பட்டது இதனால், நாம் இந்தச் செயலுக்குச் சம்மதம் தெரிவித்தோம்.
தொடர்ச்சியான எமது வற்புறுத்தலின் பேரில் மைக்கல் புளியங்குளத்திற்கு எம்மிடம் பேசுவதற்காக வருகிறார். யானைகளும், விசப் பாம்புகளும் நடமாடும் இருண்ட காட்டினுள் மயான அமைதி நிலவுகிறது. தீயின் கோரம் நிலவின் ஒளியை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மைக்கலுடன் உரையாடுகிறோம். பின்னர், நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம். 

அத்தியாயம் 03 நாளை தொடரும்

தொடர்பான கட்டுரைகள்

1. ஐரோப்பாவில் புலிகள் செய்த நாலு கொலைகள்

2. மேதகு பட விமர்சனம்

3. அன்ரன் பாலசிங்கம் வரலாறு

4. உமா மகேஸ்வரன் கொலையின் கதை

5. புலிப்பாசிஸம் பற்றிய உரையாடல்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்