உமா: ஒரு கொலையின் கலை
ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒரு மரணத்தின்கதை Chronicle of a death foretold
மாணிக்கதாசன் பழுத்துப் பிஞ்சிய புரட்சி
திருச்சி ஜெயிலில் இருந்த தோழர்களே போய் பார்த்தது, வேலூர் ஆஸ்பத்திரியில் இருந்த அண்மையில் மறைந்த பத்தர் தோழரே போய் பார்ப்பது போன்ற வேலைகள் தான் இருந்தன. முள்ளிக்குள எமது தோழர்களின் இறப்புக்கு பின்பு, கொழும்பில் இருந்த எஞ்சிய அனைத்து தோழர்களும் மாணிக்கதாசன், மற்றும் அரசியல் தலைவர் சித்தார்த்தன் போன்றவர்களும் உமாமகேஸ்வரன் அவர்களிடம் அடுத்து என்ன செய்வது என்று பேசும்போது, என்ன காரணமோ தெரியவில்லை செயலதிபர் சரியான பதில் சொல்லாமல் கோபப்பட்டு இவர்கள் மேல் எரிந்து விழுந்துள்ளார். அதோடு எல்லோரிடமும் நீங்கள் இயக்கத்தை விட்டு போகலாம். என்னால் மலையகத் தமிழர்களை வைத்து ஒரு புதிய இயக்கம் உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
செயலதிபரின் இந்த கதை எல்லாம் தோழர்களையும் கோபப்பட வைத்துள்ளது. சில தோழர்களை தனிப்பட்ட முறையிலும் தரக்குறைவாக திட்டியுள்ளார். மாறன் தோழர் மட்டும்
"எமது இயக்கம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை இழந்துள்ளது. இப்ப இருப்பவர்களும் வீட்டுக்கும் உதவவில்லை நாட்டுக்கும் உதவவில்லை. சுற்றி எதிரிகளை மட்டும் தான் சம்பாதித்து வைத்து உள்ளார்கள். எங்களை இயக்கத்தை விட்டு விட்டுப் போகச் சொன்னால் நாங்கள் எங்கே போவது"
என்று திரும்பக் கேட்டுள்ளார். (அன்று தோழர்களுக்காக குரல் கொடுத்த மாறனை1998 ஆண்டு எமது மிகமுக்கிய தலைவரும் மாறனின் நெருங்கிய நண்பரும் ஆன ஒருவர் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும், அல்லது மாறன் தூக்கில் தொங்க துப்பாக்கி முனையில் மிரட்டி தற்கொலை செய்யபட்டதாகவும் தகவல் கொடுமையான நிலை)
அதற்கு செயலதிபர் அதற்கு நான் பொறுப்பு இல்லை. என்று கூறியதுடன், செயலதிபர் இன் நாக்கில் சனி இருந்திருக்க வேண்டும், மேலும் அவர் என்னை நம்பியா விடுதலைக்கு வந்தீர்கள், என்று பல வார்த்தைகளை கூறியுள்ளார். இது மிஞ்சியிருந்த அங்கிருந்த தோழர்களுக்கு கடும் கோபத்தை உண்டு பண்ணி உள்ளது. அங்கு நடந்த சம்பவங்களை மாணிக்கம் தாசன் மற்றும் சித்தார்த்தன் இவர்கள் மூலம் தொலைபேசி வாயிலாக அறியக் கிடைத்தது. கொழும்பில் உமா மகேஸ்வரனுக்கு ஆதரவாக இருந்தது சக்திவேல் மட்டுமே. ஆட்சி ராஜன், சாம் முருகேஷ் பின்னர் எனக்கு கூறிய செய்தி , சக்திவேல் தலைவருக்கு ,விசுவாசமாக இருந்தாலும், அவர் நடந்து கொண்ட விதம் சக்திவேலுக்கு பிடிக்கவில்லை. அதோடு தோழர்களை கொழும்பில் வைத்து குழப்புவது, செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராகப் தூண்டுவது மாணிக்கம் தாசன் தான் என்று தோழர்களிடம் இடம் கூறியுள்ளார்.
கொழும்பில் அன்று இருந்த முக்கிய தோழர்கள் எமது உதவி இராணுவத்தளபதி மன்னார் காண்டீபன், மதன், k.L ராஜன், ஆட்சி ராஜன், ஜெயா, மாறன், தராக்கி சிவராம், லண்டன் கிருஷ்ணன்போன்றவர்களிடம் மாணிக்கம் தாசன் ,சித்தார்த்தனும் ரகசியமாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளார்கள். அதில் முக்கியமானது நாங்கள் இயக்கத்தை விட்டுபோவதை விட, செயலதிபர் உமா மகேஸ்வரனை முதலில் இயக்கத்தை விட்டு தூக்க வேண்டும். நேரடியாக சொல்வதென்றால் உமா மகேஸ்வரன் தமிழ் மக்களுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் செய்த துரோகத்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது.செயலதிபர் பற்றிய சகல விபரங்களும் அலசி ஆராயப்பட்டு இருக்கின்றன. அத்துலத்முதலி தொடர்பு அதன் மூலம் விடுதலைக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி எல்லாம் சித்தார்த்தர் விளங்கப்படுத்தி உள்ளார்.
உமாமகேஸ்வரனுக்கு மரணதண்டனை கொடுப்பது பற்றிய செய்தி எந்த தோழருக்கும் அதிர்ச்சி அளிக்கவில்லை. எல்லோரும் வரவேற்றிருக்கிறார்கள். இவர்கள் ரகசியமாக கூடிப்பேசி திரிவது சக்திவேல், ஆனந்தி, திவாகரனா மாணிக்கம் பிள்ளை போன்றவர்களுக்கு தெரியாது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆட்சி ராஜன் மனதளவில் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக இருப்பது பல பேருக்கு தெரியாது. சித்தார்த் தனக்கு தெரியும். ஆனால் மாணிக்கம் தாசன் ஆட்சி ராஜனை ஒரு சந்தேக பார்வைதான் பார்த்துள்ளார். காரணம் செயலதிபர் உமாமகேஸ்வரர் மாணிக்கம் தாசனை மற்றும் லண்டன் கிருஷ்ணனை போடசொல்லி சொன்னது மாணிக்கம் தாசனுக்கு தெரியும்.. ஆச்சி ராஜன் மாணிக்கம் தாசணை சுடமாட்டார் என்று மாணிக்கத்துக்கு உத்தரவாதம் கொடுத்தது சித்தார்த்தர். இது எனக்கு நன்றாக தெரியும்.
உமாமகேஸ்வரனுக்கும், மாணிக்கம் தாசன் லண்டன் கிருஷ்ணன் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக கொலை செய்ய முயன்றது எல்லாம் பல பேருக்கு தெரியும். ஆனால் முகாம்களிலும், வெளிநாடுகளிலும் இருந்த இயக்கத்துக்கு வேலை செய்த பலருக்கு இன்று வரை ஒரு உண்மைகளும் தெரியாது. பல பேருக்கு இரண்டாவது தள மாநாடு நடந்தது, எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள்.
மாணிக்கம் தாசன் சித்தார்த்தன், ஆட்சி ராஜன், மதன், மாறன் போன்றவர்களிடம் செயலதிபர் உமா மகேஸ்வரனின் நடவடிக்கைகள் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். புளொட் இயக்கத்தின் ராணுவ தளபதி மாணிக்கம் தாசன். பல தோழர்களின் மரணத்திற்கு பின்பும் செயலதிபர் உமா மகேஸ்வரனின்நடவடிக்கைகள் திருப்தி இல்லாத காரணத்தால், மிகவும் கவலைப்பட்டு இருந்தது உண்மை. சென்னையிலிருந்து என்னிடம் கூட பலமுறை தொலைபேசி மூலம் பேசும்போது எல்லாவற்றையும் இழந்து கொண்டு போகிறோம், பெருசு (செயலதிபர் உமாமகேஸ்வரன்) எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்று என்னிடம் கூறியுள்ளார். 1989 உமா மகேஸ்வரனின் மரண தண்டனையின் பின் மாணிக்கம் தாசனை கட்டுப்படுத்த எந்தத் தலைமையும் இருக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு உமாமகேஸ்வரன் என்ற சக்தியை மீறி நேரடியாக செயல்பட முடியாமல் இருந்தது என்பதை கவனிக்க வேண்டும்.
பல பேருக்கு தெரியாத ஒரு முக்கிய விடயம். உமா மகேஸ்வரனின் பாதுகாப்பாளர் , வாகன சாரதியாக இருந்த ராபினை , ஏதோ ஒரு கோபத்தில் செயலதிபர் உமாமகேஸ்வரன் ராபினின் சாதியைச் சொல்லி திட்டியதால், கோபமடைந்த ராபின் செயலதிபர் ஒடு கடும் வாக்குவாதம் பட்டு, காரோடு தலைமறைவாகிவிட்டார்.செயலதிபர் ஆட்சி ராஜனிடம் ராபினையும், காரையும் கண்டுபிடிக்கும் படியும், ராபினை போட்டு தள்ளுபடியும் கூறியுள்ளார்.ராபினுக்கும், செயலதிபர் உமா மகேஸ்வரனும் என்ன பிரச்சனை நடந்தது என்று ஆட்சி ராஜனுக்கு தெரியவில்லை. ஆட்சி ராஜன் ராபினை தேடியுள்ளார், கொலை செய்வதற்காக இல்லை. என்ன நடந்தது என்று அறிய. மட்டுமே. ராபினை கண்டுபிடிக்கமுடியவில்லை. அன்று கொழும்பில் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக கொழும்பில் இருந்த தோழர்கள் செயல்பட்டார்கள் முடிந்தால் அவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு கூட முடிவெடுத்து இருந்திருக்கிறார்கள். அதேநேரம் இன்னும் இருவர் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக மிக ரகசியமாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் மாணிக்கம் தாசன் லண்டன் கிருஷ்ணன் இருவரும். மாணிக்கம் தாசன் லண்டன் கிருஷ்ணன் நடவடிக்கைகளை சக்திவேல் மிக உன்னிப்பாக கவனித்து செயலதிபர் உமா மகேஸ்வரனை எச்சரித்திருக்கிறார்.துரதிர்ஷ்டவசமாக செயலதிபர் தனது பாதுகாப்புக்கு ஆட்சி ராஜனை நம்பி இருந்திருக்கிறார். எமது இயக்க ராணுவ தளபதி மாணிக்கம் தாசன் ஆட்சி ராஜனின் நடவடிக்கைகளை முடக்கக் கூடிய சக்தி இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.
கொழும்பில் இருந்த முக்கிய தோழர்களின் மனநிலையை அறிந்த மாணிக்கம் தாசன் ரகசியமாக மேல்மட்ட தோழர்களிடம் குறிப்பாக சித்தார்த்தன், மாறன், மதன், k.L ராஜன், ஜெயா ஆட்சி ராஜன் , தராக்கி சிவராம் போன்றவர்களிடம் தனித்தனியாக செயல் அதிபரின் நடவடிக்கைகள் பற்றி கவலைப்பட்டு பேசியது மட்டுமல்லாமல்,கழகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் செயலதிபர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதே ரீதியில் சென்னைக்கு எனக்கு தொலைபேசி எடுத்து என்னிடம் கூட பலமுறை கவலைப்பட்டு உள்ளார். கொழும்பில் நடந்த இந்த விடயங்களை அறியாத பலர் இன்றும் இது பொய். தங்களுக்கு எல்லாம் தெரியும் மாணிக்கம் தாசன் சித்தார்த்தன்உமா மகேஸ்வரனுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார்கள்.இந்திய உளவுத் துறை ஏற்பாடு செய்து செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். இல்லை பரந்தன் ராஜன் ஏற்பாட்டில் இந்த கொலை நடந்தது என்று பலவாறு கட்டுக்கதைகளை இன்றுவரை தங்களுக்கு ஏற்ற மாதிரி எழுதுவது பேசுவது என்று இருக்கிறார்கள். இப்படி எழுதும் பலர் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு பின்பு வவுனியாவில் நடந்த பல கொலைகள் கற்பழிப்புகள் கொள்ளை அடிப்பதற்கு துணை போனவர்கள் மட்டுமல்ல. தங்கள் பங்குக்கு மாணிக்கம் தானுக்கு சமூகத்தில் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் என்பது தான் உண்மை. கொழும்பில் சித்தார்த்தனின் பாதுகாப்பும் ஜேவிபி ஆட்களால் கேள்விக்குறியாக இருந்தபடியால்,மாணிக்கம் தாசன் உட்பட முக்கிய எமது தோழர்கள் சித்தார்த்தனைவெளிநாட்டுக்கு போக சொல்லியிருக்கிறார்கள்.அதேநேரம் அங்கு முள்ளிக்குளம் எமது முகாம் தாக்கப்பட்ட சம்பவம் சம்பந்தமாக மாணிக்கம் தாசன் மேல் சில தோழர்கள் சந்தேகப் பட்டுள்ளார்கள். இந்த சந்தேகத்தை செயலதிபர் ஓடு நெருக்கமாக இருந்த சக்திவேல், முருகேசு போன்றவர்கள் பல தோழர்களிடம் கதைத்து உள்ளார்கள். சரியாக முகாம் தாக்கப்படும் சமயத்தில் அதாவது ஒரு நாள் இரண்டு நாளுக்கு முன் மாணிக்கதாசன் ஏன் கொழும்பு வந்து ஏன் வழமைபோல் உடன் திரும்ப போகவில்லை. அது சம்பந்தமான உண்மையான செய்திகள் இன்றுவரை எனக்கு கிடைக்கவில்லை. அந்த உண்மைகளை யாரும் விபரம் தெரிந்தவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.
சிங்கப்பூரில் நாங்கள் கப்பல் வாங்க கொடுத்த பணத்தின் கடைசி பகுதி திரும்பத் தருவதாக சிங்கப்பூரில் இருந்து தகவல் வந்ததையடுத்து சித்தார்த்தன் செயலதிபர் உமா மகேஸ்வரனின் அனுமதியோடு சிங்கப்பூர் போய் விட்டு திரும்ப இலங்கை போகாமல் இந்தியா வந்து சென்னையில் என்னோடு வடபழனி அலுவலத்தில் தங்கி விட்டார்.
சிங்கப்பூரில் இருந்து வந்த சித்தார்த்தன் கொழும்பில் நடந்த சம்பவங்களை விவரித்துக் கூறினார். அவர் கூறிய சம்பவங்களில் அரைவாசி நான் அங்கு இருக்கும் போது நடந்தவை, கேள்விபட்டவை. மேலும் சித்தார்த்தர் கூறினார். மிஞ்சியிருக்கும் இயக்கத் தோழர்களை வைத்து செயலதிபர் உமா மகேஸ்வரன் தொடர்ந்து இயக்கத்தை நடத்த விரும்பவில்லை. திரும்பத் திரும்ப நீங்கள் எல்லாம் இயக்கத்தை விட்டு போகலாம், தன்னால் மலையகத் தமிழர்களையும் வைத்தும், சிங்கள இடதுசாரிகளின் ஆதரவுடன் புதிய அமைப்பு தான் உருவாக்கப் போவதாகவும் செயலதிபர் உமா மகேஸ்வரன் தோழர்களிடம் கூறியது அவர் உண்மையாகவே அந்த முடிவில் இருப்பதாக தெரிகிறது என்று கூறினார். மிஞ்சி இருக்கும் தோழர்கள் மாணிக்கம் தாசன் உட்பட நாங்கள் இயக்கத்தை விட்டு இனி போவதாயின் செயலதிபருக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு போவதில் உறுதியாக இருப்பதாக கூறினார். மாணிக்கம் தாசன், ஆட்சி ராஜன் தனித்தனியாக தொலைபேசி எடுக்கும்போது இதே கருத்தை தான் கூறினார்கள். தோழர்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, இதே மனநிலையில் தான் தாங்களும் இருப்பதாக கூறினார்கள். நாங்களும் அதே மனநிலையில்தான் இருந்தோம் என்பது உண்மை. எங்களுடன் சபாநாதன் குமார், வேலூரில் மருத்துவ சிகிச்சை எடுத்த பக்தன், அவருக்கு உதவியாக இருந்தவர்களும் செயலதிபர் உமா மகேஸ்வரனின் செயல்களை நாங்கள் கூறும் போது மிகவும் கோபப்பட்டார்கள். பத்தன் தான் இவ்வளவு சூடுபட்டு கஷ்டப்பட்டு இயக்கத்தை விட்டு போவதற்கு தானா என்று கோபப்பட்டார். நான் சித்தாத்தர்ரோடு பேசிக்கொண்டிருக்கும்போது,
"செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு பின்பு இனி இயக்கம் தேவையில்லை. எங்கள் இயக்கம் இனி யாருக்காக போராடப் போகிறார்கள். சுத்தி எதிரிகள்தான். மிச்சமிருக்கும் தோழர்கள் சரி தப்பிப் பிழைத்தும் வீட்டை பார்க்கட்டும்"
என்று கூறினேன். எனது மனக் கணிப்பு இனி இயக்கத்தை நடத்தக்கூடிய ஒரு தலைவர் எங்களிடம் இல்லை என்பதுதான். ஆனால் சித்தார்த்தன் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் இனி திரும்ப லண்டன் போய் வேலை செய்ய முடியுமா.? பார்க்கும் சனம் காரித்துப்பும், உமாமகேஸ்வரன் இல்லாத இயக்கத்தை நல்ல முறையில் நடத்தி நாங்கள் நல்ல ஒரு அரசியல் கட்சியாக வளரமுடியும். இனி ஆயுதப்போராட்டம் இருக்காது. அதோடு இந்திய அமைதிப்படை சிறையிலிருக்கும் எங்கள் தோழர்களை விடுவிக்க வேண்டும். அதே மாதிரி செயலதிபர் உமாமகேஸ்வரன் ஆல் தேவையில்லாமல் மாலைதீவு சிறையிலிருக்கும் தோழர்களை முடிந்தால், விடுதலை செய்ய முயற்சி செய்ய வேண்டும் என சித்தார்த்தன் என்னிடம் கூறினார்.
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு சித்தன்
நானும் சித்தார்த்தனும் முடிந்த அளவு தமிழ்நாட்டு, இந்திய உளவு அதிகாரி களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வவுனியாவில் சிறையில் இருக்கும் எமது தோழர்களை விடுவிக்கும்படி கேட்டபோது, அந்த அதிகாரி வவுனியாவில் எமது இயக்கம் சிங்கள ராணுவ அதிகாரி மேஜர் கொப்பேகடுவ உதவியுடன் செய்யும் அட்டகாசங்களை( புலிகள் இந்தியப்படையோடு போர் தொடுக்கமுதல்) கூறினார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக உங்கள் இயக்கத்தை இலங்கை அரசு பயன்படுத்துகிறது என்று கூறினார். சித்தார்த்தன், இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறினார். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு விடுதலைப்புலிகள் இந்திய ராணுவம் மிக நெருங்கிய நட்பில் இருந்தபோது, மன்னார் வன்னி மாவட்டங்களில் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பல விடுதலைப் புலிகளை அழித்து எமது இயக்கம் பல இடங்களில் முகாம்களை போட்டார்கள். இது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. விடுதலைப்புலிகள் இந்திய அதிகாரிகளிடம் பலமுறை புளொட் இயக்கம் தங்கள் இயக்கத்தின் மேல் தாக்குதல் நடத்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்படுவதாகவும்,புளொட் இயக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் தாங்களும் திரும்ப ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்று பலமுறை கூறியுள்ளார்கள்.
இந்திய அதிகாரிகள் நான் டெல்லியில் இருக்கும்போதும் சரி, சென்னை வந்த பின்பும் சரி எமது செயல் அதிபரிடம் கூறி விடுதலைப்புலிகளுடன் நடக்கும் சண்டையில் நிறுத்தும்படி பலமுறை என்னிடம் கூறியுள்ளார்கள். நான் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் தொலைபேசியில் இதைக் கூறும்போது, செயலதிபர் தன்னை தொடர்பு கொள்ள முடியாது இருப்பதாகக் கூறும் படி என்னிடம் இந்திய அதிகாரிகளிடம் கூறச் சொன்னார். இந்திய அதிகாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் குறிப்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர்அத்துலத்முதலி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உடைப்பதற்கு மறைமுகமாக எமது செயலதிபர் உமா மகேஸ்வரனை பயன்படுத்துவதாக நினைத்தார்கள். அதேநேரம் விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தை அழிக்க இந்திய அதிகாரிகள் புளொட் அமைப்பை பயன்படுத்துவதாக நினைத்தார்கள். உண்மையில் எமது புளொட் தோழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த சண்டை பழிக்குப் பழி வாங்குவது ஆகவே இருந்தது. காரணம் எமது பல முக்கிய தலைவர்களை புலிகள் தேவையற்ற விதத்தில் கொலை செய்தது எமது தோழர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
நானும் சித்தார்த்தரும் இந்திய , தமிழ்நாட்டு அதிகாரிகளை சந்தித்துப் பேசும்போது, நட்பு ரீதியில் அவர்கள் கேட்கும் கேள்வி உங்கள் இயக்கம் உண்மையில் யாருடன் சண்டை போடுகிறது. உங்கள் இயக்கத்தின் நோக்கம் என்ன? உங்கள் இயக்கம் நீங்களெல்லாம் இந்திய அரசுக்கு எதிராக இருப்பதாகவும், இலங்கை அரசோடு நெருக்கமாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அப்படி இருந்தும் உங்களது தோழர்கள் இருந்த பெரிய முகாமை விடுதலைப் புலிகள் தாக்கி அழிக்கும் போது இலங்கை ராணுவம் தானே விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தது. இலங்கை அரசோடு குறிப்பாக இலங்கைபாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியோடு மிக நெருக்கமாக இருந்தும் ஏன் உங்கள் தோழர்களை உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்விக்கே எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. (அவருக்கு அத்துலத் முதலி பிரேமதாச உள்வீட்டுச் சண்டை தெரியாது)
கொழும்பிலிருந்து ஆட்சி ராஜன் மூலம், மாணிக்கம் தாசன் மூலம் வந்த செய்திகள் ஆச்சரியமாக இருந்தது. செயலதிபர் உமாமகேஸ்வரன் மிக மிக ரகசியமாக வெளிநாட்டுக்கு முஸ்லிம் பெயரில் ஓர் இலங்கை பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு விரைவில் வெளிநாட்டுக்கு போவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக. அப்படி அவர் வெளிநாட்டுக்கு போது ஆயின் அதற்கு முதல் தாங்கள் அவர்மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஆட்சி ராஜன் நேரடியாகவும், மாணிக்கம் தாசன் பெரியவர் (உமா மகேஸ்வரன்) இயக்கத் தோழர்களை விட்டு விட்டு வெளிநாட்டுக்கு போக விடக்கூடாது என்றும் கூறினார் திடீரென ஒருநாள் இரவு 13/07/1989 கொழும்பில் இருந்தும், இந்திய raw உளவுத்துறை அதிகாரிகளும் ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறினார்கள் கொழும்பில் விடுதலைப் புலிகள் அமிர்த லிங்கத்தையும் கூட இருந்த தமிழ் தலைவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டதாக, நம்ப முடியாவிட்டாலும் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இரவிரவாக நானும் சித்தார்த்தனும் கொழும்புக்கு தொலைபேசி எடுத்து உண்மையை அறிந்தோம். இருவரும் அமிர்தலிங்கத்தை பற்றிய பழைய கதைகளை பேசிக்கொண்டு கவலையோடு இருந்தோம்.
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் படுகொலை எங்களைவெகுவாகப் பாதித்திருந்தது. அமிர்தலிங்கத்தை பற்றிய பலவித மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், அன்றைய நிலையிலும் சரி, அதன் பிறகு இன்றுவரை ஈழத்தமிழர்களின் பிரச்சனையை தெள்ளத்தெளிவாக, வரலாற்று ரீதியாக சர்வதேச மட்டத்தில் எடுத்து வைக்கக்கூடிய ஒரு தலைவர் இல்லை என்பதே என் கருத்து. தமிழீழ விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கம் போன்ற, திறமையான தமிழர் தலைவர்களை அழித்தொழிக்க இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா கொழும்பில் பல உதவிகள் செய்துள்ளார். அதற்கு அப்பொழுது பேசப்பட்ட காரணம் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் இருக்கும் வரை இந்தியா சமாதான பேச்சுக்களை ஏற்படுத்தி இலங்கையில் தலையிடாக் கூடிய சந்தர்ப்பம் இருக்கும் என்று.இப்படியாக துரோகி என்று கூறி தமிழ் தலைவர்களையும், சிந்திக்கக்கூடிய புத்திஜீவிகளையும் படுகொலை செய்வது நாங்கள் நேரடியாக இலங்கை சிங்கள அரசுக்கு, ( அதாவது சிங்கள அரசு தான்செய்ய வேண்டியதை எமது தமிழ் விடுதலை இயக்கங்களை கொண்டு கொலை செய்தது) உதவி செய்வதாகவே அமைந்தது. அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களை தமிழ் விடுதலை இயக்கங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பது என் கருத்து. இந்திராகாந்தி காலத்தில்,இந்தியா அமிர்தலிங்கத்தை முன்னிறுத்தி , ஒரு சிறந்த தீர்வு திட்டத்தை முன்னெடுக்கப் போவதாக பெரியவர் ஜி பார்த்தசாரதி எல்லா இயக்கத்தலைவர்களிடமும் தெள்ளத்தெளிவாக தெரிவித்த பின்பு, எல்லா விடுதலை இயக்கங்களும் அமிர்தலிங்கத்தை ஒதுக்கி, எதிரியாகப் பார்த்தார்கள். எல்லா விடுதலை இயக்கங்களும் அமிர்தலிங்கத்தை விட தாங்கள் தான் இந்தியாவுக்கு மிக விசுவாசியாக இருப்பதாக காட்டிக்கொள்ள எத்தனை எத்தனை நாடகம் போட்டார்கள்.
சித்தார்த் தரும், நானும கொழும்பிலிருந்து ஆட்சி ராஜன் இடமும் மாணிக்கம் தாசன் இடமும் அடிக்கடி தொடர்பு கொண்டோம்.. அப்பொழுது ஆட்சி ராஜன் உமாமகேஸ்வரனும், தானும் கொழும்பில் அமிர்தலிங்கத்தின் செத்த வீட்டுக்கு போனதாகவும், திரும்ப வரும்போது, செயலதிபர் படபடப்பாக இருந்ததாகவும் தங்களை பாதுகாப்பு பற்றி எச்சரிக்கை செய்ததாகவும் கூறினார். அவர் பயந்த காரணம் பிரேமதாசா. அத்துலத்முதலி க்கும் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு ம் இருந்த நட்பு முதலில் இருந்தே பிரேமதாசாவுக்கு பிடிக்கவில்லை என்று கதை இருந்தது. கூடுதலாக ஆட்சி ராஜன் முக்கிய விஷயத்தை கூறினார்.18/07/1989 காலை 10 மணிக்கு சிங்கப்பூர் போகும் விமானத்தில் உமா மகேஸ்வரன், முஸ்லிம் பெயரில் சிங்கப்பூர் பயணம் போகப் போவதாகவும், சிங்கப்பூர் போக அவர் ஒரு வழிப்பாதை டிக்கெட் எடுத்து (one-way), தங்களுக்கும் தெரியாமல் அங்கிருந்து வேறு நாட்டு போவதற்கு தனியாக ரகசியமாக ஒரு டிக்கெட் வைத்துள்ளார் என்றும் எந்த நாடு என்று தங்களால் அறிய முடியவில்லை என்றும் கூறினார். 18ஆம் தேதிக்கு முன்பு அவருக்கு இயக்க முக்கிய தலைவர்கள் முடிவு செய்தபடி மரண தண்டனை வழங்கப்படும் என்று கூறினார். மாணிக்கம் தாசன் தொலைபேசி எடுத்து செயலதிபர் வெளிநாடு போவது குறித்து உறுதி செய்தார். அத்தோடு மாணிக்கம் தாசனுக்கு ஒரு சந்தேகம். செயலதிபர் உமா மகேஸ்வரனுக்குமேல் நடவடிக்கை எடுக்கும் போது, ஆட்சி ராஜன் தன்னையும் சுடலாம் என்று. சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் இடம் அப்படி ஒன்றும் நடக்காது, வேண்டுமென்றால் தாசன் போய் வவுனியாவில் இருக்கும்படியும், உமா மகேஸ்வரன்சம்பவம் நடந்த பின்பு கொழும்பு வந்து அடுத்த நடவடிக்கைகளை தொடரும் படியும் கூறினார். சித்தார்த்தர் இந்த சமயம்தான் இந்தியாவில் இருக்க விரும்பவில்லை என்று கூறி, அமிர்தலிங்கத்தின் செத்த வீட்டுக்கு யாழ் போகப் போவதாக கூறி, அதற்குரிய ஏற்பாடுகளை செய்து இந்திய ராணுவ அமைதிப்படை விமானத்தில் சித்தார்த்தரை யாழ் அனுப்பினேன்.15, அல்லது 16ஆம் தேதி என்று நினைக்கிறேன், ஆட்சி ராஜன் தொலைபேசி எடுத்து சித்தாத்தர் இடம் பேசவேண்டும் என்றார். நான் சித்தார்த்தர் யாழ் போனா விடயத்தை கூறினேன். ஆட்சி ராஜன் சித்தார்த்தன் புத்திசாலித்தனமாக யாரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளமுடியாத இடத்துக்குப் போய் விட்டதாக கூறினார். மேலும் ஆச்சி ராஜன் எனக்கு புதிதாக ஆச்சரியப்படத்தக்க விஷயங்களை கூறினார். காருடன் காணாமல் போன செயலதிபர் உமா மகேஸ்வரனின் பாதுகாவலரும் , வாகன சாரதி யாக இருந்தவருமான தோழர் இராபினை மாணிக்கம் தாசன் ரகசியமாக கொண்டு வந்து தன்னிடம் ஒப்படைத்ததாகவும், ராபினாய் கூடபயன் படுத்திக்கொள்ளும்படி தன்னிடம் கூறியதாகவும் கூறினார். உண்மையில் செயலதிபர் உமாமகேஸ்வரநுக்கும், இராபினுக்கும் கடும் பிரச்சனை வந்தவுடன் மாணிக்கம் தாசன், காருடன் ராபின்னை கூட்டிப்போய் மிக இரகசியமாக நம்பிக்கையான சிங்கள நண்பரிடம் ஒப்படைத்துள்ளார். காரை விற்று விட்டார். யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. பின்னாட்களில் ராபின்மிக விபரமாக இந்த விடயத்தை எங்களிடம் கூறினார். சுவிஸில் இருக்கும்போது இந்த பல உண்மைகளை ராபின் பகிரங்கமாக பல பேருடன் கூறி திரிந்ததால் அவர் கொலை செய்யப்பட்ட முக்கிய காரணமாயிற்று.
இதேநேரம் மாணிக்கம் தாசனும் சித்தருடன் அவசரமாக பேச வேண்டும் என்று கூறினார், சித்தர் யாழ் போன விஷயத்தை கூறி, என்ன விபரம் என கேட்க, தான் உடனடியாக வவுனியா போவதாகவும் அங்கிருந்து தொடர்பு கொள்வதாகவும் கூறினார். 17/07/1989 அன்று மதியம் ஆட்சி ராஜன் தொலைபேசி எடுத்து, சித்தார்த்துக்கு சில தகவல்கள் கூறமுடியுமா எனக்கேட்டார், நான் எந்த வசதியும் இல்லை என்று கூறினேன். நாளை காலை செயலதிபர் வெளிநாட்டுக்கு போகப் போகிறார். அவருக்கு எதிரான சம்பவம் இன்று நடக்கும் என நினைக்கிறேன். எமது இராணுவத்தளபதி மாணிக்கம் தாசன் பச்சைக்கொடி காட்டி விட்டு வவுனியா போய்விட்டார். செயலதிபர் தனது அதிஉயர் ராணுவபாதுகாப்பு இருந்த இடத்திலிருந்து சில பயணம் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளுக்காக தங்களுடன் பம்பலப்பிட்டி தொடர் அடுக்குமாடி குடியிருப்பில் வந்து தங்கள் பாதுகாப்பில் தங்கியுள்ளதாகவும், தனக்கு மிக கவலையாக இருப்பதாகவும், ஆனால் இயக்க நன்மைக்காக இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் எடுத்த முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக கூறினார். மாணிக்கம் தாசன் வவுனியா போக முன்பு, லண்டன் கிருஷ்ணன் தமிழ்நாடு வந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள சவேரா ஹோட்டலில் தங்கியிருந்தார். எனக்கு போன் எடுத்து கொழும்பில் எதுவும் விசேஷம் என்றால் தனக்கு உடனடியாக கூறும்படி கூறினார். ஆட்சி ராஜன் கூறியதைக் கேட்ட எனக்கு மிக கவலையாக இருந்தது. செயலதிபர் உடன் பழகிய நாட்கள், தனிப்பட்ட முறையில் அவரின் நல்ல குணங்கள் எல்லாம் மனக்கண்முன் வந்து போயின. ஆனாலும் விடுதலை இயக்கத் தலைவர் என்ற முறையில் அவர் நடந்து கொண்ட முறைகள், சிங்கள அரசின் பாதுகாப்பு அமைச்சரின் நட்பை பெற்றுக் கொண்ட பின்பு அவரின் நடவடிக்கைகள் இயக்கத்தையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுப்பது ஆகவே இருந்தது. திறமை மிக்க தலைவன் என்ன காரணத்துக்காக இந்த நிலையை எடுத்தார். சென்னை தாஜ் ஓட்டலில் இலங்கை தூதுவர் அறையில் என்ன நடந்தது. தாஜ் ஓட்டல் சந்திப்புகளுக்கு பின்புதான் அவர் முற்றுமுழுதாக இலங்கை அரசின் ஆதரவாளராக ரகசியமாக மாறிப்போனார் என்பதுதான் உண்மை. இந்த பல உண்மைகள் பல பேருக்கு தெரியாது. தெரிந்த சிலரும் இதைப்பற்றி பேச விரும்பவில்லை.
இரவு பத்து பதினோரு மணி போல் ஆட்சி ராஜன் தொலைபேசி எடுத்து இருக்கிறார் ஆனால் தொலைபேசி உரிமையாளர் எமது வீட்டு ஓனர் என்னிடம் கொடுக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் காலை தொலைபேசி எடுக்க சொல்லியுள்ளார். ஆட்சி ராஜனும் அவரிடம் காலையில் என்னிடம் கூறும்படி ஒரு செய்தி சொல்லி இருக்கிறார். இரவு எட்டு மணி போல் அந்த சம்பவம் நடந்து விட்டது என்று கூறும்படி கூறியுள்ளார். காலையில வீட்டு உரிமையாளர் ஆட்சி ராஜனின்தொலைபேசி செய்தியை கூறகேட்டு, எதிர்பார்த்த செய்தி என்றாலும் மிக அதிர்ச்சியாகவும் கவலையாகவும்
உமா மகேஸ்வரனின் கொலை பற்றி எத்தனை எத்தனை வதந்திகள் கட்டுக்கதைகள். பரந்தன் ராஜன் கொலை செய்தார். இந்திய raw உளவுத்துறை கொலை செய்தது போன்ற பல கட்டுக்கதைகளை கொலை செய்தவர்களே அதாவது அந்த கொலையால் லாபம் அடைந்தவர்களே பரப்பிவிட்டார்கள். காரணம் தாங்கள் சம்பந்தப்பட்டிருப்பது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக. ஆனால் இப்பொழுது சிலர் மாணிக்கம் தாசன் உமா மகேஸ்வரனின் விசுவாசி, சித்தார்த்தன் நேர்மையானவர் நீங்கள் எழுதுவது பொய் என்று கூறுகிறார்கள். இந்த ஆயுதம் தூக்கிய விடுதலை இயக்கங்களில் யார்யார்க்கும் யாரும் விசுவாசியும் இல்லை நம்பிக்கையாளர்களும் இல்லை. எல்லா இயக்கங்களிலும் இது தான் உண்மை.
காலை 9 மணி போல் ஆட்சி ராஜன் தொலைபேசி எடுத்து, நீண்ட நேரம் பேசினார். தொலைபேசியில் பேசியது மட்டுமல்ல பின்பு நேரடியாக சந்தித்தபோது கூறிய சம்பவங்களையும் இதில் எழுதுகிறேன்.மறைந்த செயலதிபர் உமா மகேஸ்வரன் பகல் பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பகல் உணவாக வெஜிடபுள் புலாவ் கேக்க, முட்டை பிரியாணி வாங்கி கொடுத்திருக்கிறார்கள். செயலதிபர் வழமையாக பம்பலப்பிட்டி தொடர் மாடியில் வந்து தங்கி இருந்து போகும் போது. இரவில் கடற்கரை அருகே நடைப்பயிற்சியில் இருந்து விட்டு தான் போவாராம். அவருக்குத் துணையாக ஆட்சி ராஜன் அல்லது ராபின் அல்லது சக்திவேல் கைத்துப்பாக்கியுடன் போவார்களாம். செயலதிபர் தன்னுடன் கூட அவர்களை வரவிடாமல், குறைந்தது 100 யார் தொலைவில் பின்னால் வர சொல்லுவாராம். காரணம் இவர்களை வைத்து தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் என்று. செயலதிபர் கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம் அடையாளத்துடன் தனியாக போய் வருவாராம். ராபின் இவரை விட்டு ஓடிவிட்டான். உமா மகேஸ்வரனின் கெட்ட நேரம் என நினைக்கிறேன், சக்திவேல் அப்போது ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருக்கிறார். சக்திவேல்சிறையிலிருந்து இருக்காவிட்டால் உமா மகேஸ்வரனின்மரண தண்டனையும் நடந்தே இருக்காது. தடுத்துவிட்டு இருப்பார். இரவு எட்டு மணி போல் தூரத்தில் ஆட்சி ராஜன் பின்தொடர, கைகளில் முஸ்லிம் பெயரில் பாஸ்போர்ட் அடுத்த நாள் பயணம் போக வேண்டிய விமான டிக்கெட்டுகள் உடன் நடைப்பயிற்சியில் இருந்த செயலதிபர் திடீரென ஆட்சி ஆட்சி என்ற கத்தியுள்ளார். திட்டமிட்டபடி எதிர்த்திசையில் நான்கு இயக்கத் தோழர்கள்திடீரென தோன்றி,அதில் ஒருவர் உமாமகேஸ்வவரணை இரண்டு மூன்று முறை நெஞ்சில் சுட்டுள்ளார். முகம் குப்புற விழுந்ததில் முகத்தில் சிறு அடிகள் பட்டுள்ளது.சில பேர் எழுதிய படி முகத்தை சிதைத்து உள்ளார்கள், சடலம் ரெண்டு நாட்கள் அனாதையாகக் கிடந்தது என்ற கட்டுக்கதை எல்லாம் பொய். ஆட்சி ராஜனும், மற்ற நால்வரும் உடனடியாக காலி வீதிக்கு வந்து, போலீசாருக்கு குறிப்பிட்ட இடத்தில் ஒரு சடலம் கிடப்பதாக தொலைபேசி மூலம் கூறியுள்ளார்கள். அதேநேரம் துப்பாக்கி சத்தம் கேட்ட தூரத்தில் இருந்த சிலரும் போலீசாருக்கு அறிவித்துள்ளார்கள். போலீசார் வந்து உமா மகேஸ்வரனின் சடலத்தை எடுக்கும் வரை ஆட்சி ராஜனும் , மற்ற தோழர்களும் தூரத்தில் வேறு வேறு இடங்களில் ஒளிந்து இருந்து தாங்கள் பார்த்ததாக கூறினார்கள். காரணம் தங்கள் அன்புக்குரிய தலைவரை அனாதைப் பிணமாக அந்த இடத்தில் விட்டுப்போக தங்களுக்கு மனம் வரவில்லை என்று கூறினார்கள். அடுத்த நாள் காலையில் இயக்கத்தின் நேர்மையான எந்தவித பதவி இழக்கும் ஆசைப்படாத ஆனந்தி அண்ணாவிடம் போய் தங்கள் 10 பேர் செயலதிபர் உமாமகேஸ்வரன் இரவு சுட்டுக் கொன்றதாகவும், சடலம் போலீசார் எடுத்து போய் விட்டார்கள் என்றும் கூற, முதலில் நம்பாத ஆனந்தி அண்ணர் பின்பு நிலைமையை உணர்ந்து உடனடியாக செயலதிபர் இன் மனைவியிடம் போய் கூறி, போலீஸ் நிலையம் போய் , உண்மை நிலையை அறிந்து இருக்கிறார்கள். ஆட்சி ராஜன் தொலைபேசி மூலம் வவுனியாவில் இருந்த மாணிக்கம் தானுக்கும் விபரத்தைக் கூறி, பின்பு அந்த நேரம் வவுனியாவில் செயலதிபர் ஒருவேளை தொடர்பாக போயிருந்த முருகேசுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக கொழும்பு வந்து ஆனந்தி அண்ணாவுக்கு உதவி செய்யச் சொல்லி உள்ளார். முதலிலேயே மாணிக்கம் தாசன் சித்தார்த்தன் மற்றும் கொழும்பில தோழர்கள் எடுத்த முடிவுகளை அரசல்புரசலாக அறிந்து இருந்த முருகேசு, கவலைப்பட்டாலும், விதிதான் என்று கூறிவிட்டு உடன் கொழும்புவருவதாக கூறியுள்ளார் ஆட்சி ராஜன் இடம் ஏன் நீங்கள் போய் ஆனந்தி அண்ணாவிடம், நாங்கள்தான் செய்தோம்., என்று கூறினீர்கள். நீங்கள் ஏன்உங்கள் தலையில் மண்ணை போட்டுக் கொண்டீர்கள் என்று நான் கோபப்பட்டேன். செயலதிபர் ஐ காணவில்லை, என்று கூறி தேடிவிட்டு, போலீசில் புகார் செய்து இருக்கலாம். கடைசியில் விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று இருப்பார்கள், அல்லது இலங்கை அரசாங்கத்தின் பச்சை புலிகள் இயக்கம் கொண்டிருக்கும் என்று முடிவாக இருக்கும் என்று கூறினேன். அப்பொழுதுதான் ஆட்சி ராஜன் சில விஷயங்களை கூறினார். அதுவரை எனக்கு இந்த விடயங்கள் தெரியாது. கொழும்பில் வைத்து மாணிக்கதாசன் சித்தார்த்தன் போன்றவர்கள் ஆட்சி ராஜனிடம் கதைக்கும் போது செயலதிபர்உமா மகேஸ்வரனுக்கு மரணதண்டனை கொடுத்துவிட்டு, கட்டாயம் நீங்கள் 10 பேர் போய், ஆனந்தி அண்ணர், திவாகரன் போன்றவர்களிடம் இயக்கமே தான் அவருக்கு மரண தண்டனை கொடுத்தது அவர் விட்ட தவறுகளுக்காக என்று கூற வேண்டும் என்று கூறியுள்ளார் கள். அதோடு மாணிக்கம் தாசன் தான் புளொட் ராணுவ தளபதியாக பொறுப்பாக இருக்கும் போது வேறு இயக்கம் எங்கள் செயலதிபர் கொன்றார்கள் என்று செய்தி வந்தால் தனக்கு அவமானம் என்று கூறியுள்ளார். மாணிக்கம் தாசன் மனநிலைதான் தனக்கும் இருந்ததாக ஆச்சி ராஜன் கூறினார். சித்தார்த்தன் உமா மகேஸ்வரனின் மரணதண்டனைக்கு பின்பு அடுத்தகட்டமாக எல்லா இயக்கத் தோழர்களையும் அழைத்து, எங்கள் இயக்க செயலதிபர் உமா மகேஸ்வரனின் தவறான நடவடிக்கைகள் அவர் இயக்கத்துக்கும் இயக்கத் தோழர்களுக்கும் செய்த துரோகங்கள், மற்றும் இலங்கை அரசோடு சேர்ந்து குறிப்பாக லலித் அத்துலத்முதலி யோடு சேர்ந்து தமிழினத்துக்கு செய்த துரோகங்கள் போன்றவற்றை கூறி, எங்கள் இயக்கமே நமது செயல் அதிபருக்கு மரண தண்டனை கொடுத்தது என்று கூறினால் அது ஒரு சரித்திரமாக இருக்கும், எல்லா விடுதலை இயக்க தலைவர்களும் இனிமேல் தவறு செய்ய பயப்படுவார்கள் என்று கூறி ஆட்சி ராஜனை மூளைச்சலவை செய்து உள்ளார்கள். தாங்கள் தான் செய்ததாக 10 பேரின் பெயரை கூறும் போது, சித்தார்த்தனும், மாணிக்கம் தாசனும் தங்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் என்றும், காரணம் தோழர்கள் முன் விசாரிக்கும்போது தாங்கள் நடுநிலையாக இருந்து விசாரிப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். எக்காரணம் கொண்டும் சம்பவ இடத்தில் இருந்தவர்களில் தனிப்பட்ட பெயர்கள் வெளியில் வரக்கூடாது. காரணம் எமது இயக்கமே முடிவெடுத்து மரண தண்டனை கொடுத்ததாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளதை ஆட்சி ராஜன் கடைசி வரை கடைபிடித்தார். ஆட்சி ராஜன் சித்தர் ,மாணிக்கம் தாசன் கூறிய படி தான் நினைத்திருந்த பத்து பேர்களில் மாறன், துணை ராணுவ தளபதி காண்டீபன், தராக்கி சிவராம் போன்றவர்களின் பெயர்களை இதில் சேர்க்கவில்லை. காரணம் தோழர்களின் கூட்டத்தில் இவர்கள் சித்தார்த்தன் மாணிக்கம் தாசனுக்கு ஆதரவாக நடுநிலையாக இருந்து பேசுவார்கள். அவர்களும் நாங்கள் நடந்த உண்மைகளை கூறுவோம் என்று கூறியுள்ளார்கள். ஆனந்தி அண்ணனிடம் போய் சொல்லும்போது ஆட்சி ராஜன் தனது பெயரையும், , அதோடு செயல் அதிபரின் தவறான நடவடிக்கைகளால் கோபப்பட்டு கொழும்பில் இருந்த கழக முக்கியஸ்தர்களான மதன், K.L ராஜன், ஜெயா, ராபின்போன்றவர்களின் பெயரையும் அதோடு தனது கழக ரகசிய வேலைகளுக்கு உதவியாக இருந்த ஜூட், மற்றும் துரோணன் என்பவரின் பெயரையும் சேர்த்து கூறி உரிமை கூறியுள்ளார்கள். உண்மையில் நடக்கப்போகும் சம்பவங்களை நான் உட்பட கடைசிவரை அறிந்தவர்கள் மொத்தமே நான்கு பேர்தான். ஆட்சி ராஜன், , மாணிக்கம் தாசன், சித்தார்த்தன், மற்றது நான்.சித்தார்த்தன் இந்தியாவில் வந்து தங்கியிருந்த படியால் எனக்கு முழு விபரங்களும் தெரிந்தது. எனக்கு தெரிய வேண்டி வந்த காரணம் மாணிக்கம் தாசன் ஆட்சி ராஜன் சித்தார்த்தன் இற்கு தொலைபேசி எடுக்கும்போது கூடுதலாக முழு விபரங்களும் நான்தான் கேட்டுள்ளேன். ஆட்சி ராஜன் சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் பேச்சை கேட்டு நம்பி ஏமாறாமல் இருந்தாள் இன்று இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்திருப்பார்கள். அல்லது சித்தார்த்த மாணிக்கம் தாசனும் தாங்கள் ஆட்சி ராஜனுக்கு கூறிய படி உடனடியாக கழகத் தோழர்களை அழைத்து நடந்த விஷயங்களை கூறி செயலதிபர் மா மகேஸ்வரனின் கொலையை கழகம் பொறுப்பு எடுத்து இருந்தால் இன்று எல்லோரும் கழகத்தில் ஒற்றுமையாக நல்லமுறையில் இயக்கத்தை வழிநடத்தி இருப்போம். அன்றிலிருந்து இன்றுவரை உண்மைகளை தெரியாமல் பலர் பேர்கள் சுய தேவைக்காக ஆட்சி ராஜனும் நண்பர்களும் செயலதிபர் உமா மகேஸ்வரனை கொலை செய்து விட்டதாக எழுதி வருகிறார்கள். அதோடு இதற்குப் பின்புலமாக இந்திய Raw உளவுத்துறை இருந்ததாக நீண்ட கதை வசனம் எழுதுகிறார்கள். செயலதிபர் உமாமகேஸ்வரன் வெளியுலகத்துக்கு பிரபாகரனுக்கு நிகரான ஒரு தலைவர். அவரை கொலை செய்துவிட்டு பெருமையாக யாரும் தேவை இல்லாமல் நான்தான் கொலை செய்தேன் என்று பின்விளைவுகளை ஆராயாமல் கூறமாட்டார்கள். அதோடு ஒரு உளவுத் துறையின் ஏற்பாட்டில் நடந்திருந்தால் கடைசிவரை கொலை செய்தவர்களின் பெயர் வெளி வந்து இருக்காது, அப்படி வந்திருந்தாலும் அதை மறைக்க அந்த உளவுத்துறை அவர்களையும் கொலை செய்து இருக்கும்.
வெற்றிச்செல்வன் அப்பிரண்டீஸிலிருந்து அப்புரூவர் From Apprentice to Approver
இந்த கொலையால் ஆதாயம் பெற்றவர்கள் சித்தார்த்தனும் மாணிக்கம் தாசனும் மட்டுமே. இவர்கள் இருவரின் நம்பிக்கை துரோகத்தால் ஆட்சி ராஜன், , மற்றும் பெயர் கொடுக்கப்பட்ட 6 பேரின் பெயர்களும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டது. அதோடு தங்களுக்கு இந்த கொலையில் உள்ள நேரடி சம்பந்தத்தை மறைக்க ரபினையும் அவரின் மனைவியையும் ஸ்விஸ் நாட்டில் வைத்து கொலை செய்தார்கள்.அன்று சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் கூறியபடி செயலதிபர் உமா மகேஸ்வரனை கொலை செய்துவிட்டு ஆனந்தி அண்ணாவிடம் ஏழு பெயர்களின் பெயரைக் கூறி உரிமைகோரி இருக்காவிட்டால், என்ன நடந்தது என்று யாருக்கும் தெரிந்திருக்காது. கடைசியில் சந்தர்ப்பத்திற்காக விடுதலைப் புலிகளின் தலையில் செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலையும் விழுந்திருக்கும். இன்றுவரை இந்தக் கொலையைப் பற்றி எழுதும் பலர் ஏன் இவர்கள் போய் ஆனந்தி அண்ணாவிடம் ஏழு பேரின் பெயரை கொடுத்து உரிமை கோரினார்கள் என்று ஆராயவில்லை. இதுதான் உண்மையில் நடந்த விடயங்கள்.
ஒரு கொலையை செய்துவிட்டு, அதுவும் ஒரு இலங்கை தமிழ் மக்களிடையே பிரபல்யமான ஒரு தலைவரை யாராவது போய் நாங்கள் தான் மரணதண்டனை கொடுத்தோம், தலைவருக்கு நெருக்கமான நம்பகமான தோழர்கள் கூறுவார்களா? விளைவுகள் பற்றி அவர்களுக்குத் தெரியாதா? கொழும்பில் கூடி முடிவெடுத்த முன்னணி தோழர்கள் புளொட் ராணுவத் தளபதி மாணிக்கம் தாசன், அரசியல் கட்சித் தலைவர் சித்தார்த்தன் உட்பட போட்ட திட்டத்தின்படி தான் ஆட்சி ராஜன் ஆனந்தி அண்ணனிடம் பெயர்களைக் கூறி உரிமை கோரியது. சிறந்த ஆயுத வீரனான மாணிக்கம் தாசன் ஆட்சி ராஜனை விட பல மடங்கு பலம் பொருந்தியவர். திறமைசாலி. மாணிக்கம் தாசனை எதிர்த்துக்கொண்டு ஆட்சி ராஜனால் ஒன்றும் செய்திருக்க முடியாது. அன்று எமது இயக்கத்தின் இரண்டு பெரும் தூண்கள் மாணிக்கம் தாசன், சித்தார்த்தன் , மற்றும் பல முன்னணி தோழர்களின் ஆதரவு இருந்தபடியால் தான், ஆட்சி ராஜனும், மற்றும் 6 பேரும் தங்கள் பெயரில் செயலதிபர் இன் மரணதண்டனையை தங்கள் பெயரில் பொறுப்பெடுத்துக் கொள்ள சம்மதித்தார்கள் என்பதுதான் உண்மை. இவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இந்த கொலையே நடந்திருக்காது என்பது தான் உண்மை.
வவுனியாவில் இருந்து கொழும்பு வந்த சாம் முருகேசு முதலில் ரகசியமாக ஆட்சி ராஜனை சந்தித்துள்ளார். வவுனியாவில் இருக்கும் தோழர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலையில் மாணிக்கம் தாசன் மேல் சந்தேகம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அது எப்படி முள்ளிக்குளம் முகாம் தாக்கப்பட முன்பு கொழும்பு போயுள்ளார். அதுபோல் செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்படும் முன் வவுனியா வந்துவிட்டார். என்று பல தோழர்கள் கதைத்து உள்ளார்கள் என்று கூறியுள்ளார். பின்பு சாம் முருகேசு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி உடனும், முன்பு சென்னையில் தூதுவராக இருந்த திச ஜெயக்கொடி உதவியுடன் உமா மகேஸ்வரனின் உடலை வானூர்தியில் எடுத்துச் சென்று, வவுனியாவில் இலங்கை இராணுவ majar கொப்பேகடுவ இன் உதவியுடன் தோழர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
சென்னையில் 18/07/1989 பகல் வரை உமாமகேஸ்வரன் கொலை பற்றி எந்த செய்தியும் வந்திருக்கவில்லை. நான் உடனடியாக மத்திய மாநில, இந்திய ராணுவ உளவு அதிகாரிகளை சந்தித்து, கொழும்பில் நேற்று இரவு எமது இயக்க செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வந்துள்ளது என்றும், மேற்கொண்டு ஒரு விபரங்களும் தெரியவில்லை என்று கூறினேன். அதோடு யாழ்ப்பாணத்தில் அமிர்தலிங்கத்தின் செத்த வீட்டில் இருக்கும் சித்தார்த்தன் அவர்களுக்கும் இச்செய்தியை கூறி அவரை உடனடியாக இங்கு வர சொல்லியும் அவர்களிடமே கூறினேன். வேலூரில் இருந்த தோழர்களுக்கும் தொலைபேசி மூலம் செய்தியை கூறினேன். சபாநாதன் குமார்தான் பேசினார். அவர் பட்ட சந்தோசம் கூற முடியாது. தான் உடனடியாக சென்னை வருவதாக கூறினார். வேலூரில் மருத்துவ சிகிச்சையில் இருந்த பத்தன் உட்பட எல்லா தோழர்களும் கேக் வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள். மாலையில் சென்னை சவேரா ஓட்டலில் தங்கியிருந்த லண்டன் கிருஷ்ணனுக்கு தகவலை சொன்னேன். அவர் உடனடியாக ஆட்டோ பிடித்து தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார். நான் அவரை போய் பார்த்தபோது சந்தோசத்தில் கைகொடுத்து, மாணிக்கம் தாசன் சாதித்து விட்டான் என்று கூறினார். லண்டன் கிருஷ்ணன் எனக்கு செலவுக்கு பணமும் கொடுத்து சந்தோஷத்தை கொண்டாடினர்.
அன்று மாலை பத்திரிகைகளில் அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் உமாமகேஸ்வரன் கொலை பற்றி செய்தி வந்திருந்தது. பத்திரிகை நிருபர்கள் வந்து விபரம் கேட்டபோது அதுபற்றிய முழு விபரங்களும் எனக்கு தெரியவில்லை, அப்படி நடந்திருந்தால் விடுதலைப் புலிகள் மேல்தான் சந்தேகம் இருக்கிறது விபரங்கள் தெரிந்தவுடன் அறிக்கை கொடுக்கிறேன் என்று கூறிவிட்டேன். வவுனியாவிலிருந்து மாணிக்கம் தாசன் தொலைபேசி எடுத்தார். உடனடியாக சித்தார்த்தனை வவுனியா வரும்படியும், தோழர்கள் தன்னை உட்பட எல்லோரையும் சந்தேகிக்கிறார்கள். இப்ப நிலைமையை கவனமாக கையாள வேண்டும். நீ அவசரப்பட்டு இயக்கம்தான் அவருக்கு மரண தண்டனை கொடுத்தது என்று அறிக்கைகள் எதுவும் கொடுக்க வேண்டாம். இப்போ இருக்கும் சூழ்நிலையில் இயக்கத் தோழர்களை கூட்டி,செயலதிபர் இன் கடந்தகால தவறுகளை கூறி வவுனியாவில் இருக்கும் தோழர்களை சமாளிக்க முடியாது. என்னை அடக்கி வாசிக்கும்படி கூறினார். இதற்கிடையில் இலங்கையில் ஜனாதிபதி பிரேமதாசா திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினார். உமாமகேஸ்வரன் உயிருடன் இருக்கும் வரை மறைமுகமாகஉமா மகேஸ்வரனுக்கு எதிராக இருந்த பிரேமதாசா, உமா மகேஸ்வரனின் மரணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். டிவியிலும் ரேடியோவிலும் ஒரு மணித்தியாலத்துக்கு ஒருமுறை உமா மகேஸ்வரனின் புகழ் பாடியுள்ளார். சிங்களவர்களின் நண்பன். இந்திய அமைதிப் படைக்கு எதிராக குரல் கொடுத்த முதல் தமிழ் விடுதலை இயக்கத் தலைவர், என்பது போன்ற பல பிரச்சாரங்கள் இலங்கை டிவியிலும் ரேடியோவிலும் நடந்ததாக கூறினார்கள்.
அதேநேரம் பிரேமதாசா சித்தார்த்தனை தேடியுள்ளார். சித்தார்த்தன் இந்தியாவில் இருந்த படியால், சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதரகத்திற்கு தகவல் கொடுத்து, அப்போது இருந்த முதன்மை செயலாளர் அமரசேகர சித்தார்த்தனை உடனடியாக தன்னை வந்து சந்திக்கும்படி என்னிடம்கூறினார். வவுனியாவில் மேஜர் டென்சில் கொப்பேகடுவ அவர்களை தொடர்பு கொண்ட ஜனாதிபதி பிரேமதாசா மாணிக்கம் தாசனுக்கு தகவல் அனுப்பியுள்ளார். இயக்கத்தை தொடர்ந்து நடத்த பணமும் ஆயுதங்களும் தருவதாகவும் கூறியுள்ளார். இப்படியான ஜனாதிபதி பிரேமதாசாவின் நடவடிக்கை மறைமுகமாக இந்திய உளவுத் துறையின் ஏற்பாட்டில் செயலதிபர் உமா மகேஸ்வரனின் கொலை நடந்ததாக பரப்பப்பட்டது. இதை மாணிக்கம் தாசன் சித்தார்த்தர் மறுக்காமல், தங்கள் பதவி பணத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய அமைதிப்படை விமானத்தில் சித்தார்த்தர் சென்னை வந்தார். வவுனியாவில் இருந்த மாணிக்கம் தாசன் இடம் சித்தார்த்தன் பேசியபோது, நாங்கள் நினைத்த மாதிரி தோழர்களின் மனநிலை இல்லை. அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதுவும் இந்திய அமைதிப்படை சிறையில் இருப்பவர்கள் தன்னையும் சந்தேகப்படுகிறார்கள் என்று கூறினார். தாசன் மேலும் கூறியதாவது இப்பொழுதும் தோழர்களை அழைத்துக் கூட்டம் போட்டு உண்மைகளை சொல்ல முடியாது. அதனால் ஆட்சி ராஜனிடம் கூறி உரிமை ஏழு பேரையும் உடனடியாக சென்னை போய் வெற்றிச்செல்வனின் பொறுப்பில் இருக்கட்டும். இரண்டு மூன்று மாதங்களின் பின் கொஞ்சம் கொஞ்சமாக தோழர்களிடம் பேசி கூட்டத்தைக் கூட்டி எல்லா உண்மைகளையும் கூறுவோம் என்று கூற, சித்தார்த் தரும் உடன்பட்டார். இந்த விடயத்தை ஆட்சி ராஜனிடம் கூறியபோது முதலில் கோபப்பட்ட அவர், கட்டாயம் விரைவில் இயக்கத் தோழர்களை அழைத்து உமாமகேஸ்வரன் கொலை பற்றிய முழு விபரங்களையும் கூறி இயக்கம் தான் அவருக்கு மரண தண்டனை கொடுத்தது என்று கூறுவோம் என்று சித்தார்த்தன் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து ஆட்சி ராஜன் உரிமை கூறிய மற்ற ஆறு பேரையும் அழைத்து சென்னை வருவதாக கூறினார். சித்தார்த்தனும் நானும் போய் இலங்கை தூதரக முதன்மை செயலாளரை சந்தித்தோம். அவர் தனக்குப் ஜனாதிபதி பிரேமதாசா நேரடியாக தன்னிடம் பேசியதாகவும், உடனடியாக சித்தரை கொழும்பு போய் ஜனாதிபதி பிரேமதாசாவை சந்திக்க சொன்னார். அதற்குரிய முழு பாதுகாப்பும் ஜனாதிபதியே ஏற்பாடு செய்வார் என்று கூறினர். இலங்கை ஜனாதிபதி பிரேமதாச இந்தியாவுக்கு எதிராக எங்களை பயன்படுத்த போகிறார் என்று விளங்கிவிட்டது.
தொடர்பான கட்டுரைகள்
1. தராக்கி சிவராம்: கொலைகாரன், தரகு பத்திரிகையாளன், கேப்மாரி
Comments
Post a Comment