இரு பெண் கவிஞரின் (தற்)கொலையும் ஒரு மானிட நேய ஆட்கடத்தல்காரனின் சாகசக் கதையும்

ருசியாவின் 20ம் நூற்றாண்டு மகத்தான கவிஞர்கள் இருவரும் பெண்களே. அன்னாவும் மரீனாவும். ஈழத்திலோ இரண்டு மகத்தான பெண் கவிஞர்களான செல்வியையும் சிவரமணியையும் புலிகள் இளமையிலேயே கொலை செய்தார்கள்



By ஹரிகர சர்மா(Paul Rasathi)                        பிறப்பு:  காரைநகர்                           புகலிடம்: கனடா

என்  நண்பி சிவரமணி 1991மே மாதம் 19ம் திகதி தன் 23 வயதில்  தற்கொலை செய்துகொண்டாள் அவள் பற்றிய நினைவுகள் எனது கடந்த கால வாழ்க்கையில் கல்வெட்டாயின. அவளது தற்கொலைக்கான காரணம் அரசியல் ரீதியானதென்பதை நான் அறிந்தவன். உணர்ந்தவன். இன்றைக்கு முகப்புத்தகத்தில் அவளின் தற்கொலைக்கு சாதியக் காரணிகளே காரணம் என்ற கோணத்திற் கருத்துகள் பகிரப்படுகின்றன. சிவரமணியின் மரணம் வரையில் அவளுடன் நட்பாக இருந்தவர்களுள் நானும் ஒருவன்.

    இரணை சகோதரனை கடலுக்கும்         இரண்டு     கவிஞை       நண்பிகளை            புலிக்கும் பலிகொடுத்த ஹரிகர சர்மா


 1987 காலப்பகுதியிற் செல்வி மற்றும் தில்லை ஊடாகச் சிவரமணியுடன் எனக்கு நட்பு உருவாகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தேனீர் விடுதியில் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். மிக மென்மையான பெண். அப்பொழுதே தில்லையும் சிவரமணியும் காதலர்களாக இருந்தனர். சிவரமணியுடன் பழகிய நாட்களில் அவர் தில்லையுடன் கொண்டிருந்த காதலால் சமூக ரீதியான நெருக்கடிக்கு உட்பட்டிருந்ததாக ஒரு நாட் கூட நாங்கள் உணர்ந்ததில்லை. நான், செல்வி, தில்லை, சிவரமணி ஆகியோர் அடிக்கடி பல்கலைக்கழகத்திலும் எனது வீட்டிலும் செல்வியின் அறையிலும் சந்தித்து உரையாடுவதை வழமையாகக் கொண்டிருந்தோம். நான் செல்வி தில்லை போன்றவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் உறுப்பினர்களாக இருந்த போதும் அதன் உட்கட்சிப் படுகொலைகள், அராஜகம், மக்கள் விரோதப்போக்கு என்பவற்றுக்கு எதிராகத் தொழிற்பட்டவர்கள். தில்லையுடனும் செல்வியுடனும் சிவரமணி கொண்டிருந்த நட்பு அவரது அரசியற்பிரக்ஞைக்கு வலுவூட்டியது. 1989 காலப்பகுதியின் இறுதியிற் செல்வியும் சிவரமணியும் இந்தியாவில் நிகழ்ந்த பெண்கள் மகாநாடு ஒன்றுக்குச் சென்றனர். அப்பயணத்தில் நானும் இணைந்து கொண்டு தென்னிந்தியாவுக்குச் சென்றேன். மேற்குறித்த மகா நாடு முடிந்ததும் சிவரமணி இலங்கை திரும்பிவிட்டார். செல்வி சென்னையிற் தங்கி மிக நீண்ட காலத்தின் பின் தன் காதலனான  அசோக்கைச் சந்திக்கிறார். 

                   இந்தியாவில் செல்வி 


 செல்வியும் நானும் இலங்கை திரும்பிய போது இந்திய ராணுவம் விலகத்தொடங்கி அவ்விடத்தைப் புலிகளின் இராணுவ அணிகள் எடுக்கத் தொடங்கியிருந்தன. புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்புக்கள் யாழ் குடாநாட்டைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தொடங்கியிருந்தன. மாறுபட்ட கருத்தாளர்கள் எல்லோரையும் கண்காணிக்கவும் கடத்தவும் கொலை செய்யவும் தொடங்கியிருந்த புலிகளின் அதிகாரம் அச்சம் தருவதாக மாறியிருந்தது. கந்தர் மடத்திலிருந்த எனது வீட்டிக்கு ஒருநாள் செல்வியுடன் வந்த சிவரமணியின் துவிச்சக்கரவண்டியின் சாவிக் கொத்தில் கொழுவியாக ஒரு துப்பாக்கிச் சன்னம் இருந்ததைக் கவனித்தேன். "

என்ன துப்பாகிச்சன்னத்தைக் கொழுவியிருக்கிறீர்கள் ?

 என்று சிவரமணியைக் கேட்டேன். இக்காலத்தை இதுதானே ஆக்கிரமித்திருக்கிறது. அதனால்தான் இதைக் கொழுவி வைத்திருக்கிறேன் என்றார். அக்காலத்தில் புலம் பெயர் தேசத்தில் இருந்து பல மாற்றுக்கருத்துக் கொண்ட அரசியல் இலக்கிய இதழ்கள் வந்து கொண்டிருந்தன, அவற்றுக்குத் தனது கவிதைகளை அனுப்புவதற்காக என்னிடம் சிலகவிதைகளைச் சிவரமணி அக்கணத்தில் தந்தார். (நான் வடக்கில் இருந்து அகன்று கொழும்பு போகவிருந்தேன்.) செல்வியும் நானும் அவற்றை வாசித்துக் கொண்டிருந்த போது என்ன நினைத்தாரோ தெரிய வில்லை எனக்கு இக்கவிதைகளில்  திருப்தியில்லை. திருத்த வேண்டும் வெளியிட வேண்டாம் எனக்கூறித் திருப்பி வாங்கிக் கொண்டார். நானும் கொழும்பு போய்விட்டேன். 

கொழும்பில் இருந்த போது எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் வடக்கில் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத சூழ்நிலை நிலவுவதைக் குறிப்பிட்டிருந்தார். இங்கு நிலவும் நம்பிக்கை அற்ற சூழ்நிலையைச் சுட்டி வருத்தப்பட்டுக் கடிதம் எழுதியிருந்தார். பல்கலைக்கழகப்படிப்பு முடிந்ததும் தென்னிலங்கைக்கு வந்து இலக்கிய மற்றும் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட விருப்பமாக இருக்கிறதென்றும் குறிப்பிட்டிருந்தார். நான் கொழும்பில் இருந்த போது மே 1991 இல் தீப்பொறி பாலா என்னிடம் ஒருநாள் வந்து தீப்பொறித் தோழர் ஒருவரை அமைப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு கூட்டி சென்று திரும்பவும் கூட்டிவரமுடியுமா என்று கேட்டார். அப்போது யார் என்னுடன் வரப்போவது என்பது எனக்குத் தெரியாது. நான் தீப்பொறியில் உறுப்பினராகவும் இருக்கவில்லை. ஆனால் அவர் என்னைக் கேட்டதற்கு காரணம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளால் தேடப்பட்ட சிலரை நான் தெற்கிற்குப் புலிகளின் சோதனைச் சாவடிகளைச் சந்திக்காத கள்ள வழிகளால் அழைத்து வந்திருந்தேன். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு புலிகளிடம் அனுமதி பெறவேண்டும் இக்காரணத்தினால் குறித்த தோழரை வடக்கிற்கு அழைத்துச் சென்று பத்திரமாகத் திருப்பிகொண்டுவரும் வேலையைச்செய்து தரும்படி பாலா என்னிடம் கேட்டார். 

பாலா கந்தர்மடத்தில் எங்களுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தவர். அவர்தான் என்னையும் கடற் பயணமொன்றில் காணாமல்போன என்னுடைய இரணைச் சகோதரரையும்  1983 ல் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் சேர்த்தும் விட்டவர். அவர் கேட்டதும் செய்வோம் எனச் சொல்லிவிட்டேன். மக்களின் உண்மையான விடுதலையை நேசித்தவர்கள் மீது புலிகள் மேற்கொண்ட அராஜகம் எனக்கு உடன்பாடற்றதாக இருந்தது. கோபத்தைத் தருவதாக இருந்தது. அவர் கேட்டதும் நான் உடன் ஓப்புக்கொண்டதற்குக் காரணம் அதுதான். 

வவுனியாவுக்குப் புகையிரதத்திற் போய் அங்கிருந்து துவிச்சக்கரவண்டியிற் யாழ்ப்பாணம் போவதென்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஏதுவாக நானும் தீப்பொறி பாலாவும் இரண்டு துவிச்சகர வண்டிகளை வாங்கி முற்கூட்டியே சரக்கு இரயிலில் வவுனியாவிற்கு அனுப்பிவிட்டோம். 

இரண்டு நாட்கள் கழித்துக் கொழும்புக் கோட்டை ரயில் நிலையத்திற்கு, யாழ்ப்பாணம் போவதற்கு ஆயத்தமாக வரும்படி பாலா என்னிடம் சொன்னார். அவர் சொன்னபடி நான் போனபோது நான் அழைத்துச் செல்ல வேண்டிய தோழரை அவர் அங்கு கூட்டிவந்திருந்தார். அவரை பார்த்தவுடனேயே எனக்குத் தெரிந்து விட்டது. அவர்தான் தோழர் கேசவன். புதியதோர் உலகம் என்ற நாவல் எழுதிய  கோவிந்தன் எனச் சொன்னால் இன்னும் கனதியாக இருக்கும். நான் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இருந்தகாலத்தில் அவரை இரண்டொருமுறை சந்தித்துமிருக்கிறேன். 

                        கேசவன்(நோபேட்)


வவுனியாவில் இருந்து புலிகளின் கட்டுப்பாடுப்பிரதேசத்துக்குள் நுளைந்த பின் பூவரசம் குளம் வழியாக நானும் கேசவனும் ஏறத்தாளத் தொண்ணூறு மைல்களைத் துவிச்சக்கர வண்டியில் உரையாடியபடி கடந்தோம். 1989 இல் இந்திய இராணுவம் போக யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுபாட்டுக்குள் வந்த போது தீப்பொறியில் இருந்த மூத்த தோழர்கள் பலரும் உயிரைப்பாதுகாக்க வெளியேறவேண்டி ஏற்பட்டதால் தீப்பொறி அமைப்புபின் வேலைகளிற் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் உறுப்பினர்களிடையே மீளவும் தொடர்புகளை ஏற்படுத்தி அமைப்பை கட்டியமைப்பதுதான் தமது பயணத்தின் நோக்கம் என்று அவ்வுரையாடலில் கேசவன் எனக்குச் சொன்னார். நாவற்குழியில் உள்ள யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற வளைவு வந்ததும் தோழர் கேசவன் இப்பொழுது பிரிந்து நாளை காலை கொக்குவில் சனசமூகநிலையதில் சந்திப்போம் என்று கூறினார். 

 அடுத்த நாட்காலை கொக்குவில் சனசமூக நிலையதிற் காத்திருந்த போது எனது தோழர் ஒருவரின் சகோதரர் வந்து என்னைக் கேசவனிடம் கூட்டிச்சென்றார். அவர் தங்கியிருந்த வீடு தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இருந்த ஏற்கனவே எனக்கு தெரிந்த தோழரொருவரின் வீடு. நான் அங்கு போன போது முன்பு எங்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் வேலைசெய்த மலையகத்தைத் சேர்ந்த பெண் தோழர் ஒருவரும் இருந்தார். தோழர் கேசவன் அப்பெண் தோழரைக் காட்டிப், புலிகளிடம் வடக்கை விட்டுப்போக இவர் அனுமதி கேட்கப்போனால் இவ்வுலகை விட்டே இவர் போக வேண்டி வரும் அதனால் இவர் இங்கு தலைமறைவாக இருக்கிறார். இவரைத் தென்னிலங்கைக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வரமுடியுமா? என்று கேட்டார். அப்பெண் தோழரை எனது இன்னுமொரு நண்பருடன் இணைந்து துவிச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு வவுனியா பயணமானேன்.

 அப்பொழுது A9 வீதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையில்  உக்கிரமான சண்டை நிகழ்ந்து கொண்டிருந்தபடியால் பொதுமக்கள் போக்குவரத்து வவுனியா மன்னார் பாதையாற் பூவரசம்குளம் ஊடாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது. 

பூவரசம்குளத்தில் சிலநாட்கள் தங்கியிருந்து புலிகளின் சோதனைச் சாவடியைத் தவிர்க்க வழிகளைத் தேடிக்கொண்டிருந்த போது உள்ளூர் வேட்டைக்காரனான காசிப்பிள்ளை என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருக்கோ வவுனியாவின் காட்டுப்பாதைகள் அனைத்தும் அத்துப்படி. அவரின் உதவியுடன் இராணுவத்தினதும் புலிகளினதும் சோதனைச் சாவடிகளுக்கிடையிலிருந்த காவலற்ற காட்டுக்குள் இரவு சென்று காத்திருந்து மக்கள் போக்குவரத்து ஆரம்பித்ததும் அவர்களுடன் கலந்து இராணுவக் கட்டுப்பாட்டுப்பிரதேசத்துக்குள் குறித்த அம்மலையகத்தோழி சென்றுவிடார். பெருத்த நிம்மதியுடன் நானும் எனது நண்பரும் பாலியாற்றில் கால் நனைத்து யாழ்ப்பாணம் திரும்பினோம். சில மாதங்களின் பின் காசிப்பிள்ளை அண்ணையை, ஆட்களை எல்லை கடத்தியதற்காக ஓமந்தையில் வைத்துப் புலிகள் சுட்டுக்கொன்று விட்டார்கள்.

 மலையகப் பெண்தோழரைப் பத்திரமாக அனுப்பி யாழ்ப்பாணம் திரும்பிய 1991 மே 19ம் திகதி வெள்ளி கிழமை மாலை சிவரமணி தற்கொலை செய்து விட்டார் என்ற செய்தியை நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். ஒரு தோழியைப் பாதுகாத்து அனுப்பிய நாளில் இன்னொரு தோழியைப் பாதுகாக்க முடியாமற் போனது. இதயம் அதிர்ந்து போனது.

 1990 களில் செல்வி கடத்தப்படுவதற்கு முன்பு புலிகள் தில்லையைக் கடத்தியிருந்தார்கள். தில்லை கடத்தப்பட்டதில் இருந்து சிவரமணி கடும் மன உளைச்சலுக்கும் அச்சத்துக்கும் ஆளாகியிருந்திருக்கிறார். வீட்டுக்கு வரும் இனம்தெரியாத எவருக்கும் தனக்குச் சொல்லாமற் கதவு திறக்க வேண்டாமென்றிருக்கிறார். சிவரமணியின் தாயார் உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து பாவிப்பவர். அம்மருந்துக் குளிசைகள் அடங்கிய குடுவையைத் தற்கொலை செய்வதற்கு அண்மித்த காலங்களிற் தனது தலைணைக்குக் கீழே வைத்திருந்திருக்கிறார். இந்தத்தகவலைச் செல்வி சிவரமணியின் மரணவீட்டில் அவரைச் சந்தித்த போது எனக்குச் சொன்னார். பின்னொருநாளிற் சிவரமணியின் தங்கை, மருந்து குளிசைகளைச் சிவரமணி தனது தலையணைக்கடியில் வைத்திருந்த விடையத்தை எனக்கு உறுதிப்படுத்தியிருந்தார். 

 தில்லை கடத்தப்பட்ட பின்னர் நண்பர்கள் பலரும் செல்வியையும் வடக்கை வீட்டு நீங்கும்படி வற்புறுத்தி இருந்தனர் ஆனால் செல்வியோ உறுதியும் ஓர்மமும் நிறைந்த தோழி. அங்கு வாழவும் நாடகமும் அரங்கியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற் சாதிக்கவும் மாற்றுக்கருத்துக்காக நிமிந்து நிற்கவும் மக்களின் விடுதலைக்காக தனது குரலை உயர்த்தவும் விரும்பி வடக்கை விட்டு நீங்க மறுத்து உறுதியோடிருந்தார். தில்லை கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட போதும் சிவரமணியையும் இழப்பேனென்று நினைத்திருக்கவில்லை. சிவரமணியை இழந்தபின் செல்வியை இழப்பேனென்றும் நினைத்திருக்கவில்லை. புலிகள் கொன்றனர். அதனால் இழந்தோம். 

சிவரமணி இறந்த இரவு ஒன்பது மணியளவில் தோழர் கேசவனை சந்தித்துப் பெண் தோழர் வவுனியா போய்ச் சேர்ந்ததைச் சொன்னேன். சிவரமணி போய்ச் சேர்ந்ததையும் சொன்னேன். கண மௌனத்தின் பின் கேசவன் தனது பயணத்திட்டத்தின் முக்கால்வாசி முடிந்துள்ளது, மிகுதி முடிந்ததும் இன்னும் ஒரு கிழமையில் நாங்கள் வெளிக்கிடலாம் என்றும் என்னை இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுப் போகுமாறும் கேட்டார். நான் சிவரமணியைப் பார்ப்பதற்காகப் போகிறேன் என்று சொல்லி உடனடியாகவே புறபட்டுவிட்டேன். 

அடுத்த நாள் காலை தோழர் கேசவன் இருந்த விட்டுக்குப் போனேன் வீடு பூட்டி இருந்தது. அதற்கு அடுத்த நாளும் தோழர் கேசவனைப் பார்ப்பதற்குப் போனேன் அப்போழுதும் அவ்வீட்டில் ஒருவரும் இல்லை. அன்றுதான் சிவரமணியின் இறுதிக் கிரியைகளும் நிகழ இருந்தன. ஆகையால் அதில் கலந்து கொள்ளப் போனேன்.

 வீரமாகாளி அம்மன் கோவிலின் பக்கத்தில் இருந்த சிவரமணி வீட்டில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் ஆரம்பித்து கோம்பயன்மணல் மயானத்திற்குச் சென்றடைந்த போது என்னைக் கொக்குவில் சனசமூகநிலையத்தில் சந்தித்த தோழர் பின்புறமிருந்து எனது தோளில்  தட்டி கேசவன் தோழரை முந்தநாள் இரவு புலிகள் கைது செய்து விட்டார்கள். நீ உடனடியாகப் போய் விடு என்றார். எனக்குத்தகவல் சொன்ன அன்றிரவே அத்தோழரையும் புலிகள் கடத்தி விட்டிருந்தனர் எனப் பின்னாளில் கேள்விப்பட்டேன். 

 நினைவுக்கிடங்கில் உக்கிப்போகாமல் கிடந்து உயிரை வேகச்செய்யும் இந்த நினைவுகள் முதுமையை நோக்கி நகரும் எங்களுக்கு வரமா சாபமா நான் அறியேன். சிவரமணிக்கு என் அஞ்சலிகள்.

பிற்குறிப்பு

நட்சத்திரன் செவ்விந்தியன்  தன் இரண்டாவது  கவிதைத் தொகுப்பான "எப்போதாவது ஒருநாள்" ஐ செல்விக்கும் சிவரமணிக்குமே சமர்ப்பணம் செய்திருந்தார். 

தொடர்பான கட்டுரைகள்

1. அ.யேசுராசாவும் அன்னா அக்மத்தோவாவும்

2. பாலசிங்கத்தின் பாணபத்திர ஓணாண்டிகள்

3. "மாமனிதர்" Prof. துரைராஜாவின் மச்சானை கொன்ற புலிகள்

4. புலிகளால் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட 4 தமிழரின் கதை

5. Me Too: ஈழப்பெண்டிர் புரட்சி

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்