ஒரு வான் கடிதம்: சனாதனன்(1997)

ஓவியரும் தற்போது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான தா. சனாதனன் University of Delhi இல் தன் பட்டப்படிப்பை முடித்தபின்              புது தில்லியிலிருந்து                        நட்சத்திரன் செவ்விந்தியனுக்கு        1997ல் எழுதிய கடிதம் 

                               (சனாதனன்)

புது தில்லியிலிருந்து                                               அன்புடன் நட்சத்திரனுக்கு                                     16.05.1997

உனது இரண்டாவது கடிதம் கிடைத்தது. அதிலிருந்து உனது முன்னய கடிதம் பற்றி அறிய முடிந்தது. எனக்கு அக்கடிதம் கிடைக்கவில்லை. உனக்கு காலச்சுவடு விவகாரத்தில் உதவமுடியாமல் போனதையிட்டு ஏமாற்றமாக இருக்கிறது. இருந்தும் உனது இரண்டாவது கடிதம் கிடைத்தது சந்தோசம். உன்னிடம் நீண்ட கடிதங்களை எதிர்பார்க்கிறேன். 


முன்னதாக வேலுவின் கடிதம் ஒன்றினூடு உனது ஆவுஸ்த்திரேலிய பயணம் பற்றி அறிய முடிந்தது. என்ன செய்கிறாய்? படிக்க தொடங்கிவிட்டாயா? வேலை ஏதும் செய்கிறாயா? யாருடன் தங்கி இருக்கிறாய்? உனது பூவரசமர இணல் களையும் கல்லு ரோட்டுக்களையும் ரயர் சத்தங்களையும் கேட்க முடிகிறதா? என்ன செய்வதாய் உத்தேசம்? 


என்னைப்பற்றி எழுத பெரிதாக ஒன்றும் இல்லை. கொதிக்கின்ற தில்லிச் சூரியனின் கீழ் கடைசி நாட்களை எண்ணியும் எண்ணாமலும் கழித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய நாட்களுக்குப்பின் சும்மா இருக்கிறேன். 26/5/97 இங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்கிறேன். பின் 3/6/97 அங்கிருந்து கொழும்பு செல்ல திட்டம். சென்னையில் வழமையான சில சந்திப்புக்களை எதிர்பார்த்து ஆவலாய் உள்ளேன். இம்முறை எபனேசர் என்ற எமது தலைமுறை ஓவியர் ஒருவரை சந்திப்பதாக திட்டமிட்டுள்ளேன். 

மே 1ம் திகதியிலிருந்து May 10 வரை ஒரிசா சென்றிருந்தேன். அங்கு புவனேஸ்வரில்      8-10 நூற்றாண்டுகளுக்குட்பட்ட கலிங்க நாட்டு நாகர் பாணியில் அமைந்த கட்டடங்களையும் சிற்பங்களையும் பார்க்க முடிந்தது. பின்னர் கோனார்க்கில் காமசூத்திர சிற்பங்கள் உள்ள சூரியன் கோயிலையும் "பூரியில்" பிரசித்திபெற்ற ஜெகன் நாதர்  ஆலயத்தையும் அனுபவிக்க முடிந்தது பெரிய பேறாகக் கருதுகிறேன். அவற்றை விபரிக்க முயல்வது தோல்வியிலேயே சென்று முடியும். நேரடி அனுபவத்திற்கு சமனாக எதையும் கொள்ள முடியாது. 

Colombo போய் என்ன செய்வது என்று எல்லாம் என்னிடம் திட்டங்கள் இல்லை. சிவரமணி சொன்னது போல " ஒரு துண்டுப்பிரசுரத்தைப்போல நம்பிக்கை தரும் வார்த்தைகள்  என்னிடமில்லை." எல்லாம் போய்த்தான் பார்க்கவேண்டும். Paint பண்ணவேண்டும் என்ற ஒரு எண்ணத்தைத்தவிர ஏதும் இல்லை. ஜீவனோபாயத்துக்கு ஏதாவது செய்தாக வேண்டும். இனியும் தங்கி இருப்பது பெரிய சித்திரவதையாகப் படுகிறது. அதற்காக இடைக்கால விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டி வரலாம். மற்றப்படி இலங்கை தமிழ் படைப்பாளிகள் செய்ய நினைக்கிற நிறுவனம் சார்ந்த முயற்சிகள் எதையுமோ நீண்ட திட்டிமிடலூடலான படைப்பியல் முயற்சிகளையோ செய்வதாக இல்லை. தமிழ் என்ற பெரிய கோஷத்தின் கீழ் எமது படைப்பாற்றல்கள் அள்ளுப்படாமல் பாதுகாப்பதுதான் இப்போதைய பெரிய தேவை என்று படுகிறது.  எமது அனைத்து உணர்வுபூர்வமான அனுபவங்களுக்கும் ஒரு மூன்றாம் நிலையில் இருந்தான சுயவிமர்சனப்பார்வை படைப்பாளிகளுக்குள் தேவைப்படுகிறது. அது மிகக்குறைவாகவே எமது படைப்பாளிகளுக்கு நடப்பதாக நான் நினைக்கின்றேன். இது நடவாமைக்கு நான் முன்னர் கூறியிருப்பவை இரு முக்கிய காரணங்கள். இவை தவிர்க்க முடியாத இன்றைய தேவை என்றாலும் இவையே எமது உள்மன யாத்திரைகளை பாதிக்கின்றன. எமது அனுபவங்கள் புனிதமானவை, சாஸ்வதமானவை. ஆனால் எமது படைப்புக்கள் அந்த நிலையை எட்டிவிட்டதாக சொல்ல முடியாது. எனக்கு இவ்வாறு சொல்பவர்களுடன்              (உன்னதங்களை எட்டிவிட்டதாக) தெளிவாக உடன்பாடு இல்லை. நாங்கள் எங்களுக்குள் செய்ய நிறைய இருக்கிறதாக எனக்குப் படுகிறது. நிறைய போதாமையாய் உணர்கிறேன். புவியியல் ரீதியில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பது எமக்கு கிணத்து தவளை மனோபாவத்தை தந்து விடுவதாகவே எனக்குப் படுகிறது. கவிதை பற்றி சரிநிகரில் விவாதம் சுவாரசியமானது. எல்லோரிடமும் ஏதோ ஒருவகையில் நல்ல Sensibility way of thinking இருக்கிறது. அது சந்தோக்ஷமான விடயம். ஆனால் அவர்கள் காட்டுகிற உதாரணங்கள் சிக்கலானவை. மு.பொவின் நுண்ணிய கலை நுகரும் உணர்வை உணர முடிகிற அதே வேளை அவர் துணைக்கு சு.வியைக் கூட்டி வருவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி நிறைய. இது எல்லாம் நான் முன்னர் சொன்ன பிரச்சனையின் வெளிப்பாடுகள். நாங்கள் தெளிவான .....(கடைசி இரண்டு  சொற்கள் Aerogramme/வான் கடிதத்தில் சிதிலமடைந்துவிட்டன)

                         T. சனாதனன். 

தொடர்பான கட்டுரைகள்

1. ஜெயமோகன் செவ்விந்தியனுக்கு எழுதிய 13 பக்க காதல் கடிதம்

2. கவிஞை சிவரமணியின் தற்கொலை

3. அ. யேசுராசாவும் அன்னா அக்மத்தோவாவும்

4. யாழ் பல்கலைக்கழகம்: சீரழிவின் வரலாறு

5. யாழ்ப்பாணக் காமக்குற்றவாளி இளங்குமரன்

        


Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்