மயூரன் பாலியல் விசாரணை: அதர் குழும அறிக்கை
ஓர் ஆணுக்கு எதிரான பாலியல் சுரண்டல்/வன்தாக்குதல்/துர்நடத்தை தொடர்பான விசாரணை ஒன்றினை முன்னெடுக்கும்போது, அவரது நண்பர்கள், குடும்பத்தினர், அவரது ஏனைய சமூக வலையமைவுகளை சேர்ந்தோர் அவர் பின் அணிதிரண்டு ஆதரவளிப்பது வரலாற்றில் இது முதல் தடவை அல்ல. அறிந்தோ அறியாமலோ பெண்களும் பாதிக்கபட்ட பெண்களைக் குற்றஞ்சாட்டுவதில் (victim-blaming) ஈடுபடுவதும், அதனூடே குற்றவாளியை பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்க முனைவதும் இது முதல் தடவை அல்ல. ஆகவே, இது தொடர்பிலான சமூக உரையாடல்களுக்கான திறந்த, பாதுகாப்பான வெளிகளை உருவாக்கும் முகமாக நாம் அவதானித்த கீழ்வருனவற்றைப் பகிர்கிறோம்.
1. பெண்களை பெண்களுக்கெதிராக மோதவிடுவதினூடாக அதிகாரத்தை நிலைநிறுத்தும் உத்தி
பெண்கள் பெண்களுக்கு எதிராக முரண்படும் நிலைக்கு திட்டமிட்டுத் தள்ளப்பட்டுள்ளனர். கட்சி மு. மயூரனின் முறைகேடான பாலியல் நடத்தை காரணமாக அவரை தற்காலிகமாக கட்சியை விட்டு நிறுத்தும் அறிக்கையினை வெளியிட்டதைத் தொடர்ந்து பெண்களும் கூட்டுச் சேர்ந்து பெண்களைத் தாக்கும் சண்டைகளில் ஈடுபடுகின்றனர். நாம் வாழும் இந்த ஆணாதிக்கம் மிகு உலகில் கூட்டொருமைப்பாட்டுடன் பெண்கள் இணைவதை, செயற்படுவதை மு. மயூரன் போன்ற போலி இடதுசாரிகளும் ஏனைய பலமிக்க ஆணாதிக்க சக்திகளும் பிரித்து நிற்கின்றன. இந்தப் பிரிவினைகளால், முரண்பாடுகளால், சண்டைகளால் பயன்பெறுபவர்கள் தமது சுயநலன்களுக்காக பெண்களைச் சுரண்டும், வன்முறைக்கு உள்ளாக்கும் ஆண்களே அன்றி வேறு யாரும் அல்ல.
வரலாறு நெடிதும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒடுக்கப்பட்டவர்களை தமக்கிடையில் தொடர்ச்சியாக முரண்பட வைத்தும் மோத வைத்தும் தமது குற்றப் பொறுப்புரிமைகளிலிருந்து தப்பித்துள்ளனர். இது அவர்கள் தமது அதிகாரத்தைப் பேணுவதற்கும் பலப்படுத்துவற்கும் பயன்படுத்தும் வழமையான தந்திரமான ஓர் உத்தி ஆகும். இந்த உத்தி வர்க்க ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு மட்டுமன்றி அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் பொருந்தும்.
2. பெண்கள் முறையிடுவதற்கான உரிமை மறுப்பு
எம்மைச் சுற்றி சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களை அவதானிக்கையில், பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டோம் என்று முறையிடும் உரிமையைக் கூட மறுப்பனவாகவே இவ் உரையாடல்கள் இருப்பதாக உணர்கிறோம். மேற்படி கேள்விகள் எழுப்பப்படும்போது, ஆண்கள் மேற்கொள்ளும் சுரண்டல், வன்முறை தொடர்பாக பேசும் உரிமையையும் இச்சமூகம் பெண்களுக்கு மறுத்து நிற்கிறது.
அதிகாரம் கொண்டவர்களின் உத்திகளாக சூழ்ச்சித்திறனுடனான கையாளுகையும் (manipulation), அதன் தொடர்ச்சியான சுரண்டலும் இருந்து வந்திருக்கிறன. பெண்கள் தாம் சூழ்ச்சித்திறனுடன் கையாளப்பட்டோம், சுரண்டலுக்கும் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டோம் என்று சொல்வதற்கான குறைந்தபட்ச உரிமையையும் இச்சமூகம் வழங்காத நிலைமையே இங்கு காணப்படுகிறது. இதன் காரணமாகவே பெண்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு முன்வருவதில்லை. மு. மயூரனின் முறைகேடான பாலியல் நடத்தை தொடர்பான இந்த விசாரணையோடு தொடர்புபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்ற பெண்களின் மீது சமூக வலைத்தளங்களில் நிகழ்த்தப்படுகின்ற சமூக வன்முறையும் அவர்களது ஒழுக்க நடத்தை தொடர்பான கேள்விகளுமே பெண்கள் தாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல்கள், வன்முறைகள் தொடர்பாக பேச முன்வராமைக்கான, முறைப்பாடு செய்யாமைக்கான முதன்மைக் காரணங்களாக விளங்குகின்றன.
3. “பாலியல் வன்தாக்குதலுக்கு (rape) உள்ளாக்கினாரா”?
சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்ற இன்னுமொரு சொல்லாடல்/கேள்வி “அவர் உங்களை பாலியல் வன்தாக்குதலுக்கு (rape) உள்ளாக்கினாரா” என்பது. ஆண்கள் பெண்களை ஒடுக்குவதற்கு பாலியல் வன்தாக்குதலை மட்டுமே ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில்லை.
“பாலியல் ரீதியான வன்முறை” அல்லது “பாலியல் வன்தாக்குதல்” (rape) என்பதற்கான வரைவிலக்கணம் சமூக வரலாற்றிலும் சட்டவியலிலும் தொடர்ச்சியான மாற்றங்களுக்குள்ளாகி வந்துள்ளது. சட்டத்துக்குட்பட்ட மண உறவுகளுள், குடும்பங்களுக்குள் நடைபெறக்கூடிய பாலியல் வன்தாக்குதல் (marital rape) இன்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் குற்றவியல் (criminal) என்ற சட்டரீதியான வரையறைகளுக்குள் உள்வாங்கப்படவில்லை. சட்டரீதியான வரையறைகளுடன் பொருந்திப்போகிற பாலியல் குற்றங்களும் விசாரணை என்று வரும்போது ஆதாரங்கள் போதாததாலும், பாதிக்கப்பட்டவரையே (victim) குற்றம் சுமத்துவதாலும் (victim-blaming), மௌனிக்க வைப்பதாலும் (victim-silencing) மிக அரிதாகவே நீதியைப் பெற்றுத்தருகின்றன.
சட்டங்களும் சட்டவாக்க நிறுவனங்களும் பெரும்பாலும் ஆண்களால் கட்டியெழுப்பப்பட்டவை. தந்தைவழி மரபுச் சமூகத்தால் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருபவை. இந்தப் பின்னணியில் சட்டத்தைத் துணைக்கழைப்பதும் வன்முறை நிகழ்ந்திருப்பின் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம் தானே என்ற வாதங்களை முன்வைப்பதும் சமூக வரலாறு மற்றும் சட்டவியல் சார்ந்த அடிப்படை புரிதல் கூட அற்ற மனநிலையிலிருந்தே எழுகின்றன.
4. உடனிணக்கத்துக்குரிய உறவுகள்
மு. மயூரனுடன் இசைவான உடனிணக்கத்துக்குரிய (consensual) உறவுகளில் இருந்த பெண்கள் தற்போது மு. மயூரன் தம்மை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியுள்ளார் என குற்றஞ்சாட்டுகின்றனர் என்னும் உருவகிப்பும் சொல்லாடல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. உடனிணக்கம் (consent) என்பது கற்களில் செதுக்கப்பட்ட ஒரு கருத்துரு அல்ல. அது இரு பாலியல் இணைகளுக்கு இடையில் உள்ள பாலியல் உறவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணத்திலும் தொடர்ச்சியாக உரையாடப்படும் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு விடயம் ஆகும்.
உடனிணக்கம் என்பது இரு ஒத்திசைவுடனான வயது வந்தோருக்கிடையிலான பாலியல் உறவு என்று தவறாக நம்பப்படுகிறது. வயதுவந்தோர் என்பது 18 வயதுக்கு மேற்பட்டோர் என இலகுவாக வரையறுக்கப்படுகிறது. ஒரு சட்ட நீதிமன்றத்தில் குற்றங்களை அடையாளப்படுத்துவதற்கு இவ்வகையான பொருள் வரையறைகள் தேவை. ஏனெனில், ‘உள முதிர்வு’ போன்ற நுட்ப வேறுபாடுகளையும் அகம்சார் கூறுகளையும் சட்ட நீதிமன்றம் கருத்திலெடுக்க முடியாது. இருப்பினும், இடதுசாரிய அரசியல் வெளிகளில் ஈடுபடும் மு. மயூரனைப் போன்றவர்கள் அரசியல் வெளிகளில் அதிகாரத்திலுள்ள ஆண் ஒருவர் இந்த வெளிகளுக்குப் புதிதாகச் சேர்பவர்களுடன் அல்லது இவ்வெளிகள் தொடர்பாக அறியாதவர்களுடன் அல்லது இவ்வெளிகளின் விளிம்புகளில் அல்லது அவற்றுக்கு வெளியே உள்ளவர்களுடன் உறவில் ஈடுபடுவதன் அதிகார இயங்கியல், உறவுகளில் அசமத்துவம் போன்ற சொல்லாடல்கள் தொடர்பாக அறியாதவர்கள் அல்லர்.
வெளிப்படையான வன்தாக்குதல் அறிகுறிகள் இல்லாததன் காரணமாக அல்லது பொதுவெளியில் இருவர் சேர்ந்திருந்ததன் காரணமாக அல்லது சமூகத்தில் மகிழ்வான தோற்றப்பாட்டுடன் இருந்ததன் காரணமாக அவர்கள் உடனிணக்க உறவொன்றில் இருந்திருக்கலாம் என்னும் வாதத்தினை முன்வைப்பது ஓர் உறவுள் நிகழ்ந்த உளரீதியான திட்டமிட்ட தனிமைப்படுத்தல், உளவதை, பாலியல் சுரண்டல் தொடர்பாக அவர்கள் பேசுவதற்கான உரிமையை மறுப்பதாகும்.
5. பாலியல் சுரண்டலும் காலமும்
இவ்வளவு காலமும் இருந்து விட்டு இப்போது ஏன் பேசுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டுக்களும் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒருவர் தனது வாழ்வின் குறித்த ஒரு காலப்பகுதியில் சக மனிதர் ஒருவருடன் உறவில் இணைந்திருந்த காரணத்தால், அந்த உறவுக்குள் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பின்னொரு காலத்தில் உரையாடுவதற்கான உரிமையை இழந்து விடுகிறார்களா? தனது உடல், உள, உணர்வு, ஆளுமை சார்ந்த இறைமையை முற்றுமுழுதாக கைவிட்டுவிட வேண்டுமா?
வன்முறையில், சுரண்டலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அனுபவங்களை நினைவுகூரவும் வெளிப்படையாகப் பேச முன்வரவும் பல ஆண்டுகள் எடுக்குமென்பது உலகின் வெவ்வேறு பாகங்களிலும் நிகழும் வன்முறையின் பல்வேறு வடிவங்களை கற்கும் ஆய்வாளர்கள் எப்போதோ எடுத்துக்கூறிய விடயம். குறிப்பாக குடும்ப வன்முறை பற்றிய சான்றுகளும் வெளிக்கூறல்களும் சிலவேளைகளில் குற்றஞ்சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர் இறக்கும் வரை கூட வெளிவருவதில்லை. இதற்கு மூல காரணம் மிக இறுக்கமான சமூக மற்றும் குடும்பக் கட்டமைப்பும், பழமைவாத அற ஒழுக்கம் சார்ந்த கருத்தமைவுகளுமே ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து விடயங்களும் முரளிதரன் மயூரனின் முறைகேடான பாலியல் நடத்தை தொடர்பான பிரச்சினையுடன் மட்டும் தொடர்புடையன அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சினை. பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றஞ்சாட்டுதல், பெண்களை பெண்களுக்கெதிராக மோதவிடுதல், பெண்களை நம்பாமை, ஆதாரங்களுக்கு மேல் ஆதாரங்கள் கேட்டல், சட்ட நீதிமன்றமொன்றில் நிற்கத் தகுந்த விடயம் மட்டும் தான் பாலியல் சுரண்டலாகும் என்ற வரையறைகளுக்குள் குறுக்குதல் போன்றன பாலியல் சுரண்டலை மேற்கொண்ட ஓர் ஆணை அடையாளப்படுத்தி, பெயர் குறிப்பிடும்போது சமூகத்தால் முன்வைக்கப்படும் பொதுவான நியாயங்களாக விளங்குகின்றன.
பாலியல் சுரண்டல், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேச முன்வராமை மற்றும் பேச முன்வரும் பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டும் சமூக வன்முறை தொடர்பிலான உரையாடல்களுக்கு இவ்வெளி பங்களிக்கும் என்னும் நம்பிக்கையுடன் இக்கேள்விகள், சொல்லாடல்களை நாம் இங்கு பதிவு செய்கிறோம்.
தொடர்பான கட்டுரைகள்
1. Me Too: ஈழப்பெண்டிர் புரட்சி
2. சர்மிளா சையித்: Me Too எதிர்ப்புரட்சிக்காரி
3. சர்மிளா சையித்/ஹரி ராசலெட்சுமி கபட நாடகம்
4. யாழ்ப்பாணக் காமக்குற்றவாளி இளங்குமரன்
Comments
Post a Comment