சுந்தர ராமசாமி மனிதாபிமான ஃபாசிஸ்டின் ஜனநாயகக் குரல்
என்னுடைய மிகச் சிறப்பான மிகச் சிறிய புத்தக மதிப்புரையாக இப்போதும் எனக்கு தெரிவது சுந்தர ராமசாமியின் முழுக் கவிதைத் தொகுதிக்கு ஞான் சரிநிகரில் எழுதிய பின்வருவது தான். அதுவொரு கனாக்காலம். ஈழத்தை விட்டு ஓஸ்றேலியாவுக்கு புலம்பெயர்ந்த அதே மாதத்தில் பிரசுரமானது. அதற்கு முதலாண்டு தான் பிரபாகரன் யாழ் நகரை இழந்து வன்னிக்காடுகளை தனது கோட்டையாக்கியிருந்தார்.
சுந்தர ராமசாமியை சில ஆண்டுகளின் பின் சென்னையில் சந்தித்தேன். காலச்சுவடு ஒழுங்கமைத்த தமிழினி மாநாட்டில். அப்போது அவர் பிதாமகர். அவரைச் சந்திக்க அவர் எனக்கு தந்த நேரத்தில் நான் ஆஜராகவில்லை. பின் மாநாடு நடந்த எழும்பூர் அட்லாண்டா ஒட்டல் உணவு விடுதியில் அவர் இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சந்தித்து மன்னிப்பு கேட்டேன். அவர் சிறிதும் கோவப்படவில்லை. பாலு மகேந்திரா தனக்கு மகள் வயதான ஷோபாவை(17 வயது) "திருமணம் செய்தபின்" முதலிரவைக் "கொண்டாடியதும்" சென்னையில் ஒரு Hotel Atlanta வில் தான். இரண்டு ஓட்டல்களும் ஒன்றா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
அதைவிட ஞான் அறியவேண்டிய நிகழ்வுகள் அந்த உணவு விடுதியில் நடந்தன. வெள்ளிக் கிண்ணத்தில் சாம்பாரில் இட்லியை மூழ்க வைத்து வெள்ளிக் கரண்டியால் சாப்பிடும் கலை ஈழத்தவனான எனக்கு தெரியாது. இட்லியை சாம்பாரில் மூச்சடக்கி கொன்று தின்று அனுபவிப்பதை ஞான் Copy and Paste செய்து கொண்டு உரையாடினேன். பிரபாகரனைப்பற்றிய அவரது அபிப்பிராயத்தைக் கேட்டபோது
"அவர் ஒரு பாஸிஸ்ட். இப்போதும் எப்போதும் நான் கையெழுத்திட்டு அதனை உறுதிப்படுத்த தயார்"
என்றார். வெட்டொன்று துண்டொன்றாக அவர் சொன்னது என்னை கட்டிப்போட்டது. அக்கணத்தில் அவர் என் ஹீரோ ஆனார். ஆனால் அவர் சுடுசொல் பேசுபவரல்ல. பத்மநாப ஜயர் அவர் நண்பர். ஐயர் பிரபாகரனை பூசிப்பவர் என்பது அவருக்கு நன்கு தெரியும் பின்னாளில் ஐயரைப்பற்றி எழுதும்போது ராமசாமி பயன்படுத்திய மிகக்கவனமாக நாகரீகமான ஆனால் அங்கதமான சொற்களைப் படித்தபோதுதான் எனக்கு "கிளிக்" ஆனது.
சுந்தர ராமசாமி ஏற்கெனவே தனது 107 கவிதைத் தொகுதிக்கு ஞான் எழுதிய மதிப்புரையை படித்திருக்கிறார். அவருக்கு ஞான் யார் என்பது தெரியும். அதனை எனக்கு காட்டிக் கொள்ளவில்லை. (நல்ல எழுத்தாளர் எல்லோருமே நல்ல ஒற்றர். (They pay great attention to detail. Yet they appear not so)
ஜி. நாகராஜனும் சுந்தர ராமசாமியைப் போல ஒரு பிராமணர். இளவயதில் இறந்தாலும் ராமசாமியின் சமகாலத்தவரான நாகராஜன் ராமசாமியை விட படைப்பாற்றல் மிக்கவர். இருவரும் ஸ்ராலின் காலத்தில் பிறந்த தமிழ் எழுத்தாளர்கள். இடதுசாரிகளாக இள வயதிலிருந்தாலும் ஸ்ராலின் ஒரு பாசிஸ்ட் என்பதை மிகக்குறுகிய காலத்திலையே கற்று தம்மை புடம்போட்டவர்கள். ராமசாமியை விட மிகப்பெரிய கலைஞன் நாகராஜன். நாகராஜனை விட மிகப்பெரிய அறவான் சுந்தர ராமசாமி.
ராமசாமிக்கு சமகால தமிழிலக்கியத்தில் தன் இடம் என்ன என்பது தெளிவாகத் தெரியும். தனது புளிய மரத்தின் கதையை விட, குழந்தைகள் பெண்கள் ஆண்களை விட நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு மகத்தானவை என்பது தெளிவாகத் தெரியும். அசல் அறவானான ராமசாமிக்கு பொறாமை/Jealousy எதுவுமில்லை. ராமசாமி தன் வாழ்நாளில் தன் மகன் கண்ணனைக் கொண்டு நாகராஜனின் படைப்புக்களை பதிப்பித்தார். காலச்சுவடு பதிப்பாக நாகராஜன் படைப்புக்கள் வெளிவராவிட்டால் இந்த கட்டுரையை என்னால் எழுதமுடியாமல் போயிருக்கும். நாளை மற்றுமொரு நாளே குறத்தி முடுக்கு என்பன ஏற்கெனவே பதிக்கப்பட்டிருந்தாலும் நாகராஜனின் மகத்தான பல சிறுகதைகள் சுந்தர ராமசாமியின் தூண்டுதலால்தான் சமகால இளைஞர்களிடம் போய்ச்சேர்ந்தன.
நாளை மற்றுமொரு நாளே குறுநாவலில் கந்தன் ஒரு மதுக்கொட்டகையில் மது அருந்திக்கொண்டிருக்கும்போது குடித்துக்கொண்டிருக்கும் ஒருவர் பின்வரும் உண்மையை போட்டுடைப்பார்.
" தொழிலாளர் வர்க்கத்தை அடக்க சேர்ச்சில் முயன்றான் முடியல்ல. ஹிற்லர் முயன்றான் முடியல்ல. ஸ்ராலின் முயன்றான். முடிந்தது"
இதுதான் கலை.
சரிநிகரில் வந்த என் மதிப்புரை
தமிழில் பசுவய்யா என்ற புனைபெயரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகக் கவிதை எழுதி வரும் சுந்தர ராமசாமியின் 1959ம் ஆண்டிலிருந்து 1995ம் ஆண்டு வரை எழுதப்பட்ட 107 கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெளிவந்த இவரின் நடுநிசி நாய்கள், யாரோ ஒருவனுக்காக என்ற தொகுதிகளும் 1987க்குப் பிறகு இவர் எழுதிய கவிதைகளும் இணைந்து இப்பெருந் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. இந்த 35 ஆண்டு காலப் பயணத்தில் பசுவய்யா என்ற தமிழ்க் கவிஞரின் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அவருக்கே உரிய பலம் பலவீனங்களுடன் இதில் தெளிவாகத் தெரிகிறது. விமர்சகர்களினால் மிக மோசமான கவிதை என விமர்சிக்கப்பட்ட எவற்றையும் இத்தொ குப்பில் நீக்கிவிட பசுவய்யா விரும்ப வில்லை என்பது நடுநிசி நாய்கள் தொகுப்பிலுள்ள மந்த்ரம் (1964) கொள்கை (1964) முதலிய கவிதைகள் நீக்கப்படாமல் இருப்பதிலிருந்து தெரிகிறது. இவ்வம்சமே இத்தொகுப்புக்கு ஒரு சிறப்பம்சமாகிறது. பகவய்யா எழுதத்தொடங்கியபோது எது கவிதை அல்லது எது நல்ல கவிதை என்பதில் குழப்பமுற்றிருந்தார் என்பதற்கு கொள்கை, மந்த்ரம் முதலிய கவிதைகளே சாட்சி. ஆனால் இன்றைக்கும் பெரும்பாலான தமிழகக் கவிஞர்கள் இவ்வாறு குழப்பமுற்றிருப்பது தான் தமிழ்க்கவிதைக்குநேர்ந்த மிகப்பெரிய அவலம்.
இந்த 35 ஆண்டு கால பயணத்தின் முடிவில் அவர் அடைந்திருக்கின்ற முதிர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. ஒரு பழுத்த கவிஞராக அவர் பின்னாட்களில் எழுதிய கவிதைகளில் ந.பிச்சமூர்த்தியிலிருந்து ஆரம்பித்த தமிழகக் கவிதை மரபுத் தன்மைகள் மஹாகவியிலிருந்து ஆரம் பித்த ஈழத்துக்கவிதை மரபுத்தன்மைகள் என வேறுபடுத்தச் சிரமமான ஒரு உலகளாவிய பொதுமை இருக்கிறது. இதற்கு உதாரணமாக இத்தொகுப்பிலுள்ள சிறந்த கவிதைகளான இல்லாதபோது வரும் நண்பன் (1985) ஒரு நிலவுக்குக் காத்திருத்தல் (1985) உன் கவிதையை எழுது (1985) அங்குபோகவழி (1987) வெட்கப்படாமல் துக்கப்படு (1987) யாரோ ஒருவனுக்காக (1987) மனிதாபிமான ஃபாசிஸ்டின் ஜனநாயகக் குரல் (1994) நீ யார்(1994) ஒருபோர் வீரரின் முறையீடு (1994), நம் சவுக்கின் சொடுக்கல்கள் (1994), ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில் எழுதும் சொற்கள் (1995) முதலியவற்றைக் காட்டலாம்.
இறுதியாக இப்புத்தகத்தின் அச்சமைப் பைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இன்று இந்தியாவில் கிடைக்கின்ற தொழில் நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தி அச்சிடப்பட்டுள்ளது எனக் கூறத்தக்க வகையில் மிகச் சிறப்பாக இதன் அட்டையும் பக்கங்களும் அமைந்துள்ளன.
புத்தகத்திலிருந்து ஒரு கவிதை
மனிதாபிமான ஃபாசிஸ்டின் ஜனநாயகக் குரல்
யார் சொன்னது நான் பாசிஸ்ட் என்று? வரலாற்றில் நாங்கள் கருத்து வேற்றுமை கொள்பவர்களை நீர்மூலமாக்கி வருவது சிந்தித்துப்பார் யாருக்காக? உங்களுக்காகத்தானே? ஆகச்சரியான சிந்தனைகள் எங்களிடம் கூடிவந்து இறுதி விடைகளை நாங்கள் வார்த்தெடுத்து வரும்போது வெண்ணெய் திரள தாழியை உடைப்பது போல்
நேர் எதிர்நிலையில் நின்று நீ மறித்தால் உன் உயிரைவாகுவதில் தவறென்ன? நாற்று நட்டு களை பிடுங்கி பயிர் காத்து கதிர் காணும் எங்கள் மனிதநேயம் கோணல் கலைஞர்களுக்கு ஒரு போதும் புரிவதில்லை கோணல் கலைஞர்களின் வக்கிரபுத்திகள் எப்போதும் ஏந்திப்பிடிப்பது மாறுபடும் சிந்தனைகளைத் தானே தம்பி அன்புடன் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன் என் சீரிய சிந்தனைகளை உருப்போடு என் தடங்களை மோப்பம் பிடித்து முன்னால் போய் உறுதிப்படுத்து என் குரலுக்கு வாயசைத்துப் பழகு அப்போது தெரியும் உனக்கு நான் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி என்று
தொடர்பான கட்டுரைகள்
1. இலக்கிய ரவுடி சாரு நிவேதிதா
3. சுய தணிக்கையும் சுய மைதுனமும்
சிறப்பு வாழ்த்துகள்
ReplyDelete