சிவத்தம்பி: பித்தமும் சித்தமும்

                 இளமையில் சிவத்தம்பி


சமகால தமிழ்ச்சூழலில் நிலவும் பரஸ்பர முதுகுசொறியும் வாழைப்பழ நழுவல் விமர்சன மரபை அம்பலப்படுத்த நட்சத்திரன் செவ்விந்தியன் 2003 ல் எழுதிய இக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.

50 களிலிருந்து 70 கள் வரையான மூன்று தசாப்தங்களும் சிவத்தம்பி ஒரு வரட்டு மார்க்சியராகவே இருந்தார். மார்க்சியத்தை இலக்கிய விமர்சனத்துக்கு பயன்படுத்துகிற போது இந்த வரட்டுத்தனம் மிக துலங்கலாகத் தெரிந்தது. சுயாதீனமாக இயங்க வேண்டிய படைப்புத்துறையையும் விமர்சனத்துறையையும் ஒரு அரசியல் கட்சியாக கட்சி மனோபாவத்தோடும் கட்டுப்பாடுகளோடும் வைத்திருந்தனர். தங்களது அணி சார்ந்தவர்களையே குழு மனோபாவத்தோடு சிலாகித்து எழுதினார்கள் கைலாசபதி,  சிவத்தம்பி ஆகியோர். 

          கைலாசபதி           சிவத்தம்பி 


 சிவத்தம்பி முதலியோர் அங்கம் வகித்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு வெளியேயிருந்தும் சமகாலத்தில் ஒரு வளமான படைப்பிலக்கியம் மற்றும் விமர்சனத்துறை சார்ந்த மரபு வளர்ந்து வந்தது. ஈழத்துச் சிறுகதை மூலவர்களான வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோரில் தொடங்கிய  மேற்கூறிய மரபு அ.செ முருகானந்தன், வரதர், அ.ந.கந்தசாமி, எஸ்.பொன்னுத்துரை, வ.அ. இராசரத்தினம், மு.தளையசிங்கம், கே.வி. நடராஜன் என்று சிறுகதையில் தொடர்ந்தது. இவர்களை, இவர்களின் படைப்புக்களை சிவத்தம்பி முதலியோரின் விமர்சனங்கள் புறக்கணித்தன. முற்போக்கு அணி சார்ந்து எழுதிய படைப்பாளிகளிலும் என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா, டானியல் முதலியோர் சில நல்ல படைப்புக்களைத் தந்திருந்த போதிலும் செ.கணேசலிங்கம், காவலூர் ராஜதுரை முதலியோர் மிகப்பிரச்சாரமான மோசமான படைப்புக்களையே எழுதியுள்ளனர். 

                   எஸ்.பொன்னுத்துரை


ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற போது சிவத்தம்பி பட்டியலிட்ட முற்போக்கு எழுத்தாளர்களை விட வெளியிலிருந்த எஸ்.பொ, வ. அ. இராசரத்தினம், மு. தளையசிங்கம், கே.வி.நடராஜன் முதலியோர்  மிகத் திறமைவாய்ந்த கலைஞர்கள் என்பதை காலம் இன்று நிரூபித்துவிட்டது. கவிதைத்துறையில் சிவத்தம்பி முதலியோர் சிலாகித்த பசுபதி, சுபத்திரன் முதலியோர் மிகமோசமான பிரச்சாரப் படைப்பாளிகள் என்பதும் இன்று நிரூபணமாகிவிட்டது. 

  இக்காலப் பகுதியில் மு.தளையசிங்கம் எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற நூல் மிக முக்கியமானது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க விமர்சகர்களையும் படைப்பாளிகளையும் அவர்களது படைப்புக்களையும் விமர்சன ரீதியாகவும் சுயசரிதை ரீதியாகவும் அலசி எழுதிய அம்மாதிரியான ஒரு விமர்சனத்தை எழுதக்கூடிய துணிவும் தார்மீகப்பலமும் சிவத்தம்பிக்குக் கிடையாது. 

எண்பதுகளில்தான் சிவத்தம்பியில் வரட்டு மார்க்சியம் விடுபட்டு ஒரு வளர்ச்சி தெரிகிறது. சிவத்தம்பியின் இந்த மாற்றத்துக்கு காரணம் அலை சஞ்சிகை போன்ற அமுக்கக் குழுக்கள்தான். அலை சஞ்சிகை சிவத்தம்பி கைலாசபதி போன்றோரின் விமர்சன குறைபாடுகளை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியதுடன் விவாதங்களையும் தொடக்கிவைத்தது. அலை ஆசிரியர் அ.யேசுராசா ஒரு மார்க்சிய எதிரி என்ற குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டாலும் அலை ஒரு பழமைவாத மதவாத இயக்கத்தின் பாணியில் மார்க்சியம் மீது சேறு பூசவில்லை. வரட்டு மார்க்சியத்தின் தர்க்கப்பிழைகளையும் தவறுகளையுமே அலை சுட்டிக்காட்டியது. மேலும் சிவத்தம்பி முதலியோர்கள் புறக்கணித்த எஸ்.பொ, வ.அ இராசரத்தினம், கே.வி நடராஜன் முதலியோர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து இயங்கவில்லையே தவிர அவர்கள் மார்க்சிய எதிரிகள் அல்லர். 

 சிவத்தம்பியின் 80களில் ஏற்பட்ட மாற்றத்தின் மைல்கல் என உயிர்ப்புக்கள் சிறுகதைத்தொகுதிக்கு அவர் எழுதிய பின்னுரையைச் சொல்லலாம். அலை சஞ்சிகை உடனடியாகவே சிவத்தம்பியின் குறித்த பின்னுரையை மனமாரச் சிலாகித்துப் பாராட்டியது. இந்தக்கட்டுரை தான்  சிவத்தம்பி தமிழில் எழுதிய இலக்கிய விமர்சனங்களில் மிகச் சிறப்பானது என்று நான் கருதுகிறேன். அலையில் சிறுகதை எழுதி வளர்ந்த உமா வரதராஜனையும் ரஞ்சகுமாரையும் சிவத்தம்பியால் சிலாகித்துச் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மஹாகவிக்கு தாங்கள் செய்த இருட்டடிப்புக்குப் பிராயச்சித்தமாக அவரது மகனான சேரனின் முதல் தொகுதி வந்தவுடனேயே அதிகம் பாராட்டி எழுதவேண்டியதாயிற்று. 


அலை சஞ்சிகையின் காலப்பகுதியிலே தான் சிவத்தம்பி மீது அமுக்கம் செலுத்திய இன்னொரு நிகழ்வான, எம்.ஏ.நுஃமான் என்ற விமர்சகரின் வருகையும் இடம்பெறுகிறது. மஹாகவியின் புத்தகங்களைப் பதிப்பித்து அவரை மீள்கண்டு பிடிப்புச்செய்தவர் நுஃமான். நுஃமானும் யேசுராசாவும் சேர்ந்து தான் ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ நூலைத் தொகுக்கின்றனர்.

அஞ்சல் அதிபராக இருந்தாலும் அலை சஞ்சிகை அச்சு செலவுகளை ஈடுகட்ட  சில நாட்கள்  கடல் தொழிலுக்கு போய் பணம் சேர்த்த யேசுராசா


சிவத்தம்பிக்குள் இருக்கின்ற அரசியல்வாதி, சிவத்தம்பியின் விமர்சனப்பார்வையை விசாலப்படுத்தி வளமாக்க உதவிய அமுக்கக் குழுக்களைப் பற்றி திறந்த மனத்தோடு பேச விடுவதில்லை. 1999ம் ஆண்டு வெளிவந்த கட்டுரையொன்றில் பின்வருமாறு எழுதுகிறார்.

 “முற்போக்கு எதிர்நிலைச்சஞ்சிகைகளாக முக்கியப்பணியை ஆற்றியனவற்றுள் ‘கலைச்செல்வி’ ‘அலை’ முக்கியமானவை. இவற்றுள் ‘அலை’ முற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தமிழக முற்போக்கு எதிர்பாளர்களுடன் சேர்ந்து மேற்கொண்டது.” 

(பக் 109, நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம்)

 முற்போக்கு என்ற சொல்லை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சூடிக்கொண்டதால் அதுதான் முற்போக்கானது என்றும் அலை ‘முற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டை’ எடுத்ததனால் அலை பிற்போக்கானது என்ற மயக்கத்தை மேற்கூறிய வசனங்கள் கொடுக்கக்கூடியவை. உண்மையில் வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைவிட அலை தான் முற்போக்கானதாக இருந்தது என்பது இன்று நிறுவப்பட்டுவிட்டது. அலை ஒரு ஆசிரியர் குழுவால் வெளியிடப்பட்ட சஞ்சிகை என்றாலும் அது ஒரு இயக்கமாகவும் இருந்தது. 

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி எழுதிய தளையசிங்கம் (போர்ப்பறை எழுதிய தளையசிங்கமல்ல) ஏ.ஜே.கனகரத்னா போன்றவர்கள் அலையின் பிதாமகர்கள். நுஃமானின் வளர்ச்சியும் அலையின் வளர்ச்சியும் சமாந்தரமாக நிகழ்ந்தது. எனவே அலை ஒரு காலத்தின் பிரதிபலிப்புக்கூட. 

 ஆகவே சிவத்தம்பி “யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு-ஓர் இலக்கிய வரலாற்றுக்கண்ணோட்டம்’ என்ற கட்டுரையை எழுதுகிற போது அதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தையும் ஒரு கட்டமாகக் குறிப்பிடுவது போல் அலை இயக்கத்தையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தொடர்பான கட்டுரைகள்

1. பொக்ஸ் நாவல்: ஒர் மலின இலக்கியம்

2. முருகையன்: நகலும் நாடகமும்

3. சுந்தர ராமசாமி மனிதாபிமான ஃபாசிஸ்ட்டின் ஜனநாயகக் குரல்

4. சுய தணிக்கையும் சுய மைதுனமும்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்