பாலைவனத்தில் ஒரு புத்தகக் கடை
அடிலயிட் சர்வதேச எழுத்தாளர் வாரம் கீர்த்திமிக்க ஆஸ்திரேலிய விழா. இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக 1984ல் வந்த சல்மன் ருஸ்டி தனது நினைவுகளை Imaginary Homelands என்ற நூலில் எழுதியுள்ளார். அக்குறித்த கட்டுரையின் சில பகுதிகள். தமிழாக்கம் நட்சத்திரன் செவ்விந்தியன்
ஓரளவு வித்தியாசமான இந்தமாதிரியான எழுத்தாளர் விழாக்களால் வாசகர்களுக்கும் பார்வையாளருக்கும் என்ன பயன்? சில காரணங்களால் எழுத்தாளர்களைப்பார்த்து அவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு அவர்களின் புத்தகங்களை வாசிப்பதை சுவாரஸ்யமானதாக வாசகர்கள் கண்டனர். இங்கே எழுத்தாளர்களுக்குப் பெறுமதியானதாக இருப்பது என்னவென்றால், நான் நினைக்கிறேன் மேடைக்கு வெளியே எழுத்தாளர்களுக்கிடையே இடம்பெறுகின்ற உதிரி கதைகள்தான். எழுத்தாளர்கள் ஒவ்வொருத்தரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை. அவ்விதம் அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்ற சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றபோது அதிக நேரம் கதைக்கின்றனர். என்னுடைய பல்கலைக்கழகக் கல்வியின் முதல்நாள் இரவின் போது எங்கள் கல்லூரி நிர்வாகி கூறியதை இது எனக்கு நினைவூட்டியது. ஒரு இரவு விருந்தின் பின் பேச்சின் போது அவர் கூறினார்.
"உங்கள் கல்வியின் மிகப்பெறுமதியான பகுதி என்னவென்றால் மற்றவர் ஒருவருடைய அறையில் இரவில் நீங்கள் இருவரும் தனித்திருந்து உங்களுக்குள் கதைத்து மனங்களை செழுமைப்படுத்துவதுதான்"
இந்த ஆண்டு மனச்செழுமையை நாடி அடிலயிட்டில் எழுத்தாளர் விழா வாரத்துக்காக பத்தாயிரம் மைல்கள் பயணம் செய்தேன். சென்றடைந்தபோது அடிலயிட்டைப்பற்றி எனக்கு மிகச் சொற்பமாகத்தான் தெரியும், தென் ஆஸ்திரேலிய அரசின் தலைநகர் பரோஸ்ஸா பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ளது. ஜெர்மனிய குடியேற்றவாதிகள் உன்னதமான திராட்சைத் தோட்டங்களையும் வைன் ஆலைகளையும் அங்கு நிறுவியுள்ளனர்.
பறோஸ்ஸா: பாலைவனத்தில் ஒரு செம்மதுச்சோலை
உலகத்தின் அதிக கவர்ச்சியான கிரிக்கட் மைதானம் அமைந்துள்ள இடம்.
அடிலயிட் கிறிக்கெட் மைதானம்
இவற்றைத்தவிர வேறெதுவும் தெரியாது. இறங்கிக் கொஞ்சசேரத்துக்குள் என்னுடைய வரவேற்பாளர் ஒருவரினால் இம் மாநகரைப்பற்றி நினைவில் வைக்கக்கூடிய சுருக்கம் ஒன்று தரப்பட்டது. அவர் சொன்னது
“இது தேவாலயங்களின் நகரம் என்று அழைக்கப்படுகின்றது ஆனால் அத்தகைய ஒரு தேவாலயக் கட்டடம் ஒன்றில் இப்போது டிஸ்கோ நடன விடுதியொன்று நடத்தப்படுகின்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் ஆபாசத்திரைப்படங்களை காட்டிய முதல் டிஸ்கோ நடன விடுதியும் இதுதான்.
St.Pauls Anglican Church: 1983ல் ஒரு ராக்கால களியாட்ட விடுதி. நீலப்படங்காட்டிய முதல் ஆஸ்திரேலிய நைற் கிளப்
அடிலயிட்டில் கண்களுக்குத் தெரிவதை விட அதிகமாக மறைந்திருக்கும் என அவர் மறைமுகமாகச் சொன்னார் போலும், கண்களுக்குத் தெரிந்தது என்னவென்றால் பழைய பாணியிலமைந்த வெளிநிரம்பிய அழகிய ஓரளவு அமைதியான நகரம் தென் அவுஸ்ரேலிய அரசின் முதலாவ நில அளவையாளர் நாயகம் கேணல் வில்லியம் வைற் என்பவரால் அடிலயிட் நகரம் வடிவமைக்கப்பட்டது. 1836 ம் ஆண்டில் கேணல் வைற்றின் திட்டப்படி ஒரு தோட்டத்தில் grid பாணியிலமைந்த கட்டடங்களை உடையதாக இருந்தது. இன்றைக்கும் அதேபாணியில்தான் நகரம் தோற்றமளிக்கிறது. ஆனால் நகரத்தின் எல்லாப் பூங்காக்களும் விரிந்த வீதிகளும் கொண்டுள்ள காற்றுத்தான் வேறற்றதாகவும் விளக்கமுடியாததாகவும் உள்ளது. எல்லா திட்டமிட்டுக்கட்டப்பட்ட நகரங்களுக்கும் இது பொதுவானதாக இருக்கலாம். பெரும்பாலான பல்கனிகளிலும் வரண்டாவிலும் தொங்கிய இரும்புப் பின்னல் அடிலயிட் லேஸ் சோடனையுடனும் அதனுடைய பச்சைத்தனத்தாலும் அடிலயிட் போதியஅளவு கவர்ச்சியாக இருந்தது. இருந்த போதிலும் அது உங்களுக்கு எதனையும் சொல்லவில்லை. நகரத்தினுடைய வடிவம் அதனுடைய வரலாற்றைக் கொண்டிருக்கவுமில்லை. அங்கு வாழ்ந்த மக்களின் இயல்புகளை திரைநீக்கிக் காட்டவுமில்லை. அங்கு தங்கியிருந்த சில நேரங்களில் வேரறுந்த மாதிரியான ஒரு உணர்ச்சியால் வருந்தினேன். எனது பார்வையை எதுவோ கலங்க வைப்பது போலவும் கண்களினால் சரியாக குவியவைப்பதைத் தடுப்பது போலவும் ஜெட் பிளேனில்பயணம் செய்த களைப்பும் தடிமனும் கூட எனக்கு '. வந்திருந்தது. ஆனால் இவைகள் காரணமல்ல. வட அமெரிக்காவில் எங்கோ இருந்தமாதிரி இருந்தது. வீதியின் தளபாடங்கள் இந்தப் பிரமையைத் தோற்றுவித்திருந்தது. நியோன் விளக்குகள் சுவரொட்டிச் சித்திரங்கள் சிக்னல் லைட் ஐரோப்பிய மாதிரியல்ல இவையெல்லாவற்றையும்விட அடிலயிட் ஒரு புதிய மாநகரம். அங்குள்ள எதுவுமே 150 ஆண்டுகட்குட்பட்ட பழமையானவைதான். அது உண்மையில் ஒரு அமெரிக்காத்தனம். அடிலயிட்டு ஒரு புதிர். அந்தப் புதிரை உடைப்பதில் நான் ஈடுபாடு கொண்டேன்.
இருந்தாலும் எழுத்தாளர் வாரத்தில் போதிய அளவு செழுமை வந்துகொண்டிருந்தது. அசல் எழுத்தாளராக அறியப்பட்ட தென் ஆபிரிக்க lநாவலாசிரியர் அன்றே பிறின்க் வந்து சேர்ந்தார். வரும்போது ஒரு ஆஸ்திரேலிய பண்ணையாருக்கு அருகிலிருந்து வந்தார். ஆஸ்திரேலியப்பண்ணையார் அன்றே பிறின்க் ஆஸ்திரேலியாவை நன்கு சந்தோஷமாக அனுபவிப்பார் என்று உறுதியளித்தாராம்.
"ஏனெனில் நாங்கள் கறுப்பரை (அபாரிஜனல்) நன்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்"
என்றாராம்.
பிறின்க்குக்கும் தென்ஆபிரிக்காவிற்கு வெளியே அஞ்ஞாதவாசம் புரியும் தென்னாபிரிக்க எழுத்தாளர் பெஸ்ஸீ ஹெட் க்கும் இடையிலான சந்திப்புத்தான் அந்த வாரத்தில் மிகமுக்கியமான சந்திப்பாக இருந்தது. Bessie Head என்ற அந்தப் பெண் எழுத்தாளர் கூறினார்.
அன்றே பிறின்க்கைச் சந்திப்பதற்கு பொற்சுவானா(Botzwana) வானத்திலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்து அடிலயிட்டுகக்கு வந்தது பெறுமதியானது என்றார்.
"ஏனெனில் என்னுடைய வாழ்க்கையில் முதல்தடவையாக ஒரு நல்ல தென்னாபிரிக்க வெள்ளையரைச் சந்தித்திருக்கிறேன்" என்றார்.
அன்றே பிறின்க்/பெஸ்ஸீ ஹெட்
எழுத்தாளர் வாரம் முழுவதும் விழா நடந்த கூடாரத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எழுத்தாளர்களும் வாசகர்களும் உலாவித்திரிந்தனர். புல்வெளிகளில் அலைந்தனர். கொட்டகைக்குள் போய் வந்தனர். வேளைக்கு வேளை ஒரு ரின் மதுவுக்காக மதுக்கொட்டகையில் தரித்து நின்றனர்.
அடிலயிட்டின் யதார்த்தங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். கொஞ்சங்கொஞ்சமாக உண்மை புலப்படத்தொடங்கியது. அடிலயிட்டுக்குச் சென்ற ஒரு சிறு பயணத்தின் போது எவ்வாறு நெருப்பு அடிக்கடி இப் பிரதேசத்தை நாசஞ்செய்து வருகிறது என்பதைக் கேள்விப்பட்டேன். சாம்பல் புதன் கிழமையில் வந்த கொடிய தீச்சுவாலையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அந்த தீச்சுவாலை அலையாகி அடுத்தரோட்டுக்கு திடீரென்று பரவ அங்கிருந்த பெற்றோல் குதமொன்றை வெடிக்க வைத்தது.
இறுதியாக திட்டமிட்டு சொத்துக்களுக்கு நெருப்பு வைக்கிற குற்றத்தைப் பற்றியும் சொன்னார்கள். ஒரு நிலவுருவத்தையே எரிந்து கருகச் செய்யும் குற்றத்தைச் செய்யும் சனங்கள் எப்படிப் பட்டவர்களாயிருப்பர்?
அடிலயிட்டில் ஹின்ட்லே வீதியில் முதல் முறையாக நடக்கின்றபோது அது உயிர்ப்பானதாயிருக்கிறது. இளைஞர்களும் யுவதிகளும் இரவுத்தரிப்புகள் (night spot) உணவு விடுதிகள், வீதிவாழ்க்கை. அதன்பிறகு நீங்கள் விபச்சார விடுதிகளையும் குடிவெறிகாரர்களையும் காண்கிறீர்கள்.
ஒருநாள் இரவு நடைபாதையோரம் இரத்தம் சிந்தியிருந்த ஒரு தடத்தைக் கண்டேன்.இரத்தத் தடத்தின் வழியே இரு சப்பாத்துக்கால் அடையாளம் போய் இருட்டுக்கதவு வழியில் முடிந்தது.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மாயமாய் மறைந்து போகிற இளைஞர்களைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். பதினாறு வயது இளைஞரும் யுவதிகளும் காற்றோடு காற்றாய் காணாமல் போய்விடுகின்றனர். பொலிசார் எதுவும் செய்வதிலை. தோள்களைக் குலுக்கிக் கொள்வதைத் தவிர. பதின்மர்கள்தான் எப்போதும் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். போனவர்கள் ஒருபோதும் திரும்பிவருவதில்லை. இவ்வாறு குழந்தைகளை இழந்த பெற்றோர் தாங்களே தேடும் குழுக்களை ஒழுங்கமைத்திருக்கின்றார்களாம்.
இந்தக் கணத்திலிருந்து அடிலயிட் கிலேசத்தையேற்படுத்துகிறது இல்லையா? நகரத்தில் நானிருந்த கடைசிநாட்களில் எங்களில் பலர் உள்ளுர் செம்மறியாட்டுப் பண்ணையார் ஒருவரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு விருந்துக்கு போனோம். அது அவரது புதுவிட்டுக்கு பால்காய்ச்சிக் கொண்டாடுகிற விழா. அவரது கடைசி வீடு விலைமதிக்கமுடியாத ஓவியச்சேகரிப்புகளுடன் சாம்பல் புதன்கிழமையின்போது எரிந்து போனது. புது வீடு எடுப்பான வடக்கு அடிலயிட்டில் இருந்தது. பண்ணையார் ஜிம் தாராள சிந்தனையுள்ளவராயும் படித்தவராயும் இருந்தார். அது ஒரு நல்ல விருந்தாக இருந்தது. பிறகு என்னை இடையில் மறித்து யாரோ ஒருவர் இங்கிலாந்தில் பப்ளிக் ஸ்கூலில் படித்த நினைவுகளைச் சொல்ல வந்தபோது எனக்கு விசர் பிடிக்கத்தொடங்கியது. விருந்தின் இறுதியில் ஒரு அழகான பெண்மணி அபூர்வமான கொலைகளைப்பற்றி எனக்குச் சொல்லத்தொடங்குகிறார். 'ஒரு சமபாலுறவுச் சோடியினர் இளம்பெண்களை கொடுமையாகக் கொல்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளைக் கோடாரியால் கொன்று புல்வெளியில் புதைக்கின்றனர்.
இந்தமாதிரியான சம்பவங்கள். அடிலயிட் இவற்றுக்கு புகழ்பெற்றது. இப்போதுதான் அடிலயிட்டைப் புரியத் தொடங்கினேன். ஒரு ஸ்டீபன் கிங்கினுடைய நாவலுக்கோ அல்லது ஒரு பயங்கரபாணிப் படத்துக்கோ உவப்பான களம் அடிலயிட்தான். உங்களுக்குத் தெரியும் ஏன் மேற்கூறிய புத்தகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் களமாக ஏன் நித்திரை வரவழைக்கிற Consertive ஊர்கள் தெரிவுசெய்யப் படுகின்றன என. ஏனெனில் துாக்கம் வரவழைக்கிற அத்தகைய ஊர்களில் தான் பேயாட்டம், சகுனம் பார்த்தல், பிசாசுகள் எழுப்பும் சத்தம் முதலிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. அடிலயிட் அமெரிக்க ஊர்களான Salem அல்லது Amityville போன்றது.
புறுாஸ் சற்வினும் நானும் எழுத்தாளர் வர முடிவில் அடிலயிட்டை விட்டு மத்திய ஆஸ்திரேலிய நகரான அலிஸ் ஸ்பிறிங்கை நோக்கிப் பறக்கத்தொடங்கினேம். மிக விரைவிலேயே அடிலயிட்டின் பச்சைத்தனம் பாலைவனத்தினால் இடம்மாற்றிவைக்கப்பட்டது. பாலைவனம் ஈவிரக்கமற்ற பாலைவனம்தான் யதார்த்தமாக இருந்தது. அதுதான் ஆஸ்திரேலியா. நான் விட்டு வெளியேறுகின்ற நகரம் ஒரு கானல் நீராக அந்நியமானதாக புனையப்பட்ட பொய்யாக இப்போது எனக்குத் தெரிந்தது. அலிஸ் ஸ்பிறிங்கை அடையும் ஆவலோடு நான் என் இருக்கைக்குத் திரும்பினேன்.
பிற்குறிப்புகள்
Alice Spring ஆஸ்திரேலியாவின் மத்தியிலிருக்கும் ஒரு பாலைவன ஊர். பாலைவனத்தில் ஒரு புத்தகக்கடை இருந்தது. அபோறிஜனல் கறுப்பர்களின் அவ்வூரில் வெள்ளைக்காரப் பெண்ணொருவர் அதன் உரிமையாளர். அவா சல்மன் றஷ்டியையும் அவர் நண்பரையும் இனங்கண்டு தனது புத்தகக்கடையில் இந்த சர்வதேச எழுத்தாளர்களை சந்திக்கும் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தார். றஷ்டியும் நண்பரும் சந்தோசத்தோடு போனார்கள். ஒரு ஈ, காக்கை கூட கூட்டத்திற்கு வரவில்லை.
1984 ம் ஆண்டு எழுதப்பட்ட இக்கட்டுரைக்கு ஒரு பின் கட்டுரையாக 1991ல் பின்வரும் பகுதி சல்மான் ருஷ்டியினால் இணைக்கப்பட்டுள்ளது. அடிலயிட்டில் நடைபெற்ற அபூர்வமான கொலைகளைப்பற்றி எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அடிலயிட் வாசிகளினல் கூறப்பட்டது. அப்படியிருந்தும் இக்கட்டுரை முதன்முறையாகப் பிரசுரிக்கப் பட்டபோது அடிலயிட்வாசிகளில் பலர் அபூர்வக் கொலைகளைப்பற்றிய குறிப்புகளினல் குழப்பமடைந்தனர். கொஞ்சநாட்களுக்குப் பிறகு அடிலயிட் நகரமேயர் என்னை உள்ளுர் பத்திரிகை ஒன்றில் தாக்கியிருந்தார்.
அடிலயிட்டில் நடந்த ஒரு செய்தியையும் நான் இப்போது உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஒருநாள் இனங்காணமுடியாத ஒரு பைத்தியக் கூட்டம் அடிலயிட்மிருகக் காட்சிச் சாலையில் இரவில் ஏறி மிகக் குரூரமாக ஏறத்தாள அங்கிருந்த எல்லா மிருகங்களையும் கொன்றனர்
(1999ல் சிறுகதைக்கான இலக்கிய இதழான அம்மா இல் பிரசுரமானது)
Comments
Post a Comment