சுய தணிக்கையும் சுய மைதுனமும்

 


மதிப்புரை Lutesong and Lament (Tamil writing from Sri Lanka) By நட்சத்திரன் செவ்விந்தியன்

 மஹாகவி இலிருந்து றஷமிவரை எழுதிய, எழுதி வருகின்ற ஈழத்தின் 13 கதாசிரியர்களதும் 22 கவிஞர்களதும் சில படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. ஏழு மொழிபெயர்ப்பாளர்கள் இப்படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலும் இதன் தொகுப்பாளராக செல்வா கனகநாயகம் மட்டுமே இருக்கிறார். 

தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்களுடைய படைப்புக்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப் படுகின்றனவே என்று, ஒருவகையான சுயகரமைதுனம் செய்வதற்கொப்பான சுய திருப்திப்படுவதற்காக இவைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுவதில்லை. இம் மொழி பெயர்ப்பினுடைய வாசகர்கள் தமிழில் இவற்றை வாசிக்காத வாசிக்கமுடியாத சர்வதேச இலக்கிய ஆர்வலர்கள். இதன் காரணமாக இவ்வாறான தொகுப்பிற்கு எழுத்தாளர்களினதும் படைப்புக்களினதும் தெரிவிலும் தொகுப்பிலும் மிகுந்த பொறுப்புணர்வோடு கூடிய கவனம் அவசியம்.

2003ல் மூன்றாவது மனிதனில் வந்த மதிப்புரை


 சர்வதேச இலக்கிய ஆர்வலர்கள், உலக இலக்கிய பரப்பின் புனைகதை சார்ந்த அல்லது புனைகதை சாரா எழுத்துக்களுக்கு உரைநடையிலோ அல்லது கவிதை நடையிலோ ஈழத்துத் தமிழ் இலக்கியம் உருவத்திலோ உள்ளடக்கத்திலோ குறிப்பிடத்தக்க பருமட்டான பங்களிப்புக்கள் எதனையும் ஆற்றியுள்ளனவா என்பதை அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் வரும் மொழி பெயர்ப்புகளே உதவுகின்றன. 20ம் நூற்றாண்டின் உலக இலக்கியத்திற்கு ஸ்பானிய மொழியிலும் போர்த்துக்கீச மொழியிலும் எழுதுகிற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் அதிசயிக்கத்தக்க அளவு பங்களிப்புக்கள் ஆங்கில மொழிபெயர்ப்பினுடாக உலகத்துக்கு தெரிய வந்தது. Lutesong and என்கின்ற இத்தொகுப்பில் காணப்படுகின்ற பல குறைபாடுகள் காரணமாக இது சர்வதேச இலக்கிய வாசகர்களுக்குத் தொகுக்கப்பட்ட மாதிரியோ அல்லது விமர்சன உணர்வோடுகூடிய பொறுப்புணர்வோடு தொகுக்கப்பட்ட மாதிரியோ தெரியவில்லை. 

 இத்தொகுப்பு பல்வேறுபட்ட கருப்பொருட்களால் ஆக்கப்பட்ட படைப்புக்களின் உள்ளடக்கக் கோலங்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டதேயன்றி கால அடிப்படையில் தொகுக்கப்பட்டதன்று என முன்னுரையில் செல்வா கனகநாயகம் கூறுகிறார். உள்ளடக்க அடிப்படையில் தொகுப்பதானாலும் எழுத்தில் தங்கள் தனித்தன்மையையும் சுயதன்மையையும் (Originality) வெளிப்படுத்திய எழுத்தாளர்களின் Masterpiece ஆன படைப்புக் கள் தான் கட்டாயம் தொகுக் கப்பட வேண்டுமென்றில்லாவிட்டாலும் அவர்களது சிறந்த படைப்புக்களை தொகுப்பதுதான் சரியானது. மொழிபெயர்ப்புக்கப்பாலும் உயிர்வாழ்ந்து தாக்கம் செலுத்துபவை அவைதான். 

உமாவரதராஜனின் முகங்கள் கதையைவிடச் சிறப்பான ஒரு கதையை உள்மன யாத்திரையிலிருந்து மொழிபெயர்த்துப் போட்டிருக்கலாம். அ.முத்துலிங்கத்தின் சமகாலச் சிறுகதைகள் பல எழுத்தின் தொழில்நுட்பத்துக்கு (Craftmanship) மட்டுமே அதீத முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுகின்ற தொழில்நுட்ப விளையாட்டுக்களே தவிர சிறந்த சிறுகதைகளல்ல. இத்தொகுப்பிலிருக்கிற Butterflies என்ற சிறுகதையும் 'அவ்வாறான ஒன்றுதான். அவரது முதலாவதும் சிறந்த சிறுகதைகளைக் கொண்டதுமான அக்கா’ தொகுப்பிலிருந்துதான் ஒரு சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும். குறித்த கதையின் உள்ளடக்கத்துக்காகத்தான் அது தொகுக்கப்பட்டது என்றால், இதே விசா பிரச்சினைகளைப் பற்றி எழுதிய வேறுபல எழுத்தாளர்களின் சிறப்பான சிறுகதைகள் உள்ளடக்கப் பட்டிருக்கலாம். 

 முன்னுரையில் செல்வா கனகநாயகம் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் எல்லோரும் முக்கியமானவர்கள் என்றும் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர்கள் என்றும் கூறுவது தவறானது. ஆர்.முரளிஸ்வரன், காஸ்ரோ ஆகிய இருவரும் முக்கியமானவர்கள் என்று கூறுவதும் நன்கு அறியப்பட்டவர்கள் என்று கூறுவதும் தவறு. ஆர்.முரளிஸ்வரனைப் பற்றி கனகநாயகத்திற்குக் கூடத் தெரியாது. அதனால் தான் அவரைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எழுத கனகநாயகத்தால் முடியவில்லை.

 உள்ளடக்க அடிப்படையில் தொகுக்கிறபோது ஈழத்தமிழர்களின் தேசியவிடுதலைப் போராட்டம் சம்பந்தப்பட்ட நெருக்கடிகளும் ஒரு கருப் பொருளாகிறது. எனினும் இத் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குள் பல்வேறுபட்ட போக்குகளுள் கருத்தியல்களும் இருக்கின்றன. தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் சிங்கள பேரினவாதத்துக்கும் இடையிலான முரணிகள் மட்டுமே நெருக்கடிகளல்ல. இந்த அடிப்படையில் தமிழ் விடுதலை இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மறுப்பு உட்கட்சிப் படுகொலைகள், இனப்படுகொலைகள், சர்வாதிகாரத்தனமான கொடுமைகள் முதலியவற்றைப் பற்றி வெளிவந்த படைப்புக்கள் இத்தொகுப்பில் (வசதி கருதி?) தவிர்க்கப்பட்டுவிட்டன. 

 1986ஆம் ஆண்டுக்குப் பின்னர் முற்று முழுதாக இராணுவ வழிகள் தந்திரங்கள் மூலமாக மேலாதிக்கத்துக்கு வந்த விடுதலைப் புலிகள் தங்களது இருப்புக்காக விடுதலையின் பெயரால் மேற்கொண்ட நடவடிக்கைகளை அதிகம் விமர்சனத்துக்குள்ளாக்கி 90 களில் 'வனத்தின் அழைப்பு' என்ற சிறந்த கவிதைத் தொகுப்பைத் தந்தவர் அஸ்வகோஸ். அஸ்வகோஸின் தந்தையே புலிகளால் கொல்லப்பட்டவர். இவரது கவிதை ஒன்று கூட உள்ளடக்கப்படவில்லை. முஸ்லிம் , சிங்கள அப்பாவி மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் சம்பந்தமாக என்.ஆத்மா (சிவப்பு + கோல் = செங்கோல்) இளவாலை விஜயேந்திரன் முதலியோர் சிறந்த கவிதைகளை எழுதியுள்ளனர். சேரனினதும் ‘வீரர்கள் துயிலும் நிலம்' கல்வெட்டு' 'ஊரில் சிறையிருக்கும் நண்பருக்கு முதலிய கவிதைகள் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பவை. இவ்வகையான படைப்புக்கள் தவிர்க்கப்பட்டதானது இத்தொகுப்பு ஒருபக்கச் சார்போடு தொகுக்கப்பட்டதையே காட்டுகிறது. 

மேற்கூறிய செல்வா கனகநாயகத்தால் தவிர்க்கப்பட்ட விடயங்களை (விடுதலை இயக்கங்களுக்கும் மக்களுக்குமான முரண்பாடுகள், சர்வாதிகாரம் மீதான விமர்சனம்) பெரும்பாலான 20ஆம் நூற்றாண்டு இலத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் கையாண்டுள்ளன. ஆங்கிலம் வழியாக உலக இலக்கிய வாசகர்களை அதிகம் பாதித்தும் உள்ளன. மேலும் மிகுந்த நுண்ணுணர்வுள்ள சர்வதேச இலக்கிய ஆர்வலர்கள் இரண்டு முரண்பாடுகளை மட்டுமே முதன்மைப்படுத்தி வருகின்ற உத்தியோகபூர்வமான பதிவுகள், வரலாறு முதலியவற்றில் ஈடுபாடில்லாதவர்கள். இத்தொகுப்பு பன்முகத்தன்மையைக் கைவிட்டது பெருந்தவறு. 

 இத்தொகுப்பின் மிகப்பலவீனமான அம்சம் அறிமுகமாக தொகுப்புக்கு செல்வா கனகநாயகம் எழுதிய முன்னுரைதான். முழுக்க முழுக்க கல்விசார் (Academic) முறையில் இது எழுதப்பட்டுள்ளது. இம்மாதிரியான தொகுப்புகளுக்கு இலகுவில் வாசிக்கக் கூடியதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதுமான பத்திரிகை வகையிலான பொது வாசகரை இலக்காகக் கொண்ட கட்டுரையே பொருத்தமானது. இரண்டாவது சுயமானதாக இருக்க வேண்டிய இம்முன்னுரை நுஃமானும் யேசுராசாவும் (பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் முன்னுரை, சுரெஸ் கனகராஜா, சேரன் (மரணத்துள் வாழ்வோம் முன்னுரை) கா.சிவத்தம்பி (frontine கட்டுரை) ஆகியவர்களின் கட்டுரைச் சுருக்கங்களின் தொகுப்பு மாதிரி அமைந்துள்ளது. தமிழ் வாசகர்களை மட்டுமே இலக்காக வைத்து இம்முன்னுரை எழுதப்பட்டதைப் போலுள்ளதோடு சர்வதேச வாசகர்களுக்கு மிகவும் அலுப்பைக் கொடுக்கக் கூடியது.

The Picador Book of Modern Indian Literature என்ற ஒரு தொகுப்பு நூலை அமிற் சௌத்ரி என்கிற எழுத்தாளர் 2001ஆம் ஆண்டில் தொகுத்தார். இந்திய மொழிகளில் எழுதப்பட்ட புனைகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் சில ஆங்கில மூல புனைகதைகளுமாக இது தொகுக்கப்பட்டுள்ளது. அம்பையின் ஒரு சிறுகதை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது இதற்கு முன்னுரையாக செளத்திரி எழுதிய இரண்டு கட்டுரைகளும் Journalistic வகையிலான Times Literary Supplement இல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள். 


இதைவிட 50 Years of Indian writings என்ற தொகுப்பு நூலுக்கு சல்மன் ருஷ்டி எழுதிய முன்னுரையும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய Journalistic வகையிலான கட்டுரைதான்.

 1997ஆம் ஆண்டில் lan Stevans என்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் தொகுத்த The Oxford Book of Latin American Essays என்ற கிஸ்பானிய மற்றும் போர்ச்சுக் கீச மொழியில் இருந்தும் ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட இலத்தீன் அமெரிக்கக் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவந்தது. Stavans ஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்தும் இதன் முன்னுரையை Journalistic வகையிலேயே எழுதியிருந்தார். மேற்கூறிய புத்தகங்கள் தொகுக்கப்பட்ட முறையையும் அவற்றின் முன்னுரைகளையும். இப்புத்தகங்களை வெளியிட சிறப்பும் கீர்த்தியும் பலமும் மிக்க முன்னணிப்பதிப்பகங்கள் முன்வருதையும் செல்வா கனகநாயகம் தனது கவனத்தில் எடுக்கவேண்டும். 

 இவ்வாறான தொகுப்புக்களில் இடம்பெறும் எழுத்தாளர்களைப் பற்றி அறிமுகமாக எழுதப்படும் பகுதி மிகமுக்கியமானது குறித்த இந்தத் தொகுப்பின் பகுதியில்தான் அதிகமான வேண்டுமென்ற விட்ட பாரதூரமான பல தவறுகள் இடம்பெற்றுள்ளன. செல்வி தொண்ணுறுகளின் முற்பகுதியில் விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டவர் என்பதும் 1991ஆம் ஆண்டு சிவரமணி யாழ்ப்பாணத்தில் அவருடைய காதலனை புலிகள் புலிகள் கொன்றதால் தற்கொலை செய்து கொண்டவர் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. மேற்கூறியவை இவ்வாறு இருக்க கனகநாயகம் செல்வி, சிவரமணி பற்றிய அறிமுகத்தில் அவர்கள் இருவரும் 1991ஆம் ஆண்டு இறந்தனர் என்று மொட்டையாக எழுதுகிறார். அதேவேளை நேரடி மோதலின் போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் கப்டன் கஸ்தூரியின் அறிமுகத்தில் மட்டும் "1991ஆம் ஆண்டு தமிழ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இறந்தார் ” என்று விலாவாரியாக எழுதுகிறார். கனகநாயகத்துக்கு புலிகள் மீது இருக்கிற அபிமானம் பக்கசார்பற்று சிந்தித்து எழுதவேண்டிய பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய ஆற்றலை பல சமயங்களில் மழுங்கடிக்கிறது. 

உதாரணத்துக்கு யுகம் மாறும் (லண்டன் ஆனி 1999 இதழில் செல்வா கனகநாயகம் சியாம் செல்வதுரையைப் பற்றி ஆங்கிலத்தில் இருந்து எழுதிய கட்டுரையிலிருந்து விபரங்களைத் தருகிறேன். ராவோ என்ற விமர்சகர் இலங்கையில் பிரிவினைப் போராட்டத்தின் ஆரம்பம் 1983 இலிருந்தே தொடங்குகிறது என்று குறிப்பிட்டதை பிழையானது என்று கூறுகிற கனகநாயகம்

 "ஒருவர் பிரிவினைப் போராட்டம் தொடங்கிய கால விபரங்களை தெளிவாகக் கூறுவதாயின் 1972ஆம் ஆண்டுதான் மிகச்சரியானதாக இருக்கும்” 

 என்று எழுதுகிறார். இன்னொருவருடைய பிழையைச் சொல்லப்போய் தானும் பிழையாகச் சொல்கிறார் (பக்கம் 106) அமிர்தலிங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவரும் பண்டாரநாயக்காவால் Federal கட்சியின் மூளை என்று வர்ணிக்கப்பட்டவருமான ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த V. நவரட்ணம் தன்னுடைய நினைவுக் குறிப்பு அடிப்படையாக (Memoirs) எழுதப்பட்ட The fall and the rise of the Tamil Nation (1991, சென்னை) என்ற நூலில் பிரிவினைப் போராட்டத்தின் தொடக்கம் சம்பந்தமான முக்கியமான விபரங்களைத் தருகிறார்.


Federal கட்சியில் நம்பிக்கை இழந்து விரக்தியுற்று நவரத்தினத்தோடு பலர் வெளியேறினார்கள். சமஷ்டி ஆட்சியில் நம்பிக்கையிழந்த அவர்கள் சுதந்திரமான தமிழரசுக்கோரிக்கையை முன்வைத்து 1969ஆம் ஆண்டு தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற அமைப்பை தாபித்தார்கள் 

 The new organisation, “Tamilar Suyadchi Kazhakam' was accordingly inaugurated in 1969 with a free and self-governing Tamil state in Ceylon as its objective. (பக்., 286) 

தமிழர் சுயாட்சிக்கழகத்தினதும் V நவரத்திரத்தினதும் தனிநாட்டுக் கோரிக்கையால் ஆகர்சிக்கப்பட்டவர்களே உரும்பிராய் பொன். சிவகுமாரன், உமாமகேஸ்வரன். வே.பிரபாகரன் போன்றவர்கள். தமிழர் சுயாட்சிக் கழகத்தின் கொள்கையைத் திருடியே 1977 இல் கூட்டணி பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. 

 பிரிவினைப் போராட்டம் தொடங்கின ஆண்டு எது என்று நிர்ணயிப்பதில் பல சிரமங்கள் உள்ளன. போராட்டம் என்றால் ஆயுதப்போராட்டத்தை மட்டுமே எடுப்பதா? துரையப்பாவைக் கொன்ற ஆண்டிலிருந்து தொடங்குவதா? பிரிவினைப் போராட்டத்திற்கான கருத்தியல், கலாச்சார மூலங்களாக இருந்தவை எவை? என்ற அடிப்படையிலான கேள்விகளை எழுப்பி விரிவாக பார்க்க வேண்டிய பிரச்சினை இது. 

 இப்படிப் பார்க்கிறபோது 'ஒரு தனி வீடு' என்ற மு. தளையசிங்கத்தின் நாவல் 1972க்கு முதலே வந்து விட்டது. நண்டெழுத்து வேண்டாம் நமக்கு என்ற மஹாகவி 1972க்கு முதலே எழுதிவிட்டார். இலங்கை பாரம்பரிய இடதுசாரி இயக்கங்களிலிருந்து உருவாகி வளர்ந்த பிரிவினை மற்றும் ஆயுத போராட்ட இயக்கங்களான EROS, NLFT போன்ற இயக்கங்களின் கருத்தியல் மூலம் 1972ம் ஆண்டுக்கு முதலே தொடங்கிவிட்டது. உண்மையில் 1956ம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் தங்களுக்கு இருக்கிற இந்தப் பிரிவினைத் தெரிவு பற்றி யோசிக்க தலைப்பட்டு விட்டார்கள். 

இவ்வாறெல்லாம் இருக்க 1972ம் ஆண்டுதான் பிரிவினைப்போராட்டத்தின் தொடக்கம் என்று கனகநாயகம் கூறக்காரணம் இருக்கிறது. 1972 ஆண்டுதான் பிரபாகரன் முதலியவர்கள் அங்கம் வகிக்கத் தொடங்கிய புதிய தமிழ்ப்புலிகள் என்ற GANG தொடங்கப்பட்டது. புலிகள் எழுதவிரும்புகிற உத்தியோகபூர்வ வரலாற்றைக் கொண்டு கனநாயகம் சிந்திக்கவும் எழுதவும் விரும்புவதாலேயே இவ்விதமாக எழுதுகிறார். 

 மிகக் கடுமையான பழமைவாத சமூகமாக இருந்த ஈழத் தமிழ் சமூகம் உக்கிரமடைந்த தேசிவிடுதலைப் போர் காரணமாகவும் ஏற்கனவே தொடர்சியாக இடம்பெற்று வந்த இடதுசாரி மற்றும் முற்போக்குச் சக்திகளின் போராட்டம் காரணமாகவும் கடந்த மூன்று தசாப்தங்களாக கணிசமான மாற்றங்களைச் சந்தித்து ஒரு யுக சந்தியில் நிற்கிறது. சில்வியா பிளாத், மாயா கோவ்ஸ்கி போன்றவர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற வரலாற்று முக்கியத்துவமான பல நிகழ்வுகள் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கையில் இடம்பெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் 20ம் நூற்றாண்டு இலத்தீனமெரிக்க சர்வதிகாரிகள் போன்றோரின் ஆளுமைகளை ஒத்த பிரகிருதிகளை தமிழ்ச்சமூகமும் கடந்த 30 ஆண்டுகளில் உருவாக்கிவிட்டுள்ளது. இம்மாற்றங்களை தமிழ் எழுத்தாளர்கள் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். பலருடைய வாழ்வும் ஒரு வரலாற்று மாற்றமும் நிகழ்வும் ஆகிவிட்டது. 

இவைகள் ஆங்கிலத்துக்கூடாக உலக இலக்கிய வாசகர்களுக்கு எடுத்துச்செல்லப்படவேண்டியது அவர்களின் சுவாரசியத்துக்கு மட்டுமல்ல. மனித அபிமான அடிப்படையிலான மானிட விடுதலை சம்பந்தப்பட்ட தார்மீக கடமையும் இங்கு உண்டு. 

 இவ்வகையான மோசமான கைங்கரியங்களை கனகநாயகம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் திரித்துவக்கல்லூரியிலிருந்து செய்வது அக் கல்லூரியின் நீண்டகால பக்கஞ்சாரா கல்விசார் பாரம்பரியத்துக்கே இழுக்கு. இப் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு தனது பழைய பதவிக்கே யாழ்பாணப் பல்கலைக் கழகத்துக்குச் சென்றுவிடலாம். ஏனெனில் இப்போதிருக்கும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் மேலே கண்டிக்கப்பட்ட செயல்களில் கைதேந்தவர்கள்.

 எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் பகுதியின் இன்னொரு குறைபாடு, ஒருவகையான தமிழ் மனோபாவத்தோடு தமிழர்களை இலக்காக வைத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களின் படைப்பின் அடிப்படையிலன்று சமூகத்தில் அவர்களுக்கிருக்கின்ற பிற தகுதிகள் மற்றும் STATUS அடிப்ப்டையில் மதிக்கின்ற ஒருபோக்கும் உண்டு. இந்த மனோபாவத்தின் விளைவாகவே அ.முத்துலிங் கத்தின் அறிமுகத்தில் அவர் ஒரு பட்டையக் கணக்காளர் (Charted Accountant) என்பதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவரது படைப்புகளுக்கும் அவரது தொழிலுக்குமான உறவு என்ன என்பதை கனகநாயகம் தான் சொல்ல வேண்டும். இவ்வாறே பாலசூரியன், சாந்தன் முதலியோரின் அறிமுகத்திலும் நில அளவையார், பொறியியலாளர் போன்ற தொழில்கள் இடம் பெற்றுள்ளன. தரவுப் பிழைகளும் உண்டு. சிவரமணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைமாமணி பட்டப்படிப்பை நிறைவு செய்தார் என்று எழுதுகிறார். உண்மையில் இறுதிப்பரீட்சை அமர்வுக்கு முன்னரே அவர் தற்கொலை செய்து கொண்டார்.

 இத்தொகுப்பின் மொழிப்பெயர்ப்பு சம்பந்தமாகவும் பல விடயங்ககளைச் சொல்லவேண்டியுள்ளது. தமிழில் உள்ள சில சொற்களுக்கு ஆங்கிலச் சொல் இல்லை. அவற்றை அப்படியே தமிழிலிருப்பது மாதிரியே ஆங்கிலத்தில் எழுதுவது தான் சரியானது உதாரணமாக பிட்டு என்ற உணவை Pittu என்றும் வைரவர் என்ற கடவுளை Vairavar என்றும் எழுதலாம். ஆனால் ஏற்கனவே ஆங்கிலத்தில் சொல் உள்ள ஒரு தமிழ்ச் சொல்லை அப்படியே எழுதுவது சரி அல்ல. கமுக மரத்திற்கு Arecanut tree என்பதும் பூவரசமரத்துக்கு Portia tree என்பதும் (1807ம் ஆண்டு வெளிவந்த James Cordiner உடைய A Description of Ceylon என்ற நூலில் Portia tree பூவரசமரத்துக்கு எழுதப்பட்டுள்ளது. க்ரியாவின் தற்கால தமிழகராதியும் பூவரசுக்கு Portia என்பதையே தந்துள்ளது.


 இப்படி இருக்க இருக்க ஏன் அவற்றை தமிழில் எழுத வேண்டும். சில தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் ஏற்கனவே குறித்த எழுத்துக்களைக் கொண்டு உண்டு. உதாரணமாக தோசை என்ற உணவுக்கு DOSA என்ற பதம் ஆங்கிலத்துக்கு புதிதாகி வந்த சொல் என பிறமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்த சொற்களுக்கான அண்மைக்கால OXFORD அகராதியொன்றில் உள்ளது. சீட்டு என்பதற்கு CHIT என்ற ஆங்கிலச் சொல் ஏற்கனவே வழக்கிலிருப்பதாக க்ரியாவின் தற்காலத்தமிழகராதி கூறுகிறது. ஏற்கனவே இவ்வாறான சொற்கள் வழக்கிலிருக்க CHETTU என்றும்THOSA என்றும் எழுதுவது சரியானதல்ல. இவ்வாறான தவறுகள் சர்வதேச வாசகர்களின் வாசிப்புக்கு தேவையற்ற குழப்பத்தையும் இடையூறையும் தரக்கூடியவை. புத்தகத்தை இறுதியாக Edit பண்ணுகிறவர் இவற்றைக் கவனத்திலெடுக்க வேண்டும்.

 இத்தொகுப்பில் நீண்ட Glossary (அருஞ்சொற்கள்) இல் பலசொற்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். மொழிபெயர்ப்பில் சொல்லுக்குச் சொல் வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்றில்லை. எனினும் ஒரு வசனத்தினுடைய பந்தியினுடைய சாரமும் அதற்குள் இருக்கின்ற பணி பாட்டு அடையாளங் களும் கோலங்களும் தவறிப்போகக்கூடாது. உதாரணத்துக்கு ஒன்று: இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம் சிறுகதையின் கடைசிப்பந்தியில் பின்வரும் வசனம் உண்டு. 

 "தன் குரலை எழுப்பி ஞானகுமாரி என்ற தேவகாந்தாரி ராகப்பாட்டை பாடினாள்." 

பின்வருமாறு கனகநாயகம் மொழிபெயர்த்துள்ளார். Raising his voise, he began to sing. 

 இதில் "ஞானகுமாரி' என்ற சொல் கட்டாயம் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்றில்லை. அது மொழிபெயர்ப் பின் வசன ஒழுங் கனவுக் கேற்ப மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது தவிர்க்கப்பட்டிருக்கலாம் ஆனால் "தேவகாந்தாரி' 'ராகம்’ என்ற சொற்களை தவிர்த்து மொழிபெயர்ப்பது தவறு. அப்படி செய்கிற போது கர்நாடக சங்கீதம் சம்பந்தப்பட்ட இச் சிறுகதையிலிருக்கிற முக்கியமான அல்லது விடயங்கள் மொழிபெயர்ப்பில் இழக்கப்படுகிறபோது மொழிபெயர்ப்பு வரண்டு போகிறது.

 இப்புத்தகத்தின் பின் அட்டையில் வருகின்ற இப்புத்தகத்தைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்தில் மஹாகவி, இலங்கையர்கோன், ரகுநாதன் முதலியவர்கள் Traditionalists (பாரம்பரிய வாதிகள்/ பாரம்பரிய எழுத்தாளர்கள்) என்ற மிக வேடிக்கையான அவதானம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. உண்மையில் மேற்கூறிய மூவரும் Modernists என்பதற்கே அதிகம் பொருத்தமானவர்கள். இலங்கையில் Traditionalists என்பதற்குள் நவாலியூர் சோமசுந்தரப் புலவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை போன்றவர்கள் தான் வரமுடியும். 

ஈழச்சூழலில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் இருபதாம் நூற்றாண்டில் பழமைவாத விழுமியங்களைக் கொண்ட நவீன இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்திய Traditionalist எவரும் ஈழச்சூழலில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக வரவில்லை. மறுதலையாக தமிழ்நாட்டில் தான் மு.வரதராசன், அகிலன், நா.பார்த்தசாரதி, கல்கி போன்ற Traditionalistகள் நவீன இலக்கிய வடிவங்களை பயன்படுத்தி குறிப்பிடத்தக்க ஆளுமையாக தங்களை நிலைநிறுத்திக் கொணர்டார்கள். எனவே நுஃமானும் பொன்னுத்துரையும் தான Modernist என்று கனகநாயகம் கூறுவது சுத்த அபத்தமானதோடு வேடிக்கையானதும் கூட கனகநாயகம் 20th நூற்றாண்டு நவீன தமிழிலக்கியத்தில் தனக்கிருக்கிற அறியாமையையும் வெளிப்படுத்துகிறார். (Modernist என்பதை Traditionalist என்ற சொல்லுக்கு எதிரான பதத்தில் Modernity இலிருந்து வருவதாகவே கனகநாயகம் பயன்படுத்தி உள்ளார். Modernism என்பதை அடியொற்றி அல்ல) இப்புத்தகத்தில் எழுத்துப்பிழைகளும் இருக்கின்றன. 151ம் பக்கத்தில் பின்வரும் ஒரு வசனமிருக்கிறது. A message had to be sent to her sergeant husband who was a sergeant. சேரனுடைய அறிமுகத்தில் எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்ற அவரது கவிதை தொகுதியின் பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது. கலைச்சொற்கள் பகுதியில் நட்சத்திரம் என்பதற்கு Star என்பதும் Zodiac sign என்பதும் தரப்பட்டுள்ளது. நட்சத்திரம்(star) என்பதும் இராசி (Zodiacal sign) என்பதும் வேறு வேறானவைகள். எனவே நட்சத்திரத்துக்கு இந்த இரண்டு அர்த்தங்களையும் தருவது தவறு. முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு ஈழத்தமிழ்ப் படைப்புக்களின் தொகுதியொன்றை வெளியிட ஒரு சுயாதீன பதிப்பகம் முன்வந்து இதனை வெளியிட்டுள்ளது. இதற்கு கலைகளுக்கான கனேடிய கவுன்சிலின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பினுடைய வெற்றியைக் கொண்டுதான் தொடர்ச்சியாக தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தொகுப்புகள் வெளியிடுவதா என்பது தீர்மானிக்கப்படும். இவ்வளவு பொறுப்புக் கள் இருந்தும் இத் தொகுப்பு பொறுப்புணர்வற்று கவலையினமாக வந்துவிட்டது. புனைகதையோடு ஒப்பிடும்போது ஆங்கிலத்தில் கவிதைகளுக்கான வாசகர்கள் மிகக்குறைவு. இதனால் பெரும்பாலான பதிப்பகங்கள் புனைகதைகளை வெளியிட முன்வருகிற அளவுக்கு கவிதைகளை வெளியிட முன் வருவதில்லை. அதிலும் கவிதைகள் மொழிபெயர்க்கும்போது மூலத்திலிருந்து பலவற்றை இழந்துவிடும். எனவே இவ்விதமான ஒரு தொகுப்புக்கு கவிதைகளையும் உள்ளடக்கி அதுவே விற்பனை வீழ்ச்சிக்கும் ஒரு காரணமாக அமைவது இன்னொரு மொழிபெயர்ப்புத் தொகுப்பு வருவதற்கான சாத்தியங்களைக் குறைத்துவிடும். − இத் தொகுப்பின் தோல் விக்கு மூல காரணம் இதனுடன் பெருமளவில் சம்பந்தப்பட்ட கனகநாயகமும் சேரனும் தங்களது தனிப்பட்ட தொழில் சார்ந்த நலன்களுக்காக, அவற்றை முதன்மைப்படுத்தி இதனைத் தொகுத்ததுதான். கனகநாயகம் 2001ல் அவுஸ்திரேலியாவுக்கு ஒரு பெருமளவு கல்வி சார்பான (Academic) கருத்தரங்குக்கு வந்தபோது வாசித்த கட்டுரை Sacred and profane Literature என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த முன்னுரையின் ஆரம்பப் பகுதி மேற்கூறியதை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. தொகுப்பிலுள்ள முதலாவது கவிதையும் கடைசிக் கவிதையும் அதனை விளக்குவதற்கான முயற்சிதான். கனகநாயகம் இம் முன்னுரையை கல்விசார் வகையில் எழுதியிருப்பதால் அவரது இன்னொரு கல்விசார் தொகுப்பில் இதனை உள்ளடக்கலாம். - மறுபக்கத்தில் இது காலவரையான ஈழத்து நவீன தமிழிலக்கியத்தில் பெருமளவு பரிச்சயம் கனகநாயகத்துக்கு இல்லாதபடியினால் அவர் பெருமளவு சேரனில் தங்கியிருக்கவேண்டி ஏற்பட்டது. இதனால் தான் ஒரு சுயமான முன்னுரையை கனகநாயகத்தால் எழுதமுடியவில்லை. இந்த முன்னுரையில் பெண் படைப்பாளிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. இப்பட்டியலை சேரனின் சொற்படியே கனகநாயகம் எழுதியிருக்கிறார். ஏனெனில் இம்முன்னுரை எழுதுவதற்கு ஒருசில மாதங்களுக்கு முதல் கனகநாயகத்துடன் தொலைபேசியில் நான் உரையாடியபோது சமகால ஈழத்தமிழ் பெண் கவிஞர் எவரையுமே அவருக்கு தெரிந்திருக்கவில்லை. சேரனுக்கு தேவையானது எல்லாத் தொகுப்புக்களுக்குப் பின்னாலும் தான் இருக்கிறேன் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரிய வேண்டுமென்பதுதான். இதன் மூலம் தன்னை ஒரு Cultural figure ஆக கட்டமைப்பதுதான். செல்வா கனகநாயகமும் அதனை உறுதிப்படுத்துவதற்காக முன்னுரையிலும் பல தடவை சேரனின் பெயரைக் குறிப்பிட்டு முன்னுரைக்கு மட்டுமன்றி இதன் Feedback இலும் சேரன் உதவியதாக நன்றி கூறியிருக்கிறார். அதுபோதும் தானே சேரனுக்கு. இத்தொகுப்பில் ஒரு பொருத்தமானதும் பெறுமதியானதும் வேலை செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது இத்தொகுப்பு ஆர்.பத்மநாப ஐயருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதுதான். பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் முதலிய பல அருமையான தொகுப்புக்களும் புத்தகங்களும் வெளிவரக் காரணமாக இருந்தவர் அவர்.

தொடர்பான கட்டுரைகள்

1. பொக்ஸ் நாவல்: ஒரு மலின இலக்கியம்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்