பாலகுமார் பாலைநில பச்சோந்தி வரலாறு

By முரளி

 ஈரோஸ் முன்கதைச்சுருக்கம் 

ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்." 

பாலகுமாரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு கௌரவ உறுப்பினராக இருந்தார். பாலகுமாரனிற்கு புலிகள் கொடுத்த பணியென்றால் அது இறுதி யுத்த சமயத்தில்த்தான். ஆட்சேர்ப்பு. கட்டாய ஆட்சேர்ப்பிற்கு முதற்படியாக வன்னியை வலயங்களாக பிரித்து ஒவ்வொரு முக்கியஸ்தரை பொறுப்பாக நியமித்தார்கள். உடையார்கட்டு பகுதியில் பாலகுமாரன் செயற்பட்டார். வீதியில் செல்லும், வீடுகளில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒரு இடத்தில் ஒன்றாக சேர்த்து தீவிர பிரசாரம் செய்வார்கள். பாலகுமாரன் அதில் தீவிரமாக ஈடுபட்டார். 

 பாலகுமாரன் வங்கி முகாமையாளராக இருந்தவர். புலோலி வங்கியில் பணிபுரிந்தார். புலோலி வங்கி கொள்ளையுடன் சிறைக்கு சென்று, விடுதலை அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட தொடங்கிவிட்டார். வடமராட்சியின் மந்திகை பகுதியை சேர்ந்தவர் பாலகுமாரன். இடதுசாரி கருத்துக்களில் ஈடுபாடாகி, சீனசார்பு இடதுசாரி கட்சியுடன் நெருக்கமாக செயற்பட்டும் வந்தார். சமூக அக்கறை கொண்டவராகவும் விளங்கினார். அந்த சமயத்தில் ஆயுதவழியில் நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் உருவாக தொடங்கிவிட்டனர். ஆயுதவழியில் ஈர்ப்புள்ள இளைஞர்கள் எல்லா கிராமங்களிலும் கணிசமாக உருவாகிவிட்டனர். அப்படியான எண்ணமுடைய இளைஞர்களை சந்திக்கும்போது பாலகுமாரன் கொடுக்கும் ஆலோசனை, முதலில் உயர்தரம் வரை படித்து முடித்துவிட்டு அரசியலில் இறங்குங்கள். அரசியலிற்கு இறங்கும்போது முதிர்ச்சி அவசியம் என்பது.  

வங்கி முகாமையாளராக இருந்தாலும், சமூக அக்கறை காரணமாக பகுதி நேரமாக சமூகக்கல்வி, வரலாறு கற்பித்துக் கொண்டுமிருந்தார். மந்திகைப் பகுதியில் இயங்கிய யாழ்ரன் என்ற தனியார்கல்வி நிறையத்திலும், வேறு சில இடங்களிலும் பகுதிநேரமாக கற்பித்தார். இதை வருமானம் ஈட்டும் தொழிலாக செய்யவில்லை. இப்படியாக பாலகுமாரனின் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்தது. 

இந்த இடத்தில் ஒரு பின்னோக்கிய பார்வைக்கு செல்ல வேண்டும். அகிம்சைவழியால் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாதென தீர்மானித்த இளைஞர்கள் 1970 களின் தொடக்கத்தில் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் போக்கு விடுதலைக்கு உதவாதென பகிரங்கமாக பேச தொடங்கி, பின்னாளில் பிரபல்யமான விடுதலை அமைப்புக்களின் தலைவர்கள் அப்போது சிறிய குழுக்களாக இயங்க தொடங்கினார்கள். சத்தியசீலன், பிரபாகரன், சிறீசபாரத்தினம், குட்டிமணி, தங்கத்துரை, பத்மநாபா போன்றவர்கள் அவர்களில் சிலர். அப்போது இளைஞர்களிற்கு புகலிடமாக இருந்தது தமிழ் மாணவர் பேரவை. அவர்கள் தமிழர்விடுதலைக்கூட்டணியின் செயற்பாடுகளிற்கு இடையூறாக இருக்கிறார்கள் என, தமிழர் விடுதலைக்கூட்டணியின் மறைமுக ஆதரவுடன் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இளைஞர் பேரவை ஆரம்பித்த சில வருடங்களிலேயே குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் செல்லப்பிள்ளையாக செயற்படுகிறதென்ற அதிருப்தி உறுப்பினர்களிற்கிடையில் எழ ஆரம்பித்தது. விளைவு, 1975 இல் பேரவையிலிருந்து பலர் வெளியேறி ஈழவிடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தனர். புஸ்பராசா, முத்துக்குமாரசாமி, சுந்தர், வரதராஜபெருமாள் போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். யாழ் நகரத்திலுள்ள ரிம்மர் மண்டபத்தில் மாநாடு நடத்தி, தமிழீழ விடுதலை இயக்கம் பற்றிய பகிரங்க அறிவித்தலை வெளியிட்டனர். எரிமலை என்ற வாராந்த பத்திரிகையையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் 1975 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாண மேயர் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் பதினொருவர் கொல்லப்பட்டதற்கு துரையப்பாதான் காரணம், அவர் கொல்லப்பட வேண்டியவர்தான் என்ற கருத்தை தமிழர்விடுதலைக்கூட்டணி மேடை தோறும் பரப்பி வந்தது. இந்த சமயத்தில் துரையப்பா கொல்லப்பட்டார். துரையப்பாவை கொன்றது இளைஞர் பேரவை, தமிழீழ விடுத இயக்கங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கலாமென கருதிய பொலிசார் இரண்டு அமைப்புக்களின் உறுப்பினர்களையும் தேடித்தேடி வேட்டையாடினார்கள். தமிழீழவிடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பெரும்பாலானவர்கள் கைதாகி சிறைக்கு சென்றனர். அதன் மத்தியகுழுவிலிருந்த இரண்டு பேரும், செயற்பாட்டாளர்கள் சிலரும்தான் தப்பித்து தலைமறைவாக இருந்தனர். ஏற்கனவே வாராந்தம் எரிமலையென்ற சஞ்சிகையையும் வெளியிடுகிறார்கள். தலைமறைவு வாழ்க்கைக்கும் பணம் தேவை. பெரும் பணத்தட்டுப்பாடு. என்ன செய்யலாமென யோசித்தபோதுதான் வங்கிக்கொள்ளைக்கு திட்டமிட்டமிட்டார்கள். 

அவர்கள் தேர்ந்தெடுத்தது புலோலி வங்கி. பாலகுமாரன் முகாமையாளர். ஈழவிடுதலை இயக்க உறுப்பினர்கள் பாலகுமாரனை சந்தித்து பேசினார்கள். தீவிர எண்ணமுடைய இளைஞர்களுடன் அவருக்கிருந்த அபிமானம் காரணமாக விடயம் சுலபமாக முடிந்தது. குறிப்பிட்ட தினமொன்றில் வங்கியை கொள்ளையிட அனுமதித்தார். அந்த வங்கியில் பாலகுமாரன் தவிர்ந்த இன்னும் இரண்டு பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களிற்கு விடயம் தெரியாது. வங்கிக்கொள்ளையின் பின்னர் காவல்த்துறை தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது. பாலகுமாரனிற்கு விடயம் ஏற்கனவே தெரியும். அதனை பொலிசார் கண்டறிந்து சிறை சென்றார். பின்னர் ஈரோஸ் அமைப்புடன் செயற்பட்டார். ஈரோஸ் அமைப்பில் இருந்தபோது அவர் இயக்கங்களுடன் ஏட்டிக்குப்போட்டியான அணுகுமுறை கொண்டவரல்ல. அதனால் 1990இல் ஈரோஸை கலைத்துவிட்டு புலிகளுடன் இணைவது சுலபமானது. அதன்பின்னர் அவரை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் என விளித்தார்கள். அரசியல்த்துறையுடன் இணைந்து இருந்தார். கூட்டங்களில் பேசுவது, நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதென அவரது நாட்கள் கழிந்தன. 

அவர் போர்க்களத்திற்கு சென்றவரல்ல. இறுதி யுத்தம் தீவிரம் பெற்று, முதலாவது பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. உடையார்கட்டு சந்தி தொடக்கம் கைவேலி வரையான பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தபகுதியில் உள்ள வள்ளிபுனம் பாடசாலை மருத்துவமனையாக்கப்பட்டது. 2009 ஜனவரி இறுதியில் பாதுகாப்பு வலயம் மீது இராணுவம் அகோர செல் தாக்குதல் நடத்தியது. இதில் 50 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானது. மருத்துவமனையாக இருந்த வள்ளிபுனம் பாடசாலைக்குள் யாரையோ பார்த்துவிட்டு வந்த பாலகுமாரன் வாசலில் விழுந்த செல்லால் கையில் காயமடைந்தார். இறுதிவரை அந்த காயத்துடனேயே வாழ்ந்தார். 

குடும்பத்துடன் விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பி இராணுவத்திடம் செல்வதற்கு அவர் முயன்றபோதுதான் அவரது குடும்பத்தில் இரண்டாவது நபர் காயமடைந்தார். 

 தமிழீழ விடுதலையை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முப்பது வரையான இயக்கங்களின் தலைவர்களில் மிக அறிவார்ந்தவர்களில் பாலகுமாரனும் ஒருவர். உலக அரசியல், இடதுசாரித்துவ கொள்கை, அரசியல் விஞ்ஞானம் என அறிவுபூர்வ உரையாடல்களிற்கு பாலகுமாரன் பொருத்தமானவர். ஆனால் ஒரு தலைவராக பாலகுமாரன் சோபிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஈரோஸ் அமைப்பு கொண்டிருந்த ஆளணி, ஆயுத தளபாட வசதிகளிற்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் குறைவானது. பாலகுமாரன் தீவிரமாக ஆயுதவழி முறையை தலைமைதாங்க பொருத்தமானவரும் இல்லை. ஆளணியில் சிறிய இயக்கங்கள் எல்லாம் பெயர் சொல்லும்விதமாக ஏதாவதொரு தாக்குதலை நடத்தியிருந்தபோதும், ஈரோஸின் வரலாற்றில் அது மிஸ்ஸிங். ஈரோஸ் இயக்கத்தினர் நல்ல கருத்தியல்வாதிகளாக இருந்தார்கள். ஆனால் செயற்பாட்டாளர்களாக இருக்கவில்லை. ஈரோஸ் அவ்வளவாக இராணுவ சிந்தனையுடன் இயங்காதது, புலிகளுடன் நெருக்கத்தை பேணியது போன்ற காரணங்களால், 1985 இல் புலிகள் மற்ற இயக்கங்களை தடை செய்தபோது ஈரோஸ் தப்பிப்பிழைக்க வழிசமைத்தது. 

 இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் போன்ற என்பன இந்திய இராணுவத்தின் பின்னணியில் இயங்கின. புளொட் இலங்கை இராணுவத்தின் ஆதரவில் இயங்கியது. ஈரோஸ் யாருடைய ஆதரவில் இயங்கியது என்பதை அறுதியிட முடியாமல், “ஈரோஸ்தனத்துடன்“ இயங்கியது! இது ஈரோஸ்காரர்களை கொச்சைப்படுத்தும் கருத்தல்ல. அப்பொழுது இருந்த சூழலில் ஒரு நுணுக்கமான இராஜதந்திர அணுகுமுறையை அவர்கள் கையாண்டார்கள் என்றும் சொல்லலாம். ஏனெனில், இன்று திரும்பி பார்க்க எல்லாமே அழிவில்தான் முடிந்துள்ளன. அந்த நெருக்கடிக்குள் ஈரோஸ் போராளிகளை அதன் தலைமை காப்பாற்றியிருக்கிறது. 

 இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய சமயத்தில்தான் இயக்கங்களிற்கு சிக்கல் உருவானது. இயக்கங்களின் முன்னால் மூன்று தேர்வு இருந்தது. ஒன்று அரசுடன் இணைவது அல்லது இந்தியாவிற்கு செல்வது. இரண்டு புலிகளுடன் இணைவது. மூன்றாவது தனித்து இயங்குவது. 

 தனித்து இயங்கும் வல்லமை புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களிற்கு இருக்கவில்லை. அதற்கு சில வருடங்கள் முன்னரே புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கங்களின் ஆளணியை புலிகள் கணிசமாக அழித்துவிட்டார்கள். இந்திய இராணுவம் வெளியேறியபோது ஈரோசும் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நிலையேற்பட்டது. அப்பொழுது ஈரோஸிற்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்திய இராணுவம் வெளியேறியபோது, ஈரோஸ் பிரமுகர்கள் கொழும்பில் தங்கியிருந்தனர். பாலகுமாரன் யாழ்ப்பாணம் வருவதென்ற முடிவை எடுப்பதற்கு கொஞ்சம் தாமதம் காட்டினார். அப்போதைய அரசியல் சூழலில் பாலகுமாரனிற்கு வேறு வழிகள் இருக்கவில்லை. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் வெளியான புலிகளின் ஆதரவு பத்திரிகையான ஈழநாட்டில் ஒரு கருத்துப்படம் வெளியாகியிருந்தது. மதில் மேல் பூனை மாதிரி, மதில் மேல் பாலகுமாரன் இருக்கும்படம். புலிகளிடம் வரப்போகிறாரா, அரசுடன் இருக்கப் போகிறாரா என்பதே அதன் கேள்வி. ஈரோஸின் ஒரு பகுதினர் இலங்கை அரசுடன் இணைந்திருக்கும் முடிவை எடுத்தனர். இன்னொரு பகுதியினர் வீட்டுக்கு சென்றனர்.

 தலைவர் பாலகுமாரன்- ஈரோஸ் என்ற அமைப்பையே கலைத்துவிட்டு, யாழ்ப்பாணத்திற்கு புலிகளிடம் வந்தார். அவருடன் சேர்ந்து ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் புலிகள் அமைப்பிற்கு வந்தார்கள். சிலர் போராளியாகவும் இருந்தார்கள். புலிகளின் நீதிநிர்வாகத்துறை பொறுப்பாளராக இருந்த பரா அவர்களில் ஒருவர். பலர் புலிகள் அமைப்பில் ஊதியம் பெறும் பணியாளர்களாக செயற்பட்டார்கள். வர்ணராமேஸ்வரன், சின்னபாலா போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வர்ணராமேஸ்வரன் பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்தார். சின்னபாலா பின்னர் புலிகள் கட்டுப்பாட்டு பகுதியை விட்டு சென்று, கொழும்பில் ஈ.பி.டி.பியின் ஊடகத்தில் பணியாளராக இருந்தார். பின்னர் புலிகளால் அவர் கொல்லப்பட்டார். 

 பாலகுமாரனிற்கு புலிகள் எந்த பொறுப்பும் வழங்கவில்லை. தமது இயக்கத்தில் இணைந்த இன்னொரு இயக்க தலைவர் என்பதால் முக்கிய உறுப்பினர் என்று அழைத்து கௌரவம் வழங்கி, வீட்டில் உட்கார வைத்தனர். இது புலிகள் பாணி. கொள்கை முடிவு, தாக்குதல் விவகாரங்களில் பாலகுமாரனுடன் புலிகள் ஆலோசிப்பதில்லை. இது பாலகுமாரனிற்கு ஆரம்பத்தில் வருத்தத்தை கொடுத்தது. தனிப்பட்ட உரையாடல்களில் அதை பதிவு செய்தார். என்றாலும், புலிகள் முடிவை மாற்றத்தால் பாலகுமாரனிற்குள் இருந்த வருத்தமே வழக்கமாகிவிட்டது. எனினும், நெருக்கமானவர்களுடனான பேச்சில் அந்த வருத்தத்தை வெளிப்படுத்தவும் செய்வார். 

வன்னிக்கு புலிகள் சென்ற பின்னர் புதுக்குடியிருப்பில் பாலகுமாரனிற்கு வீடு வழங்கினார்கள். சமாதானத்தின் பின்னர், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் மாடி வீடொன்றை அமைத்து கொடுத்தார்கள். பாலகுமாரனின் மனைவி மருத்துவ மாது. இரண்டு பிள்ளைகள். ஒரு மகன். ஒரு மகள். இறுதியுத்தத்தின் ஆரம்ப சமயத்தில், புலிகள் கட்டாயமான ஆட்சேர்ப்பை ஆரம்பித்தார்கள். இதன் ஆரம்பகட்டத்தில் கட்டாயமான பிரச்சாரம் நடந்தது. வீதிகளில் செல்பவர்களை மறித்து, பிரச்சாரம் நடந்தது. கிட்டத்தட்ட கட்டாய ஆட்சேர்ப்பின் முதற்படி அது. உடையார்கட்டு பகுதியில் இந்த நடவடிக்கையின் முக்கியஸ்தராக பாலகுமாரன் இருந்தார். இந்த நடவடிக்கையில் பாலகுமாரன் விருப்பத்துடன் ஈடுபடவில்லையென பாலகுமாரனை தனிப்பட அறிந்தவர்கள் சிலர் இப்பொழுது சொல்கிறார்கள். ஆனால், அந்த சமாதானம் பாலகுமாரனை வரலாற்றின் பழியிலிருந்து விடுபட வைக்காது. இந்த அநீதியில் அவர் விரும்பாமல் ஈடுபட்டார் என்று சொல்ல முடியாது. காரணம், கட்டாய பிரசாரம், ஆட்சேர்ப்பில் ஈடுபட விரும்பாத சாதாரண போராளிகள் பலரே அதிலிருந்து விலகி யுத்தமுனைக்கு சென்றனர். புலிகளின் முக்கியஸ்தரான பாலகுமாரன் ஏன் சிறு அதிருப்தியையும் பகிரங்கமாக வைக்கவில்லை? மாறான கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத இயல்புதான் பாலகுமாரனின் பலவீனமாக இருந்தது. ஒரு தலைவராக அவரால் உருவாக முடியாமல் போனதற்கு காரணமும் இதுதான். 

 இறுதியுத்தத்தில் 2009 ஜனவரி அளவில் அவர் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் காயமடைந்தார். உடையார்கட்டு பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவம் மிலேச்சனமான தாக்குதல் நடத்தியபோது, அதில் காயமடைந்தார். உடையார்கட்டு பாடசாலை வைத்தியசாலையாக இயங்கி வந்தது. அந்த வைத்தியசாலைக்குள்ளிருந்து வெளியில் வந்தபோதே- வைத்தியசாலை வாசலில் காயமடைந்தார். 

 காயமடைந்ததன் பின்னர் பாலகுமாரன் விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தொடர்புகள் அனைத்தையும் இழந்துவிட்டார். முன்னரும் அரசியல்துறை பொறுப்பாளர் மட்டத்திலான தொடர்பையும், நிகழ்ச்சிகளில் தளபதிகளை சந்திப்பவராகவும் மட்டுமே இருந்தார். பாலகுமாரன் மட்டுமல்ல, அரசியல்த்துறை உயர்மட்ட பொறுப்பாளர்கள் எல்லோருக்குமே இந்தகதிதான். அவர்களால் என்ன நடக்குமென்ற முடிவெடுக்க முடியவில்லை. புலிகளின் தலைமையின் முடிவை அறியவும் முடியவில்லை. இப்பொழுது இலங்கை அரசியல் யாப்பு தொடர்பாக புத்தகம் எழுதி கூட்டத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட புலிகளின் அரசியல் ஆய்வாளர்கள் வலைஞர்மடத்தில் அருகருகாக குடியிருந்தனர். பாலகுமாரன், பரா உள்ளிட்டவர்களும் அந்த பகுதியில் அருகருகாக குடியிருந்தனர். இந்த அணிகள் தமக்குள் கூடி யுத்தம் அப்படி முடியுமா, இப்படி முடியுமா என மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பது அன்றாட நிகழ்ச்சி. தலைவரிடம் திட்டமுள்ளதா என்பதை அறிவதில் ஆர்வம் காட்டி, சாதாரண களத்திலிருந்து வரும் சாதாரண போராளிகளையும் பேட்டியெடுப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழ்சூழலில் முறையான சிந்தனைக்குழாம் உருவாகததற்கு, முறையான அரசியல் ஆய்வாளர்கள், ஆய்வுமுறைமை உருவாகாததற்கு அந்த சமயங்கள் முழுமையான சாட்சி. புலிகளின் காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் சம்பவங்களிற்கு பொழிப்பு கூறுபவர்களே. இதே ஆய்வுமுறைதான் இன்றுவரை தொடர்வது தமிழர்களின் துரதிஸ்டமே.

 யுத்தம் இறுகிக்கொண்டு வர, புலிகளின் தலைமை என்ன முடிவெடுக்கிறதென்பது தெரியாமல் பாலகுமாரன் திண்டாடிக் கொண்டிருந்தார். அது எப்ரல் மாதம். பாலகுமாரன் ஒரு ஆபத்தான முடிவெடுத்தார். அது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்வது! அப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு மக்கள் பெருந்தொகையில் தப்பிச்செல்ல தொடங்கிவிட்டார்கள். ஒன்று தலைமார்க்கமாக. இன்னொன்று, கடல்மார்க்கமாக. கடல்மார்க்கமாக தப்பி சுண்டிக்குளத்தில் நிலைகொண்டிருந்த 55வது டிவிசனிடம் சரணடைபவர்களிற்கு உயிருத்தரவாதம் உள்ளதாக ஒரு அபிப்பிராயம் செய்திகளின் வழியாக உருவாக்கப்பட்டிருந்தது. புலிகளின் முக்கியஸ்தர்களை குறிவைத்து அரசு உருவாக்கிய அபிப்பிராயமாகவும் இருக்கலாம். அந்த டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் இயல்பால் உருவானதாகவும் இருக்கலாம். வலைஞர்மடத்திலிருந்து படகில் தப்பித்து சுண்டிக்குளத்தில் தரித்து நின்ற 55வது டிவிசன் படையினரிடம் சரணடைவதென பாலகுமாரன் முடிவெடுத்தார். இதற்காக இரகசிய திட்டம் தீட்டினார். 

இது 2009 மார்ச் மாதத்தில் ஆரம்பித்த திட்டம். அதாவது தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச்செல்லும் பொதுமக்களிற்கே மரணதண்டனை வழங்கவும் புலிகள் எத்தனித்த சமயம். தனது உதவியாளர்கள் மூலம் படகொன்றை தயார் செய்தார். படகோட்டிக்கு ஒரு தொகை பணம் வழங்கப்பட்டது. பாலகுமாரன், மனைவி, பிள்ளைகள், நம்பிக்கைக்குரிய ஒரு சிலரின் குடும்பங்கள்தான் படகில் செல்பவர்கள். ஏப்பரல் முதல்வாரத்தில் பாலகுமாரனின் தலைமையில் படகில் தப்பிச்சென்றார்கள். வலைஞர்மட கடற்கரையில் மறைந்திருந்து, மக்கள் தப்பிச்செல்லாமல் ஏற்படுத்தப்பட்டிருந்த புலிகளின் காவல்வேலிக்கு டிமிக்கி கொடுத்து படகில் ஏறினார் புலிகளின் முக்கியஸ்தர். படகு மெல்லமெல்ல வேகமெடுத்து கரையை கடக்க எத்தனிக்க, யாரோ தப்பிச்செல்வதை கடற்புலிகளின் படகொன்று அவதானித்துவிட்டது. துரிதகதியில் விரட்ட தொடங்கினார்கள். தப்பிச்செல்பவர்களை பிடிப்பதே அந்த அணியின் பணி. யாரோ பொதுமக்கள் தப்பிச்செல்கிறார்கள் என நினைத்த கடற்புலிகள் விரட்டிச் சென்று, அருகில் சென்று படகு மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். படகிலிருந்து அலறல் சத்தங்கள். கிட்ட சென்று வெளிச்சம் பாய்ச்சினால், பாலகுமாரன் தலையை கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தார். அவரது இளவயது மகள் மகிழினியின் கையில் காயம். எலும்பு முறிந்திருந்தது. (அண்மையில் தமிழகம் திருச்சியில் மகிழினியின் திருமணம் நடந்திருந்தது) தம்மை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படி பாலகுமாரனின் மனைவி போராளிகளை மன்றாட்டமாக கேட்டார். போராளிகளிற்கும் சங்கடமாகிவிட்டது. அந்த படகை தடுத்து வைத்திருந்தபடி, கடற்புலிகளின் தளபதி சூசையை தொடர்பு கொண்டனர். பாலகுமாரன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து செல்வதென எடுத்து முடிவு சாதாரணமானதல்ல. அது தனி பாலகுமாரன் என்ற நபர் தப்பித்து செல்லும் சம்பவமுமல்ல. இனி விடுதலைப்போராட்டத்தின் ஆயுதவழி சாத்தியமல்ல என அவர் உணர்ந்ததாலும் இருக்கலாம். 1990 ஆம் ஆண்டு தொடக்கம் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்து, புலிகளின் எல்லா சரிகள், தவறுகளிலும் தார்மீக ரீதியில் பொறுப்புகூற வேண்டியவராக இருந்துவிட்டு, 26 ஆண்டுகளின் பின்னர் புலிகளை விட்டு தப்பிச் செல்வதென்று ஒரு பெரு வீழ்ச்சி. பாலகுமாரன் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தது தமிழீழ இலட்சியத்தை ஏற்றுத்தான். அவர் ஒரு நபரல்ல. ஈரோஸ் இயக்கத்தின் தலைவர். பாலகுமாரனும் தமிழீழ இலட்சியத்தை கைவிடாமல் இருந்தார் என்ற வரலாறு, 2009 ஏப்ரல் மாதத்துடன் முடிந்தது.

                  மகிழினி பாலகுமாரன் 

அந்த சமயத்தில் படகில் இருந்தது சாதாரண பொதுமக்கள் என்றால் நிலைமை வேறு. இரண்டாவது பேச்சிற்கு இடமில்லாமல் அவர்களை கரைக்கு கொண்டு வந்து தண்டனை வழங்கியிருப்பார்கள். ஆனால் படகிலிருந்தது பாலகுமாரனும் குடும்பமும். தம்மை தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்குமாறு படகிலிருந்தவர்கள் உருக்கமாக கேட்டுக் கொண்டனர். இந்த சூழ்நிலையில் என்ன முடிவெடுப்பதென தெரியாமல் விழித்த கடற்புலி போராளிகள், உடனடியாக கரையிலிருந்த கட்டளை மையத்தை தொடர்பு கொண்டனர். விபரத்தை கேட்டு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கட்டளை மையம் கடற்புலிகளின் தளபதி சூசையை தொடர்பு கொண்டது. ஏப்ரல் மாதம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை எட்டி, விடுதலைப்புலிகளின் தளபதிகளிற்கு அதிக நெருக்கடியை கொடுத்திருந்தது. இப்படியான சூழலில் கோபமான அதிரடி முடிவுகளைத்தான் தளபதிகள் எடுப்பார்கள். சூசையிடம் விடயத்தை சொன்னதும், சம்பவ இடத்திலுள்ள போராளிகளின் இணைப்பை ஏற்படுத்தி தரச் சொன்னார். கட்டளை மையமும் விரைவாக தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தது. சூசையை அறிந்தவர்களிற்கு தெரியும் அவரது கோபம். இயக்க வேலைகளில், களமுனைகளில் யாராவது தவறுவிட்டால் அவரது கதி அதோகதிதான். அதுபற்றிய விசாரணை நடக்கும்போது, அவரது கையில் என்ன பொருள் இருக்கிறதோ அந்தப்பொருளால் தவறிழைத்தவரிற்கு சாத்துப்படி நடக்கும். தப்பிச்சென்றவர்களின் படகை வழிமறித்த அணியின் பொறுப்பாளரை சூசை நேரடியாக வோக்கி டோக்கியில் தொடர்பு கொண்டார். “தப்பிச் சென்ற படகொன்றை துரத்திப் பிடித்தோம். அதிலிருப்பது பாலகுமாரன். அவர்களை என்ன செய்யலாம்“ என கடலிலிருந்து கேட்டார்கள். இந்த உரையாடல்களை பாலகுமாரனும் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தார். “இயக்கத்தில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். எமது பகுதியை விட்டு வெளியேற மக்கள், போராளிகளிற்கு கட்டுப்பாடு இருந்தால் அது நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். அவர்களை கரைக்கு கொண்டு வாருங்கள்“ என கடும் தொனியில் உத்தரவிட்டார். பாலகுமாரன் எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். மகள் மகிழினிதான் பெரிதாக சத்தமிட்டு அழுதபடியிருந்தார். அதன் பின்னர்தான் போராளிகளும் கவனித்தார்கள். படகை துரத்திச் சென்று சுட்டதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. கையொன்றில் தோள்மூட்டிற்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதி எலும்பை உடைத்துக் கொண்டு ரவையொன்று சென்றிருக்கிறது. அவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு வீடுகளிற்கு அனுப்பப்பட்டார்கள். அதன் பின்னர், மே 17ம் திகதி புலிகள் அமைப்பு முழுமையாக சிதறும்வரை அமைப்பு சார்பில் யாருமே அவரை தொடர்பு கொள்ளவில்லை. 

புலிகளை பொறுத்தவரை ஏப்ரல் மாதத்திலேயே பாலகுமாரன் இறந்து விட்டார். மே 17ம் திகதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் வரையிலும் முறையான மருத்துவ வசதிகள் இல்லாமல் மகிழினி சிரமப்பட்டார். பாலகுமாரனின் மனைவி மருத்துவதாதியென்பதால் ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்தார். பின்னர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததன் பின்னர்தான் முறையான சிகிச்சையளிக்கப்பட்டது. கை எலும்புகள் பொருந்த “அன்ரனா“ பொருத்தப்பட்டது. அன்ரனாவுடன்தான் யாழில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதினார். அன்ரனாவுடன்தான் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறினார். 

        தன்னை சுட்ட இயக்கத்தின் தலைவரை                    முகநூலில் பாராட்டும் அறவக்குரோத்து

மகிழினி_பாலகுமாரன் போருக்குப்பின்னான தமிழ் சமூகத்தின் அற வங்குரோத்தின்(Moral Bankruptcy) சிறப்பான உதாரணம். தமிழ்நாடு சென்ற மகிழினியும் அவர்தாயும் தமிழக புலிகளின் ஆதரவு கூட்டங்களால் தங்கள் வாழ்க்கையை செழிப்பாக்க இப்போ புலிப்புராணம் பாடுகிறார்கள். பாலகுமார் குடும்பம் தப்பியோடும்போது புலிகளின் சூட்டில் குடும்பமே இறந்திருக்கலாம். பாலகுமாரை மட்டும் கைது செய்துகொண்டு புலிகள் மனைவியையும் மகளையும் சர்வதேச விதிப்படி பொதுமக்களாக தப்பிச்செல்வதை அனுமதித்திருந்தால் இன்றைக்கு மகிழினியின் சகோதரனும் உயிரோடு இருந்திருப்பான். அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகளிடம் இதைவிட வேறெதை எதிர்பார்க்கலாம்?

தொடர்பான கட்டுரைகள்

1. கருணாகரனும் நாற்பது திருடர்களும்

2. பாலசிங்கத்தின் பாணபத்திர ஓணாண்டிகள்

3. கள நிலவரம்: ஈழப்போரின் இறுதிக் காட்சிகள்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்