ஒரு நாள் கூத்து(சிறுகதை)

நட்சத்திரன் செவ்விந்தியன்

எழுத்தாளன் காட்டுக்கும் நாட்டுக்குமிடையிலுள்ள புல்வெளியிலுள்ள ஒரே தனித்த வீட்டில் குதிரையோடும் இரண்டு நாய்களோடும் (Labrador Retriever, Rottweiler) வசிக்கவேண்டும். மதியத்தில் குதிரையை புல்வெளியில் மேயவிட்டபின் நாய்களோடு காட்டுக்கு வேட்டைக்கு போகிறான். அங்கு ஒரு வனமோகினியை சந்திக்கிறான். பகல்முழுக்க அவளோடு வனத்தில் அலைகிறான். நாய்கள் இவர்களை விட்டு தம்பாட்டுக்கு காடுமணந்து வேட்டையாடுகின்றன. அந்திசாய்கிறபோது வனமோகினி இரவுக்குமுன் தான் போய்விடவேண்டுமென்கிறாள். அவன் தன் நாய்களுக்காக விசில் அடித்தபோது மோகினி மறைந்துவிட்டாள். (அவள் Shrek பட இளவரசிபோல் இரவில் அரக்கியாபவள்) 

நாய்கள் வாயில் இரண்டு உடும்புகளோடு பிரசன்னமாகின்றன. இரவில் அவளை தன்வீட்டுக்கு கூட்டிப்போய் அவளுக்கு சமைத்துப்போடும் தன் கலைந்த கனவோடு வீடேகிறான். பாதிவழியில் இன்னொரு விசிலடிக்க குதிரை கணங்களில் வாயில் நுரைதள்ள வந்து சேர்கிறது. உடும்புகளை கொடியால் கட்டி தோளில் போட்டு குதிரையில் முன்னிரவில் நட்சத்திரங்களை GPS ஆகவைத்து வைத்து வண்டிப்பாதைகள், காடு, மலை, கழனி கடந்து நகரம் போகிறான். 

அந்நகர மதுச்சாலையொன்றில் அவனது குதிரைக்குளம்பொலி கேட்ட நண்பர்கள் வெளியேவந்து ஆரவாரிக்கிறார்கள். நாய்கள் சந்தோசத்தில் நண்பர்களைச்சுற்றிவந்து குரைக்க பரிசாரகர்கள் உட்பட அனைவரும் வெளியேவந்து புதினம் பார்க்கிறார்கள். அவன் தன் குதிரையை park பண்ணி கட்ட பரிசாரகன் குதிரைக்கும் நாய்களுக்கும் தண்ணி வைக்கிறான். நண்பர்கள் உடும்பை எப்படி சமைக்கவேண்டும். எவை கழிவாக நாய்களுக்கு என்று அறிவுறுத்துகிறார்கள். 

அவர்கள் மதுச்சாலை மொட்டைமாடியில் நட்சத்திரங்களுக்கு கீழே தண்ணியடிக்கிறார்கள். கள்ளுக்கு கதை புருசன். காட்டருசியும் காட்டு கறியும் பரிமாறப்படுகிறது. சாமப்பூசை மணியோசைகேட்க எல்லோருக்கும் மூக்குமுட்டவெறி. எழுத்தாளன் 

"You carry on"

 "I am steady"

 என்ற தனக்கு தெரிந்த இரண்டு ஆங்கில வசனங்களை உதிர்த்து குதிரையேறுகிறான். Labrador நாய் Pathbreaker ஆக முன்செல்ல Rottweiler சைரன் அடித்து நகர போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறது. அவன் நகர எல்லைவரைதான் கடிவாளத்தை பிடித்திருந்தான். கிராமத்துபாதைகள் வரமுன்பே குதிரை கழுத்தை கட்டிக்கொண்டு குப்புற படுத்துவிட்டான். போரில் வீரமரணமடைந்த மாவீரன் வித்துடலை காவிவரும் விசுவாசமான குதிரையும் மெய்ப்பாதுகாவலர்களும்போல மூன்று 4 கால் மிருகங்களும் அவனை வீடுசேர்த்தன. அன்றிரவு குதிரை கொட்டிலிலேயே நாய்கள் அவனை தூங்கவைத்தன. 

வைகறையில் வனமோகினி வந்து நடுக்காட்டில் என்னை தனிக்கவிட்டு தண்ணியடிக்கபோனியா என்று திட்ட கனவு கலைந்து பதாதித்து எழுந்தான். குற்ற உணர்ச்சிகொண்டான். இருந்த தயிரை சூடாக்கி நாய்களுக்கும் குதிரைக்கு கொள்ளும் வைத்து அவைகளை தழுவினான். தனக்கு அவல் ஊறவைத்து புகையிலையை சுருட்டினான். நாய்கள் அவனை அனுதாபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தபோது உங்களைவிட மகத்தான Antidepressant குளிசை கிடையாது என்றவாறு குளிசைகளை அடுப்பில் போட்டான். காலையில் சுருட்டு புகைத்தவாறு எழுதினான்.

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்