கர்னலின் காமம்

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட மயிர்கூச்செறியும் போர்க்காலக் காதல் கதை

  By நட்சத்திரன் செவ்விந்தியன்

Woman at the window(1925) Salvador Dali

1987 மார்ச் 30 இரவு, யாழ்நகர்

 கிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ”
         - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி

                                           1

 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டின் சிவில் நிர்வாகத்தையும் புலிகளே தங்கள் கட்டுப்பாட்டிலெடுப்பதாக அறிவிக்க இலங்கை அரசாங்கம் குடாநாட்டுக்கு எரிபொருள் மின்சாரதடை விதித்தது. அதே மாதத்தில் யாழ் இந்துக்கல்லூரியின் பிரபல்யமான 35 வயதான வெள்ளாள தமிழாசிரியன் விக்னேஸ்வரன் சவூதி அரேபியாவில் பொறியியலாளராக வேலைசெய்யும் தன்னோடு இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்தே ஒன்றாய்ப்படித்த தன் நெருங்கிய நண்பன் கிளியன் என்ற கிறிஸ்ரோபருக்கு ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தை யாழ்ப்பாணத்தில் அஞ்சல் செய்யாமல் கொழும்புக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்லும்தனது பெரியதாயிடம் கொடுத்து 
 “பெரியம்மா இது மிகக்கவனம். சிங்களவன் ஆமிக்காரனிட்ட இது அம்பிட்டாலும் பரவாயில்லை ஒரு தமிழனட்டயோ புலியட்டயோ அம்பிடக்கூடாது. அப்பிடி அம்பிடுமெண்டால் நீங்களே கடிதத்தை அழிச்சுப்போடுங்கோ. பத்திரமா கொழும்பில ஒரு தபால் பெட்டியில போடுங்கோ” 

 என்று சொல்லிக்கொடுத்தான். அக்கடிதம் பின்வருமாறு அமைந்தது.

 என் இனிய நண்பா நலம் நலமறிய ஆவல். 

நீ உங்கு வேலையில் மிக மும்முரமாக இருப்பாய். இங்கோ நிலமைகள் நாளுக்குநாள் மிக வேகமாக மாறி வருகின்றன. இப்ப எங்களுக்கு மின்சாரமில்லை. பெற்றோல் மண்ணெண்ணை கறுப்பு பொருளாதாரப் பொருட்கள் என்பதால் நெருப்புவிலை. இந்நிலமை இப்படியே தொடர்ந்தால் யாழ்ப்பாண மக்கள் அனைவரும் சமணத்துறவிகளாக மாறி இருள் வந்தபிறகு உறியில் ஏறிவிடும் காலம்தான் வரும். 
 
எனக்கு தொழில் மிகத்திருப்தியாக இருக்கிறது. யாழ்ப்பாணத்திலேயே மிகப்பிரபல்யமான தமிழாசிரியனாக நான் வந்து கொண்டிருக்கிறேன். பல ரியூட்டரிகள் பாடம் எடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றன. எனக்குத்தான் நேரம் இல்லாதிருக்கிறது. கம்பன் கழக பட்டிமன்றங்களும் நிறைய நடக்கின்றன. தலைவர் சிவராஜ் தனது தொழிலுக்கு நான் ஆப்பு வைத்துவிடுவேனோ என்று அஞ்சுகிறார். உனக்குத் தெரியும்தானே யாழ்ப் பாணத்தில் எந்த ஊரில் பேசக்கேட்டாலும் நான் இலவசமாகப் பேசப்போகிறனான். சிவராஜைப் போல நான் காசுக்குப் போறாளில்லை. 
 
நிற்க இக்கடித்ததை நான் எழுத ஒரு முக்கியமான காரணமிருக்கு. மச்சான் உன்னைப் போல வேறு மிக நெருக்கமான நண்பன் எனக்கு வேறு யாருமில்லை. எங்கள் பன்னிரண்டு வயதில இருந்து ஆரம்பித்த சிநேகிதம் இப்ப 21 வருசமாகுது. சாதியையும் அந்தஸ்தையும் கடந்து மிக முகிழ்த்திருக்கிறது.  நான் ஒரு சாதாரண தமிழாசிரியன். நீ ஒரு அமெரிக்கன் கொம்பனியில பெரிய பொறியியலாளன். போன வருசம் உன்னுடைய வழமையான விடுமுறையில் ஊருக்கு வந்தபோது நானும் குடும்பமும் வசிக்கும் என் சீதன வீட்டின் பழுதடைந்த நிலையைப் பார்த்து வருந்தினாய். மாட்டின் ரோட்டில் இப்படி ஒரு வீடு இருக்கிறது அவமானம் என்று நினைத்திருக்கிறாய். உடனேயே ஒரு லட்சம் உன்னுடைய காசு கொடுத்து வீட்டில் தண்ணீர் தாங்கி குளியலறை என்பவற்றை நீயே முன்னின்று திருத்த வழிசெய்தாய். உன்னுடைய காசை எப்ப என்னால் திருப்பித்தர முடியுமோ எனக்குத் தெரியாது. அதை எதிர்பார்க்கிற ஆளும் நீயில்லை. அப்படிப்பட்ட உனக்கு ஒரு கஸ்டம் வருமெண்டால் எப்படி மச்சான் பார்த்துக்கொண்டு இருக்க எனக்கு மனம் வரும். 
 
உண்மை சில நேரங்களில கசப்பானதுதான் மச்சான். ஆனால் உனக்குத் தெரியும்தானே எங்கட இந்துக் கல்லூரி கணித வாத்தியார் சிதம்பரத்தார் அடிக்கடிசொல்லும் வாக்கியம். “உங்கட ஆசிரியனட்டையும் வைத்தியனட்டையும் லோயரட்டையும் உண்மையை அப்படியே சொன்னால்தான் உங்களுக்கு நன்மையும் மீட்சியுமடா” அதுமாதிரித்தான் மச்சான் நல்ல நண்பனிடமும் உண்மை சொன்னால்தான் நட்புக்கு மீட்சி. எனக்கு மனசு கேட்குது இல்லை மச்சான். நான் கேள்விப்பட்டதை உனக்கு நான் சொல்லியே ஆகவேண்டும். பிறகொருநாள் நீ என்னிடம் கேட்கலாம் மச்சான். “விக்கி உனக்கு இந்தக் கதை எப்பவோ தெரியும். அப்ப நீ எனக்கு அறிவிச்சிருந்தால் ஏதோ வகையில் இந்தச் சிக்கலில் இருந்து வெளியில வந்திருப்பன். இப்ப நீ என்னை மீள முடியாத ஒரு துன்பச் சகதியில நண்பனாயிருந்து கொண்டு மாட்டிவிட்ட மாதிரியில்லையா” 

 கிளியா எல்லா துன்பங்கள் வருத்தங்களுக்கும் வாழ்க்கையில விடுதலை இருக்கடா. நீ இப்பவும் இளைஞன் தானடா. மனசை கல்லாக்கிக்கொண்டு நான் சொல்ல வரும் செய்தியைக்கேள். என் உயிரைக்குடுத் தெண்டாலும் இதிலிருந்து நீ மீள வழிகாட்டுவேன். 

 உனக்குத் தெரியும்தானே மச்சான் யாழ் இந்துக்கல்லூரி புலிகளின் ஒரு கோட்டை. பொன்னம்மான், கேடில்ஸ், யோகி, திலீபன், ராதா, பொட்டம்மான் எல்லாருமே இக்கல்லூரியின் மாணவர்களாக இருந்ததால்தான் புலிகளில் சேர்ந்தாங்கள். என்னுடைய அப்பனின் வழியைப் பின்பற்றி நானும் இங்கு ஆசிரியனாக வந்தேன். இப்பாடசாலையில் எவன் குசு விட்டாலும் உடனேயே யார் குசு விட்டான் என்று கண்டறியும் வளங்கள் என்னிடமுண்டு. இதை நான் ஏன் உனக்கு சொல்லுகிறேன் என்றால் நான் உனக்கு சொல்லப்போகும் செய்தி இன்னும் ஊருக்கு தெரியாது. ஊருக்கு இக்கதை பரவும் வாய்ப்புமில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கும் புலிகளின் தலமைக்கும் உண்மையை உய்த்தறியும் வாய்ப்புக்கொண்ட இன்னபிறரான எனக்குமே இச்செய்தி தெரியும்.
 கல்லூரியில் என் ஒன்பதாம் வகுப்பு மாணவனான தமிழ் பாடத்தில் மிகத் திறமையான முகுந்தன் என்ற உனதுவீட்டு அயலவனானவனே இந்த செய்தியை சொன்னான். புலிகளில் பெரிய கையான கர்னல் நள்ளிரவுக்குப் பிறகு தனியே ஒரு மெய்க்காப்பாளருமில்லாமல் உன்னுடைய வீட்டுக்கு வந்து போவதை தான் கண்டதாகச் சொன்னான். உன் வீட்டில் உன் மனைவி மட்டுமே இருப்பது கூட அப்போது அவனுக்கு தெரியாது. தாயையும் தகப்பனையும் தின்னியான தனிப்பிள்ளையான அவன் சமீபத்தில் மணமான தனது சிற்றன்னையோடும் சித்தப்பாவோடும் வசிக்கிறான். வாடகைக்கு குடியிருக்கும் அவர்கள் ஊருக்கு புதிசு. “முகுந்தன் எனக்கு நீ எவ்வளவு விசுவாசமாயிருக்கிறியோ அதைவிட நான் உனக்கு விசுவாசமாயிருப்பன். இந்தக் கதையை இப்ப வெளியில சொன்னால் இப்ப நாடு இருக்கிற நேச்சரில் உனக்கும் எனக்கும் ஆபத்து. பரம இரகசியமாக வைத்திரு என்று பூடகமாக அவனுக்கு எச்சரித்தேன். அதை அவன் பரிபூரணமாக விளங்கிக்கொண்டான். 

 கர்னலைப் பற்றி இப்போது பல செய்திகள் கேள்விப்படுகிறேன். ஆரம்பத்தில் எனக்கு நம்ப கஸ்டமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது புலிகளின் சில தலைவர்களின் கதைகளை நம்பகரமான வட்டாரங்களிலிருந்து கேள்விப்படுகிற போது ஆச்சரியமாகப்படவில்லை. கர்னலுக்கு யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு குறுக்குத் தெருவிலும் ஆசைநாயகிகள் இருப்பதை நான் உறுதியாக அறிகிறேன். உனக்கு கோபமும் பெருந்துன்பமும் மனச்சோர்வும் வரும். ஆனால் இப்போதுதான் நீ கொஞ்சம் பொறுமையாக ஆத்திரப்படாமல் அவசரப்படாமல் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். எங்களுக்கு என்ன தெரிவுகள் இருக்கின்றன என்று யோசிக்க வேண்டுமடா. அங்கிருக்கும் உன்னோடு நான் கடிதத்தில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். ஆனால் நீ இங்கு எனது முகவரிக்கு கடிதம் எதுவும் அனுப்பாதே. புலிகளின் புலனாய்வாளர்கள் பெருமளவு கடிதங்களை உடைத்துப் படிக்கிறார்கள். நீ இங்கு முடியுமான விரைவில் வருவதே சிறந்தது. ஆனால் எப்படியாக வருவது (உன் மனுசிக்கு தெரிந்தா தெரியாமலா என்பனவற்றை வடிவாக யோசிக்க வேண்டும்) 
 அடுத்த மாதத்தில் நான் கொழும்புக்கு வந்தால் தொலைபேசியில் உனக்கு முழுதும் சொல்லலாம். அடுத்த கடிதத்தில் மிகுதி. கடவுளிடம் பாரத்தை போட்டுவிட்டு நடக்க வேண்டியதை பார்ப்போம். 

 இப்படிக்கு 
உயிர் நண்பன் விக்னேஸ்வரன் 

 றியாட் நகரில் தன்னுடைய வேலைத்தலத்தில் பகல் பதினொருமணிக்கு கிடைத்த கடித்ததை படித்த கிளியன் உருக்குலைந்தான். இது ஒரு கெட்ட கனவாக பொய்யாக இருக்கக்கூடாதா என்று அவன் கொஞ்சம் சுதாரித்தபிறகு மனம் அங்கலாய்த்தது. போன வருடம் கார் கால முடிவிலிருந்து ஒன்றரை மாதவிடுமுறையில் ஊரில் மனைவியோடு போய் நின்ற காலத்தில் மனைவி நடந்துகொண்ட முறைகளிலிருந்து அவனுக்கு ஒரு சிறு சந்தேகம் துளிர் விட்டிருந்தது. மனுசி தன்னை அசட்டை செய்கிறமாதிரி உணர்ந்திருந்தான். 
 
அன்று மனம் சரியில்லையென்று விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு பெட்டி சிகரெட்டும் வாங்கிக் கொண்டு ஒரு நட்சத்திர விடுதிக்கு குடிக்கப்போனான். நண்பனின் கடிதத்தை மறுபடியும் வாசித்தவன் தனக்கு இருக்கிற தெரிவுகள் என்ன என்று சிகரெட் பெட்டிக்குள்ளிருக்கும் தாளை கிளித்து பட்டியல் போட்டான்.

1. மனைவியை கொல்லுவது 

2. அவளோடு தொடுப்பிலுள்ளவனைக் கொல்லுவது. மனைவியை மன்னித்து ஏற்றுக்கொள்ளுவது 

3. மனைவியையும் அவளோடு தொடுப்பிலுள்ளவனையும் கொல்லுவது. 

4. விவாகரத்து செய்துவது

 5. ஒன்றும் செய்யாமல் பொண்ணையனாக இருப்பது. 

 சிகரெட்டும் விஸ்கியும் அவனுக்கு ஒரு கவனத்தையும் நிதானத்தையும் கொடுத்தன. தான் மனைவியை தனியவிட்டு வந்ததால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. தங்களுக்கு பிள்ளை இல்லாததும் ஒரு காரணம். தன்னிலும் பிழையிருக்கிறது என்று யோசித்தவன் இரண்டாவது தெரிவையே முடிவுசெய்தான். 

                                     2

கிளியனும் வினோதினியும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்குமே பூர்வீகம் சிறுதுறைமுகப் பட்டினமான வல்வெட்டித்துறைதான். வசதியான மேலோங்கிக் கரையார்களான இருவரின் குடும்பங்களும் யாழ்நகரில் குடியேறியிருந்தன. அவள் எடுப்புச்சாய்ப்பும் திறமையும் மிக்க சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் படித்தாள். இவன் அதிகாரம் மிக்க யாழ் இந்துக் கல்லூரியில் படித்தான். இருவரும் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும்போது கல்லூரிகளுக்கிடையில் நடக்கும் ஒரு களியாட்ட விழாவில் சந்தித்தார்கள். அழகையும் திமிரையும் அறிவையும் ஒருங்கே வெளிப்படுத்திய வினோதினியைப் பற்றி ஒருபூர்வாங்க புலனாய்வு செய்த கிளியன் அவள் தனது தூரத்து உறவினராக இருக்கலாம் எனக் கண்டடைந்ததும் அவள் தனக்கேயானவள் என்று மனதுள் போட்டுக்கொண்டான்.

 உயர்தர வகுப்பில் இருவரும் கணிதம் படித்தார்கள். இருவரும் ஒரே ரியூட்டறியில் படிக்க வந்தபிறகு கிளியன் வினோதினியை “சுத்தத்தொடங்கினான்”. கிழமை நாட்களில் பாடசாலைக்குப் பிறகு நடக்கும் ரியூட்டறி முடிய வினோதினியும் தோழிகளும் சைக்கிளில் சுண்டிக்குளிச் சந்தி பக்கமிருக்கும் அவர்கள் வீடுகளுக்கு முன்னிரவில் போக கிளியனும் தனியனாக பின் தொடர்ந்தான். நிலவு இரவுகளிலும் பின்தொடர்ந்திருக்கிறான். கரிய இரவுகளிலும் பின் தொடர்ந்திருக்கிறான். எந்த இரவிலும் அவனின் மனசிலிருந்தது காதலும் நம்பிக்கையும்தான். 
 கிளியன் விநோதினி காதல் கதை யாழ் நகரில் பிரபல்யமானது. இருவருமே ஆங்கிலப் பாடத்தில் திறமையானவர்கள் என்பதால் ஆங்கிலப் போட்டிகளில் பிரபல்யமானவர்களானார்கள். இதனால் கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் குருவானவர்களும் இவர்களின் காதல் பாடத்தில் ஈடுபாடு காட்டினார்கள். இதே காலத்தில் கிளியன் பாடசாலைகளுக்கிடையில் நடக்கும் உதைப்பந்தாட்டங்களில் முதல் முதலாக நூறு கோல்கள் போட்டவன் என்ற சாதனை படைத்தான். பாடசாலையில் மிகப் பிரபல்யமானவனாகவும் எல்லோராலும் விரும்பப்பட்டவனாகவுமிருந்தான். வரலாற்றிலேயே முதல் முறையாக யாழ் இந்துக்கல்லூரிக்கு ஒரு சோதனை வந்தது. இது காலவரையும் ஒரு சைவ வேளாளனே மாணவர் தலைவனாக வரக்கூடிய இக்கல்லூரியில் ஒரு கத்தோலிக்க கரையானான கிளியனை புறக்கணிக்க முடியாத நிலையில் நிர்வாகம் திண்டாடியது. அவனுக்கு அடுத்த கட்டத்திலிருந்த வெள்ளாள இந்து மாணவர்களை அழைத்து அதிபர் ஆலோசித்த போது அனைவரும் ஏகோபித்த குரலில் சொன்னது இதுதான்.

 “ கிளியனின் திறமைக்கும் தலமைத்துவத்துக்கும் முன்னால் நாங்கள் எல்லோருமே இரண்டாந்தரமானவர்களே. அவன் நியமிக்கப்படுவதுதான் சரியானது.” 
அவன் மாணவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டது அவனுக்கு தெரியமுன்னரே கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் மகளிர் கல்லூரிகளுக்கு பரவிவிட்டது. அன்றிரவு கிளியன் வினோதினியை பின்தொடர்ந்த போது விநோதினியின் நண்பிகள் அவளைவிட்டு விலகிய சில நிமிடங்களில் விநோதினி மணலில் தன் சைக்கிள் புதைகிறமாதிரி ஒரு நாடகமாடிய போது கிளியன் உதவிக்கு ஓட அதையே எதிர்பார்த்திருந்தவள்

 “கொங்கிறாஷுலேஷன்ஸ் கிறிஸ்ரோபர் நீங்கள் தான் இனி பள்ளிக்கூடத்தில ஹெட் பிறிபெக்ற் எண்டு கேள்விப்பட்டன். இனிம எனக்குப் பின்னால வந்து மானங்கெடாமல் என்னோட என்ன கதைக்கிறதெண்டாலும் ரியூட்டறியிலேயே கதையுங்கோ. ஞாயிற்றுகிழமை காலமைகளில பெரிய கோயிலுக்கு வந்தாலும் வடிவா கதைக்கலாம்” 

என்றாள். அவள் சைக்கிளில் விழுந்தது. இவன் ஓடிப்போய் எழும்ப உதவியது. அப்போது அவள் இரண்டு இன்ப அதிர்ச்சிகளை வார்த்தகைளாக உதிர்த்துவிட்டு பறந்து போனது இவையெல்லாம் சில செக்கனிலேயே முடிந்த கனவைப் போலிருந்துது. …… அதே இடத்திலேயே சைக்கிளில் சில நிமிடங்கள் நின்றுகொண்டிருந்தான்.

 விக்கினேஸ்வரனின் வீட்டுக்குபோன பிறகுதான் கிளியன் அதிர்ச்சியிலிருந்து மீண்டான். செய்தி உண்மையென்று உறுதிப்படுத்தினான் நண்பன். 

 கிளியனும் விநோதினியும் பொறியியல் துறைக்கு தெரிவானார்கள். அவன் இரசாயன பொறியியல் படிக்க அவள் கட்டட பொறியியல் படித்தாள். அழகிலும் இருவரும் பொருத்தமானவர்களாயிருந்தனர்.

 மாநிறக்காரன், வடிவானவன், ஆறடிமனிசன் கிளியன். கறுப்பி விநோதினிக்கு கண்களும் மூக்கும் சொண்டுகளும் மட்டும் எடுப்பாக இருக்கவில்லை. அவளின் வண்டி குண்டி மார்பகங்கள் கழுத்து தோள் தொடை கால் எல்லாமே அம்சமாயிருந்தன. கிளியனின் உயரத்துக்கும் அவள் ஈடுகொடுத்தாள்.

 பாலை யாழ்ப்பாணத்திலிருந்து போய் மாவலி நதிக்கரையோர மலைநிலப் பல்கலைக்கழகத்தில் இவர்கள் காதலித்துக் கொண்டே படித்தது சக மாணவர்கள் பலருக்கே பொறாமையாக இருந்தது. ஆனால் இருவரின் பெற்றோருமோ இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு. பாட்டன்மார்களின் காலத்தில் இரு குடுபம்பங்களும் வல்வெட்டித்துறையில் பிடித்த சண்டையால் இரு குடும்பங்களும் வஞ்சம் தீர்த்தனவாம். கிளியன் பகுதி 

“என்னதான் இவையள் எங்களைவிட பணக்காரராக வசதியாக இருந்தாலும் உவேன்ரை பணம் கள்ளக் கடத்தலால வந்ததுதானே” 

என்று வினோதினி பகுதியை பழிக்க விநோதினி பகுதியோ மற்றவர்களை 

“இவையளுக்கு திமிலர் நுளையார்  கலப்பு. ஒரு 60 வருசத்துக்கு முதலும் மீன்பிடிச்சுக் கொண்டிருந்த கரையார்தானே இவையள்” 

என்று பழித்தது. காதலர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. ஓடிப்போய் திருமணம் செய்வோம் என்று முடிவெடுத்தார்கள். 

பல்கலைக்கழக இறுதிப்பரீட்சை முடிந்தபின்னர் பொறியில்துறை மாணவர்கள் அனைவருமே ஒரு சாகசமான சுற்றுலா செல்வது வழமை. எங்கே போவது என்று யோசித்தபோது கிளியன் காலியிலிருந்து கொழும்பு வழியாக தலை மன்னாருக்கு செல்லும் மெயில் ரயில் வண்டிப் பயணத்தை சிபாரிசு செய்தான். மூவின மக்களின் பிரதேசங்களுக் கூடாகவும் இந்த ரயில் செல்வது மட்டுமின்றி நாட்டின் எல்லா நிலவுருவங்களையும் ஊடறுத்துச் செல்கிறது என்றும் காரணம் சொன்னவன் மன்னாரில் தனது சித்தப்பா வசதியாக இருப்பதாகவும் அனைவருக்கும் எதுவித செலவின்றி அவரின் பண்ணையில் தங்கலாம் என்றும் சொன்னான். சிங்கள மாணவர்கள் மறு பேச்சின்றி அவனது யோசனையை ஏற்றார்கள். அக்காலத்தில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே பல்கலைக்கழக தரப்படுத்தலால் சுமுகமான உறவு நிலவவில்லையென்றூலும் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடக்கும் போட்டிகளில் கிளியன் மிகப்பரபல்யமான கால் பந்தாட்டக்காரனாக இருந்ததால் அவனது சொல்லுக்கு சிங்கள மாணவர்களிடம் மதிப்பிருந்தது.

 கிளியனின் சித்தப்பா வசதியாக இருந்தாலும் குடும்பத்தால் விலக்கி வைக்கப்பட்டவராயிருந்தார். முன்னைய காலங்களில் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு இரவிலேயே சைக்கிளில் திரைப்படம் பார்க்க வருவார்கள். நெடிய இந்த காட்டுவழி சைக்கிள் பயணம் கொடியது என்பதால் ஆண்கள் மட்டுமே வருவார்கள். பேதுரு என்கிற ஒரு மீன்பிடிக் கரையார் ஒருவர் இப்படி நண்பர்களோடு திரைப்படம் பார்க்க வருகிறபோது அவரது நேசத்துக்குரிய 16 வயது பேரழகு மகள் சகாயசீலி தன்னைக் கூட்டிச்செல்லுமாறு அழிச்சாட்டியம் செய்தாள். பேதுரு தனது மனைவியிடம் தனது மகளை சாந்தப்படுத்துமாறு வேண்ட மகள் தலையில் மண் அள்ளிக்கொட்டி “நீங்கள் இரண்டுபேருமே என்னை பெத்தவர்கள் இல்லை” என்று படலையைத்திறந்து வீதிக்கு போனாள். 

தகப்பனுக்கு வேறு வழியிருக்கிவில்லை. அவளை தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நண்பர்களோடு யாழ்ப்பாணத்துக்கு சைக்கிள் உளக்கினார். அது ஒரு நிலவுகாலம். சகாயசீலி அந்த ஜந்து மணி பயண நேரம் முழுக்க பேசியபடியே இருந்தாள். நண்பர்கள் தாங்களும் தங்கள் மனைவியையோ மகளையோ அழைத்துவரலாமே என்று சபலப்பட்டார்கள். 

 அன்றைக்கு நள்ளிரவு காட்சிக்கு வல்வெட்டித்துறையிலிருந்து முக்கால் மணித்தியாலம் சைக்கிள் உளக்கி கிளியனின் சித்தப்பா தனியனாக படம்பார்க்க யாழ் நகருக்கு வந்திருந்தார். நிலவையே எட்டித் தொடுகிற கனவு 21வயது அவருக்கு. புனித ஜெருசலேமுக்கு வருகிற பரதேச யாத்திரிகர்களைப் போல சைக்கிளில் மூச்சு வாங்கியபடியே வந்து இறங்கும் பேதுருவையும் நண்பர்களையும கண்டார். பேரழகி சகாயசீலியை கண்டு விதிர் விதிர்த்தார். 

 வழமையைப் போல அன்றைக்கு பின்னிரவில் படம் முடிய காங்கேசன் துறைவீதிக்குப் போய் முட்டை அப்பமும் பாலப்பமும் தேத்தண்ணியும் குடித்துவிட்டு மறுபடியும் மன்னாருக்கு சைக்கிள் உளக்கும் நிலையில் பேதுருவின் குழு இருக்கவில்லை. அவர்கள் கரையூரிலிருக்கும் தங்கள் உறவினர் வீட்டுக்கு சென்றார்கள். உறவினர்களோ புது ஐடியா கொடுத்தார்கள். 

“பேதுரு அண்ணை அடுத்தமுறை மகளைமட்டும் கூட்டிக்கொண்டு வராமல் அக்காவையும் கூட்டாளிமாற்றை குடும்பத்தயைும் கூட்டிக்கொண்டு வாங்கோ. வடிவாசாப்பிட்டு படுத்தெழும்பி அடுத்த இரவு இன்னோரு படமும் பாத்திட்டு பிறகும் படுத்திட்டு அதுக்கடுத்தநாள் மன்னாருக்கு போகலாம்.” 

 அந்த நிலவில் வந்த காதல்தான் சித்தப்பனை வல்வெட்டித்துறையை விட்டே ஒதுக்கியது. சித்தப்பன் புலனாய்வுசெய்து சகாய சீலியின் பூர்வீகம் அறிந்தார். வங்காலைக்கு அவளின் பள்ளிக்கூடத்துக்கே போய் தன் மனதைதிறந்தார். 

“பெட்டை எனக்கு நல்ல வாழ்க்கை நீ அமைச்சுத் தந்தால் உனக்காக நான் வங்காலையிலேயே ஒரு தியேட்டர் கட்டுவன். உன்ரை பாதத்தை சுற்றி மணக்கிற நாயைவிட பலமடங்கு உனக்கு நான் விசுவாசமாயிருப்பன் என்ரை காதலை ஏற்றுக்கொள்ளு.” 

 தன்னுடைய 23வது வயதில் சித்தப்பர் சகாயசீலியைக் கிளப்பிக்கொண்டு வல்வெட்டித்துறைக்குப் போனார். மீன்பிடிக்கிற ஒரு கரையாடிச்சியை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தனக்குச் சேரவேண்டிய சொத்தையும் பணத்தையும் தகப்பனிடம் சண்டைபோட்டு பிடுங்கினார். புதுசாக ஒரு உழவு இயந்திரம் வாங்கிக்கொண்டு பெட்டையோடு வங்காலைக்கே போய் குடியேறினார். உழவு இயந்திரத்தில் கல் அள்ளி மண் அள்ளிப் பறிக்கும் தொழிலில் தொடங்கியவருக்கு சகாயசீலியின் பலனால் தொடங்கிய தொழில் எல்லாம் பெருகியது. தோட்டம் வயல் பண்ணை என்று தொடங்கி மன்னாரில் பலருக்கு அவரே வேலை கொடுத்தார்.

 மூன்று நாட்கள் மாணவர்கள் மாந்தையிலிருந்த சித்தப்பரின் பண்ணையில் தங்கி காடுகளில் வேட்டையாடி கடல் குளங்களில் குளித்து பிரசித்தமான சைவ, வேதக்கோயில்களை தரிசித்து உல்லாசமாடினார்கள். சித்தப்பர் அருமையான காட்டு கடலுணவுகள் உண்ண வழிசெய்தார். மாணவர்கள் அனைவரும் இறால் கொத்துரொட்டியை அறிந்ததும் இங்குதான். 

கடைசி நாள் சித்தப்பரும் சகாயசீலியும் அவர்களின் 13 வயது மகன் டேவிட்டும் சேர்ந்து 23 வயதான கிளியனுக்கும் விநோதினிக்கும் பண்ணையிலேயே சக மாணவர்கள் முன்னிலையில் திருமணஞ் செய்து வைத்தனர். 

                                         3

 பின்பனிக்கால நடுப்பகுதியில் கொழும்பில் வந்து இறங்கிய கிளியன் தன்னுடைய பாஸ்போட்டை ஒளித்துவிட்டு அது தொலைந்துவிட்டது என்று பொலிசில் புகார் குடுத்தான். மூன்றே நாளில் அவனது மாறுவேட படத்தோடு பாஸ்போட்டும் அடையாள அட்டையும் அவன் கைக்கு வந்தது. எந்த அரச அலுவலகத்துக்கோ பொலிஸ் நிலையத்துக்கோ போகாமலும் அஞ்சு சதம் லஞ்சமாக குடுக்காமலும் நுகேகொடவில் இருக்கும் சிங்கள நண்பன் வீட்டில் நின்று கொண்டே கிளியன் இவற்றை சாதித்தான். சிங்கள நண்பர்களிடம் அவனுக்கிருந்த நட்பும் செல்வாக்கும் அப்படி. 

 நாலாம் நாள் கிளியன் தலைமன்னார் மெயில் ரயிலேறி மன்னாருக்கு போனான். ஆனையிறவு வழியாக அவன் யாழ்ப்பாணத்துக்கு போனால்தான் அவன் வருவது புலிகளுக்கு தெரியவரும். ஒரு தோல்பையுடனும் தளர்வோடும் மன்னாருக்கு வந்திருந்தவனை சித்தப்பனால் மட்டுக்கட்ட முடியவில்லை. 

“சித்தப்பா என்னை தெரியுதோ என்று கேட்க” 

சித்தப்பன்

 “குரல் கேட்டமாதிரித் தான் கிடக்கு”

 என்று தலையை சொறிந்தவாறே

 “எடேய்…… என்ன கோலமடா உது மொட்டை வழிச்சு தாடியையும் எடுத்து எங்கையடா உன்ரை மனுசி”

 என்று கேட்க சித்தப்பனை கட்டிப்பிடிச்சுக்கொண்டு தேம்பியழத் தொடங்கினான்.

 மாறுவேடத்தில்தான் வந்திருந்தான். கே.ஜே.யேசுதாஸ் தாடியும் சற்று சடையான மயிரும்தான் அவனது வழமையான தோற்றம். இப்போது முழுமையாக முகச்சவரம் செய்து தலைமயிரை மிக ஒட்ட வெட்டியிருந்தான்.  மூன்று மாதத்தில் மனுசி செய்யும் துரோகத்தில் ஒரு பத்துக்கிலோ எடையும் குறைந்து மெலிந்து போயிருந்தான். மேலும் ஒரு பழைய பாணியிலிருந்த போலி முகக்கண்ணாடியும் அணிந்திருந்தான்.

 சகாயசீலியிடம் “அவன் ஒரு முக்கிய காரியமா வந்திருக்கிறான். அவன் வந்திருக்கிறது உன்னை தவிர யாருக்கும் தெரியக்கூடாது. நாங்கள் மத்தியானம் சாப்பிட வருவம்” என்ற சித்தப்பா அவனையும் கூட்டிக்கொண்டு மன்னார் நகரில் கடற்கரையோரமிருந்த மதுச்சாலைக்கு குடிக்கப்போனார். மகன் டேவிட் லண்டனில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். 

 “எடேய் உன்ரை சித்தி ஒரு சின்ன விசயத்துக்கும் பயப்பிடுவாள். நீ எதோ இரகசிய திட்டத்தோடு மனமுடைந்து வந்திருக்கிறாய். மனந்திறந்து எல்லாம் பறை” 

என்றார். லயன் லாகர் பியறும் ஒம்லெற்றும் சாப்பிட்டவாறு முன்னொரு காலத்தில் இராமன் சீதையை மீட்க வந்திறங்கிய அதே மன்னார்த் தீவிலிருந்து கிளியன் சித்தப்பனோடு சேர்ந்து தன் மனைவியை மீட்கும் திட்டம்போட்டான். 

 எழுபதுகளின் நடுப்பகுதியில் சித்தப்பனின் தொழில் மேலோங்க அவர் மிக வசதியாக இருந்தார். இப்போது நிலமை மாறிவிட்டது. விவசாயத்திலா கைத்தொழில் துறையிலா முதலிடுவது என்பது அப்போது இருக்கின்ற அரசாங்கங்களைப் பொறுத்தது என்பதை சித்தப்பர் நிறைய இழந்தே படித்தார். அவரது விவசாய நிலங்களிலிருந்து வரும் வருமானம் அவற்றில் வேலை செய்கிறவர்களுக்கே போக இப்போது அவர் வைத்து ஓட்டும் ஒரு லொறி வண்டியிலிருந்து வரும் வருமானமே குடும்ப செலவுகளுக்கு கைகொடுத்தது. கிழமைக்கு ஒரு தடவை ஒருகோளயாவோடு போய் மன்னாரிலிருந்து சரக்குகளைக்கொண்டு இறக்குவதும் அங்கிருந்து மன்னாருக்கு சரக்குகளைக் கொண்டுவந்து இறக்குவதுமே இப்போது அவரது தொழில். 

மன்னார்ப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் புலிகளும் உலாவினார்கள். ஒரு தடவை சித்தப்பரின் லொறியினுள் மறைத்து வைத்து சில ஆயுதங்களையும் வெடிமருந்துப் பொருட்களையும் மன்னாரிலுள்ள புலிகளிடம் கடத்த உதவுமாறு கர்னலே வந்து சித்தப்பனிடம் உதவி கேட்டான். சித்தப்பரும் பிரியத்தோடு சம்மதித்து உதவினார். அதற்குப் பிறகும் கர்னலின் பெயரைப் பாவித்து உதவிகேட்ட சில புலிகளுக்கு சித்தப்பர் அவ்விதம் உதவினார். பின்னொருநாளில் மன்னாருக்குப் போகும் இடைவழியில் வைத்து புலிகளின் வரி சேகரிப்போர் அதிகவரி கேட்டார்கள். சித்தப்பர் அதைபற்றி யாழ்ப்பாணத்தில் கர்னலிடம் முறையிட்டார். “தம்பி என்ரை குடுப்பத்தையே பணயம் வைச்சு உங்களுக்காக நான் சாமான் கடத்தியிருக்கிறன். அப்படியான என்ன மாதிரியான ஆக்களுக்கு நீங்கள் கொஞ்சம் வரி சலுகை தரவேணும் மக்காள். நீங்கள் கேட்கிற வரிசெலுத்தினால் எங்களுக்கு வருமானமே இல்லைமக்காள்” 

 கர்னல் ஒரு அவசர இராணுவ தேவைக்கு தன்னுடைய கள்ளோழையே இடைநிறுத்தி வந்த அவசரத்தில் சாரத்தோடும் சரியாக பொத்தான்கள் இடப்படாத சேட்டோடும் காணப்பட்டான். அவன் முதலில் புழுத்ததூசணத்தில் சித்தப்பனை திட்டினான். பிறகு “தமிழீழத்துக்காக நீங்கள் செய்ய வேண்டிய சேவைகளுக்கு நீ வரிவிலக்கு கேட்கிறாயோ. நான் நச்சால் உன்ரை லொறிக்குள்ள உனக்கு தெரியாமலே நாங்கள் வெடிமருந்து வைச்சுப்போட்டு ஆமிக்கே அடிச்சு சொல்லுவன்” என்று மிரட்டினான்.

 அன்றைக்கே மடுமாதாவை வேண்டி “கர்னல் இடைவழியில வெடிபட்டுச் சாகவேணும்” என்று சாபம் போட்டார் சித்தப்பா. 

இன்றைக்கு தன்னுடைய மனைவிக்கு கர்னல் ஓக்கிறான் என்று அவனை கொல்ல தன்னுடைய உதவியை கேட்கிறான் பெறாமகன். தன்னுடைய சாபம் அறிந்து தன்னை கொல்ல பெறாமகனையே கர்னல் அனுப்பியிருப்பானோ? தனயனை வைத்தே தகப்பனை கொல்கிறவர்கள் அல்லவா புலிகள் என்று சந்தேகித்தார். மறுகணம் கர்னல் ஒரு பொறுக்கி என்கிற இரகசியத்தை பலதடவைகள் தான் கேள்விப்பட்டதையும் தனக்கும் பெறாமகனுக்கும் இடைப்பட்ட அதீத வாரப்பாட்டையும் பெறாமகன் ஒருபோதுமே புலி அனுதாபியாக இல்லாதிருந்ததையும் உணர்ந்தவர் கிளியனை சந்தேகித்ததற்காக குற்ற உணர்ச்சி கொண்டார். கிளியன் அவசரப்பட்டான். 

“சித்தப்பா உங்கட லொறியில ரகசியமாய் என்னை எப்படியோ யாழ்ப்பாணத்துக்கு கொண்டுபோய்ச் சேருங்கோ. பொறுக்கி பொடிகாட்டுக்கள் இல்லாமல் தனியத்தான் இரவில மனுசியட்ட வந்திட்டுப் போறானாம். நான் பதுங்கிக் காத்திருந்து கழுத்தை திருகியோ கட்டையால அடிச்சோ அவனை முடிக்கிறன்” 

என்று சொல்ல சித்தப்பர் ஒரு பேரனுக்கு தாத்தா கதைசொல்லும் பவ்வியத்தோடு பின்வருமாறு சொன்னார்.

 “டேய் கிளியா நாங்கள் ஆத்திரப்பட்டு அவசரப்பட்டால் கொஞ்சம் பிசகினாலும் என்ரையும் உன்ரையும் கதியில்லை என்ரை குடும்பத்தையும் அழிச்சுப் போடுவங்கள். நாங்கள் செய்யப் போகிறது சும்மா காரியமில்லைமோன. உவன் கர்னல் சிங்கள ஆமிக்கும் மற்ற இயக்கங்களுக்கும் மட்டுமில்லையெடா இயமனுக்கும் இரும்பு தீத்தினவன்ரா. எங்கட ஒவ்வொரு அடியும் யோசிச்சு வடிவா எடுத்து வைக்கோணுமடா. நாளையிண்டைக்கு பறுவம் வேற. தேய்பிறைக் காலத்தில செய்ய வேண்டிய வேலை இதடா. ஒரு கிழமை நாங்கள் ஆயத்தங்களை செய்துபோட்டு அடுத்த கிழமை போனால் அமாவாசைக்கு கிட்ட மட்ட செய்யக் கூடியதாக இருக்கும். உன்ரை வாழ்க்கைழயை சீர்தூக்கிவிர்ற பொறுப்பை என்னட்ட விட்டிட்டு நான் சொல்லிறபடி செய். உனக்கு பழையபடி நிம்மதியை மீட்டுத்தாறன்ரா” 

 சித்தப்பன் முதலில் தனது பண்ணைக்கு அவனை கூட்டிச்சென்று கொட்டிலுக்குள்ளிருந்த ஒரு கள்ளிப்பெட்டிக்குள் துளாவினார். துருவேறிய வாள், பாதாள கரண்டி, நாய்ச்சங்கிலி இவற்றை எடுத்தபிறகு கண்கள் மினுங்க ஒருபழைய கிறிஸ் கத்தியை எடுத்தார். 

 “மோன உன்ரை சித்தியை தூக்கிறதுக்கு என்ரை 23 வயதில நான் வெளிக்கிடேக்குள்ள இடுப்பில செருகின கத்தியிது. கொஞ்சம் தீட்டி மினுக்கினால் சரி. பழைய கால ஆயுதங்கள்தான் கிளியா எங்கட யாத்திரைக்கு பொருத்தம். துவக்கும் குண்டும் சத்தத்தையும் புகையையும் மணத்தையும் கொணந்து எங்கட மாட்டிவிட்டுமடா.சத்தமில்லாமல் காரியஞ் சாதிக்கிறதெண்டால் இந்தச் சாமான்தான்ரா திறம்” 

என்று கிளியனின் கையில்கொடுத்தார். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றால் இரவில கிளியனின் மனுசியின் வீட்டுக்கு முன்னால் ஒளித்துக் காத்திருந்து கர்னலுக்கு பின்னால் வந்து ஒரு இரும்புத் தடியால் சித்தப்பர் தலையில அடிக்க கர்னலின் அதிர்ச்சி தெளிய முன்னரே கிளியன் முன்னால் வந்து கிறிஸ் கத்தியால் அடிவைத்தில் தொடச்சியாய் குத்துவான். அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியால் கர்னலின் வாயிலிருந்து எந்த சத்தமும் வராது. 

 ஒரு கத்தரி வெருளியை கர்னலாக பாவித்து பயிற்சி எடுத்தார்கள். கிளியன் குத்துகிற வேகமும் உக்கிரமும் வரவர அதிகரித்தது. கத்தரிவெருளிக்குப் பின்னால் நின்ற சித்தப்பர்

 “கிளியா இரும்புக் கம்பியால நான் அடிக்கிற ஒரு அடியிலேயே அவனைச் சாக்காட்ட எனக்குத் தெரியாதே. அவனை குற்றுயுரும் குறையுயிருமாய் நான் விர்றதே உன்ரை கையாலே அவன் சாகக்கூடாது எண்டதுக்கு மட்டுமில்ல சாகிற கர்னலுக்கு உன்னை அடையாளம் காணவேணும் எண்டதும் மட்டுமில்லை அவன் சாகேக்குள்ள உன்ரை முகத்தில இருக்கிற பெருமிதமும் அவனுக்குத் தெரியோணுமடா. அவன் சாகேக்குள்ள உன்னாலதான் அவன் சாகிறான் எண்டது அவனுக்கு தெரிஞ்சு கொண்டே சாகிறான் எண்டது உனக்குத் தெரிஞ்சாத்தான்ரா உன்ரை மனுசியோட பழையபடி போய் உன்னால வாழ்க்கை நடத்த முடியுமடா” 

இப்படியெல்லாம் கத்தி அவனுக்கு உருவேற்றினார். ஐந்தாம் நாள் மடுமாதாகோவிலுக்கும் திருக்கேதீஸ்வரத்துக்கும் போய் போகிற காரியம் வெற்றியாய் முடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். ஆறாம் நாள் அதிகாலையில் லொறியில் வழமையான சரக்குகளோடு யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டார்கள். கிளியன் கோளயா போலவே சாரமும் பழைய சேட்டும் போட்டிருந்தான். மனுசி சோரம்போன பெருந்துன்பத்தில் உழலும் அவன் தோற்றம் அவன்போட்ட வேஷத்திற்கு மிகப் பொருத்தமாயிருந்தது.

                                         4  

காலையிலேயே யாழ் நகருக்குள் போய்ச் சேர்ந்தார்கள். மத்தியானத்துக்குப் பிறகு இருவரும் யாழ் இந்துக் கல்லூரிக்குப் போய் கல்லூரி முடிந்து விக்கினேஸ்வரன் வெளிவரும் வரை காத்திருந்தார்கள். கிளியன் அவனை அடையாளம் காட்ட சித்தப்பர் நெருங்கிப்போய் செய்தி சொல்லி தனது லொறி விட்டிருக்கும் இடம்சொல்லி இருள் வந்தபிறகு சந்தடியில்லாமல் வந்து சந்திக்கச் சொன்னார். இரவில் லொறிப்பெட்டிக்குள் மூவரும் சந்தித்தார்கள். விக்கினேஸ்வரன் நண்பனை மட்டுக்கட்டவில்லை. நண்பனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு முதலில் கிளியன் அழுதான். சித்தப்பர்தான் “அழுது ஊரைக்கூட்டி வந்தகாரியத்தை கெடுத்துப்போடாத” என்ற அவனை வழமைக்குக் கொண்டுவந்தார். சித்தப்பரும் கிளியனும் கர்னல் இரவில் தனியாகத்தான் வருகிறவனா என்பதை கேட்டு உறுதிப்படுத்திய பின்னர் தங்களது திட்டத்தை சொன்னார்கள். விக்கி அதைக்கேட்டு திடுக்கிட்டாலும் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்ய தயாராய் இருப்பதைச் சொன்னான்.

 “மச்சான் நீ இதுவரையில் எனக்கு செய்ததே பெரிய உதவி. ஒரு கதைக்காகச் சொல்லுறன். நாங்கள் மாட்டுப்பட்டாலும் இதுக்குள்ள நீ இருக்கிறது தெரியவரக்கூடாது. உனக்கு புதுசா ஏதாவது முக்கியமான தகவல் கிடைச்சால் மட்டும் எங்களை வந்து சந்தி. மற்றும்படி தேவையில்லாமல் சந்தேகப்பர்ற மாதிரி நடந்து நீ இதுக்குள்ள மாட்டுப்படாதை. எல்லாம் நல்ல மாதிரி நடந்தபிறகு நான் சவூதிக்குப் போட்டு ஒரு மாதத்துக்குள்ள ஒரேயடியாத் திரும்பிவரேக்குள்ள தான் இனிம நாங்கள் சந்திக்கோணும்” 

என்று கிளியன் சொல்ல “அவன் கர்னல் கிழமையில ஒண்டு அல்லது ரண்டு இரவு பின் சாமத்தில வந்திட்டுப் போறான் எண்டதுதான் நான் கேள்விப்பட்டது. வடிவா அவதானிச்சுப் போட்டுச் செய்யுங்கோ. எதுவும் பிரச்சனை வந்து நீங்கள் ஒளிச்சிருக்க வேணுமெண்டால் என்ரை வீட்டை யோசிக்காமல் வாங்கோ. நீங்கள் வேறை நான் வேறையில்லை. உங்களுக்கு வாற ஆபத்து எனக்கும் வரட்டும். வேற இடங்கள் ஏற்பாடு செய்து தாறதெண்டாலும் நான் செய்துதாறன்” 

என்று சொல்லிப் போட்டு விக்கி சைக்கிளில் திரும்பிவிட்டான். 

 அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் ஆந்தை போல வாழ்ந்தார்கள். சித்தப்பர் சந்தேகம் ஏற்படாதவாறு லொறியை ஒவ்வொருநாளும் புது இடங்களில் தரிக்க விடுவார். பகல் முழுக்க இருவரும் லொறிக்குள்ளேயே படுத்திருப்பார்கள். இரவானதும் எழுந்து மனிசக்கடன்களை முடித்து பிறகு பின்சாமம் தொடங்க கிளியனின் மனைவி வீட்டடிக்குப்போய் வேவு பார்த்துக் காத்திருப்பார்கள். 

 அந்த வீடு யாழ்நகரின் செல்வாக்கான தென்கிழக்கு கடற்கரையோர புற நகரிலிருந்தது. தேவாலயங்களும் சவக்காலைகளும் அபூர்வமான மரங்களும் நிறைந்த அவ்வூரில் இரவில் சவுக்கு மரங்களைத் தாண்டி வரும் கடற்காற்று வீசும். வீடு இருக்கும் வீதியில் பெரிய தேக்க மரங்களும் வாகை மரங்களும் ஆல மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. தங்களுக்கு பிள்ளைச் செல்வமில்லாத குறையில் வீட்டை தெரிவு செய்யும் போது அனாதை குழந்தை ஒன்றைத் தத்தெடுப்பது போலப் பவ்வியத்துடன் ஆராய்ந்தார்கள். கிளியன் சவுதிக்குப் போய் வந்த முதல் விடுமுறையில் வாங்கினார்கள். டச்சுக்காலத்தில் ஒரு டச்சுப்பிரதானி தனக்கு கட்டியவீடு. பின்னர் அவ்வீடு வயோதிபர்களான பறங்கியர்களிடமிருந்த போதே கிளியன் அதனை வாங்கிப் புனரமைத்தான். 

தேவதையொன்று வசிக்க கட்டியவீடு போல சின்ன பரப்பிலிருந்த வீடு. ஆனால் இரண்டுமாடியும் ஒரு நிலவறையும் இருந்தது. முன்னோர்கள் நிலவறையை திராட்சை மதுவை களஞ்சியப்படுத்தும் இடமாகவும் கடும் கோடை நாட்களில் குளிர்மையாயிருக்கும் அவ்வறையை படுக்கவும் பயன்படுத்தினார்கள். 1985 ம் ஆண்டுக்குப்பிறகு நிலவறை ஒருபதுங்கு குழியாகவும் பயன்பட்டது. 

 அப்போது யாழ்ப்பாணத்தில் எரிபொருள் மின்சாரத் தடையிருந்ததால் வீதி விளக்குகள் ஒளிர்வதில்லை. இரவுபத்து மணிக்குப் பிறகு மண்ணெண்ணை லாம்புகளையும் அணைத்து சனங்கள் நித்திரைக்குப் போய் விடுவார்கள். கும்மிருட்டில் பெருமரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்து உளவு பார்க்க வசதியாக இருந்தது. முதல் இரண்டு இரவுகளும் பதினொரு மணியிலிருந்து அதிகாலையில் வீடுகளில் சனங்கள் எழும் சத்தம் வரும்வரை காத்திருந்தார்கள். கர்னல் வரவேயில்லை. 

முன்றாம் இரவு அவ்வழியே சைக்கிளில் ஒரு மனிதன் வர அவனுக்கு ஒளிக்க ஒரு வாகை மரத்துக்குப் பின்னால் மறைய வேண்டியிருந்தது. பிறகு அந்த மரத்திலேயே சிரமப்பட்டு ஏறிவசதியாக ஒரு கிளையில் இருந்தார்கள். அன்றைக்கு மட்டும் அவ்வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.  தூரத்தில் ஒரு வாகனம் வரும் சத்தம் கேட்டது. அச்சத்தம் அதிகரித்து இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்தது. வந்தது ஒரு அழகிய சின்ன கார் என்பதை அடையாளம் கண்ட கிளியன் உசாரானான். முன் லைற் அணைக்கப்பட்டிருந்த  அக்கார் அவர்கள் இருந்த மரத்துக்கு கீழேயே இரகசியமாக ஊர்ந்து வந்து நின்றது. கர்னல்தான் இறங்கினான். ஓசைப்படாமல் கார்க் கதவை பூட்டியபடியே சுற்ற வரப்பார்த்து நோட்டம் விட்டான். அவன் ஒரு கையில் வோக்கி ரோக்கியுடனும் மறுகையில் கார்ச்சாவியுடனும் அதே சத்தம் வராத வேகத்தில் விநோதினியின் வீட்டுக்கு அடிவைத்துப் போனான். இடுப்பில் அவன் கட்டியிருந்த உறையிலிருந்த றிவோல்வரையும் சித்தப்பரும் பெறாமகனும் அவதானித்தார்கள். கர்னல் வீட்டின் வெளிக்கதவை திறந்து உள்ளே போகும்போதும் ஒரு தடவை திரும்பிப் பார்த்தான். பிறகு அவ்வீட்டின் மரக்கதவு திறக்கப்படுவதும் கர்னலை உள்ளேவிடப்பட்டு மூடுவதும் மரத்திலிருந்து பார்க்கும்போது தெரிந்தது. 

 சில நிமிடங்களில் அவர்கள் மரத்திலிருந்து இறங்கி சந்தடியில்லாமல் வீட்டை அணுகினார்கள். வெளிக் கதவை திறந்து வீட்டின் முகப்பையும் கடந்து போனவர்கள் வீட்டிற்குப் மதிலுக்குமிடைப்பட்ட ஓடையில் நின்றபோது வினோதினி அலையலையாய் சிரிக்கும் சத்தம் கேட்டது. கிளியன் வீட்டுச்சுவரில் காதை வைத்து ஒட்டுக்கேட்க சித்தப்பர் அவனுக்கு காவலாக வெளி நிலவரங்களை உன்னிப்பாய் அவதானித்துக் கொண்டிருந்தார். மேலே திறந்திருந்த யன்னலால் எட்டிப்பார்க்க வேண்டுமென்று கிளியனுக்கு தோன்றியது. கடலுக்கருகிலிருந்த அவ்வீட்டின் நிலவறைக்கு வெளிவேண்டு மென்பதற்காக கிரவுண்ட் புளோர் சற்று உயரத்திலேயே கட்டப்பட்டிருந்தது. அதனால் யன்னல் இன்னும் உயரத்திலிருந்தது. கிளியன் சைகை மொழியால் பேசி சித்தப்பரை யன்னலுக்கு கீழே நிற்கவைத்து அவரின் தோளில் ஏறி யன்னலால் எட்டிப் பார்த்தான். யன்னலின் கீழ்ப்பாதிக்கு போடப்பட்ட மறைப்புச் சீலையை சற்று விலக்கி பார்த்தபோது அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் இரு உருவங்களும் தெளிவாய் தெரிந்தன. 

வினோதினி உடலில் ஒரு துணியுமில்லாமல் நிற்கிறாள். அவள் தன்னுடைய இரண்டு கைகளிலும் எரிகிற மெழுகு திரிகளை வைத்திருக்கிறாள். அவளுக்கெதிரே உடம்பெல்லாம் மயிருள்ள கர்னலும் நிர்வாணமாய் நிற்கிறான். ஸ்ராண்ட் ஒன்றில் சரித்து வைக்கப்பட்டுள்ள காகிதப்பலகையில் வினோதினியை வரைந்து கொண்டிருக்கிறான். கர்னல் தன்னுடைய மனைவியைவிடவும் குள்ளமாயிருப்பதையும் அப்போதுதான் அவதானித்தான். கிளியனுக்கு மூச்சு வாங்கியது. கால் நடுங்கியது. தன் பாதத்தால் சித்தப்பருக்கு சேதி சொல்லிசத்தம் வராமலிலுக்க பெரிய பிரயத்தனப்பட்டு கீழே இறங்கி முழங்கால்களைப் பிடித்துக்கொண்டு குந்தியிருந்தான். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தன்னை சற்று சுமூகத்துக்குக் கொண்டுவந்ததும் சித்தப்பரின் தோளிலேறி எட்டிப்பார்த்தான். இப்போது சாப்பாட்டு மேசையில் வினோதினி நிர்வாணமாய் குப்புறப்படுத்திருக்கிறாள். மயிராண்டி கர்னல் அவளுக்கு மசாஜ் கொடுத்துக் கொண்டிருக்கிறான். கர்னல் இரகசியம் ஓதுவது கேட்கவில்லை. வினோதினி கிஸ்டீரியா வந்தவள் மாதிரி சிரிக்கிறது மட்டும்தான் கேட்கிறது. பாதி வரைந்த நிர்வாண ஓவியம் பக்கத்திலிருக்கிறது. கிளியன் உருக்குலைந்து கீழே இறங்கினான். 

சயனைட் நஞ்சுக்கு மருந்தில்லை. சயனைட் கடிச்சவனுக்கு விஷமருந்து கொடுத்தால் நோவில்லாமல் நொடியில் சாக வேண்டியவன் சிலநாட்களுக்கு குற்றுயிராய் இருந்து துடிச்சுத் துடிச்சுச்சாவான். அந்த மாதிரித்தான் இப்போது கிளியன் துடிக்கத் தொடங்கியிருந்தான். 

 மூன்றாவது காட்சி பார்க்கும் தெம்பும் சக்தியும் கிளியனிடமில்லை. “வெளியே போவம்” என்று சைகையாலேயே பேசி இருவரும் வெளியே வரும்போது தான் கர்னலின் வோக்கி ரோக்கி அலறுவது கேட்கிறது. நிலமை அறிந்து சத்தம்வராமல் ஓடிவந்து அதே வாகை மரத்துக்குக்கீழே ஒளிக்குப்போது வீட்டில் அவசரத்தில் வரும் சத்தங்கள் கேட்டன. அவர்களுக்கு மரத்துக்குமேலே சிரமப்பட்டு ஏறுவதற்கு நேரமிருக்கவில்லை. கதவு திறந்துவந்த வெளிச்சத்தில் கர்னல் சேட்டை தன்னுடைய ஜீன்சுக்குள் அவசர அவசரமாக தள்ளி விட்டுக்கொண்டு சிப்பையும் இழுத்து பெல்ரை இறுக்கிகொண்டு ஓடிவருவது தெரிந்தது.கணங்களில் கார் ஓடிமறைந்தது.  

அவ்விரவில் நடக்க சக்தியில்லாமல் நகர்ந்துவந்தான் கிளியன். அவனுக்கு சொல்லவதற்கு எதுவுமில்லாத சித்தப்பர் அவனை அண்டி வந்த சித்தப்பர் தனக்குள் யோசித்தார். 27 வயதில் குள்ள கர்னல் தனது இளமையின் உச்சத்திலிருக்கிறான். 35 வயதில் அம்சமான விநோதினி தன் பெண்மையின் உன்னதத்திலிருக்கிறாள். அவர்கள் அனுபவித்து கள்ளுறவாடுகிறார்கள். புருசனுக்கு சீவன் போகுது. 

 லொறிப் பெட்டிக்குள் போய் ஏறிய கிளியன் மீதமிருந்த அரைப்போத்தல் சாராயத்தை எடுத்து ஒரு மிடக்கு குடித்துவிட்டு சித்தப்பரிடம் நீட்டினான். “மோன இண்டைக்கு உன்ர தும்பத்துக்கு உந்தளவையும் நீ குடிச்சாத்தான் உனக்கு நித்திரைவரும்.” என்றார் சித்தப்பர். உள் சுவரில் சாய்ந்திருந்து கொண்டு இன்னுமொரு மிடக்கு குடித்தான். சித்தப்பர் அவனுக்கு முன்னால் சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தார். 

 “ பாருங்கோ சித்தப்பா காதலிச் சுக்கட்டின என்ர மனுசி எனக்கு உப்பிடி ஒரு துரோகஞ்செய்யிறாள். என்னைப் பிடிக்காட்டி சொல்லி டிவோஸ் எடுத்திருக்கலாமே? உப்பிடி என்னை அவமானப்படுத்தி துன்பப்படுத்தி துரோகஞ் செய்ய வேண்டிய தேவையில்லையே”

 “…………………………………….” 

 “ புருசன் எனக்கு முன்னாலேயே உடம்பில ஒரு துணியுமில்லாமல் ஒரு நாளும் நிண்டதில்லை அவள். அந்தளவு வெட்கம். இண்டைக்கு கட்டையனுக்கு முன்னால விளக்குப் பிடிச்சுக்கொண்டு நிர்வாண போஸ்குடுத்துக் கொண்டு நிக்கிறாள்”

 “………………………………………………”

 “படிக்காத ஒரு கரையான் படிச்ச ஒரு கரையாடிச்சியோட படுத்து ஒரு நல்லாயிருக்கிற ஒரு கரையாரக் குடும்பத்தை சீரழிக்க வந்திருக்கிறான்”

 “எடேய் யார் உனக்குச் சொன்னது அவன் வேற சாதிக்காரரோடை படுக்கேல்லையெண்டு? யுனிவேசிற்றியில படிக்கிற ஒரு வெள்ளாம் பெட்டையை இவன் வச்சிருக்கிறது மட்டுமில்லாமல் அவளின்ரை தாய்க்கும் இவன்தான் ஓக்கிறானாம். போன வருசம் யுனிவேசிற்றியிலை படிக்கிற ஒரு மட்டக்களப்புப் பொடியனை… அவன் இவன்ரை பெட்டைக்கு ராக்கிங் செய்தானோ அல்லது கர்னலை பழிச்சானோ தெரியாது. அவனை இரவிலை கடத்திக் கொண்டுபோய் அடிச்சே சாக்காட்டிப் போட்டானாம். இங்கால நாவலர் ரோட்டில ஒரு ஐயரம்மாக்கும் ஓக்கிறானாம். உங்காலை இளவாலைப் பக்கம் ஒரு சிஸ்டர் மடத்துக்கு அடிக்கடி போய்வாறானாம். ஒவ்வொரு ஊரிலையும் ஒவ்வொரு சாதியிலையும் ஓக்கிறான். நீ இருந்துபார் நாங்கள் இவனை குத்திச்சாக்காட்டின பிறகு யாழ்ப்பாணத்தில எத்தினபேர் சந்தோசப்படுவினமெண்டு”

 “…………………………….” 

 “எடேய் எங்கையிருந்தெடா உவனுக்கு உந்தளவும் செய்யிறதுக்கு நேரம் வருகுதடா? நாவவற்குழி, கோட்டை, பலாலி எண்டு எந்த ஆமிக்காம்பிலிருந்து ஆமி வெளிக்கிட்டாலும் அரைகுறை உடுப்போட அங்கை போய் நிக்கிறான். அதைவிட முழு யாழ்ப்பாணத்துக்கும் இவர்தான் இப்ப மனேச்சராம். பிறகு நித்திரை வராத ஒரு காமப்பிசாசு இரவிரவா அலையிறமாதிரி ஊர் முழுக்க மேயுறான்”

 “……………………………..”

 “கிளியா உன்ரை கொம்மான்ரை வழியில சைவக்காரர் சொந்தமெண்டால் இவன் கர்னலும் உங்களுக்கு சொந்தமாயிருக்குமல்லே “ என்றவர் மனதில் உறவுகளை கணித்து

 “நீ அவனுக்கு ஒரு சித்தப்பா முறையடா” என்றபோது

 “பாருங்கோ உவன் தன்ரை சித்திக்கே உந்தவேலைசெய்கிறான்”

 “………………………………………” 

 சித்தப்பர் உறங்கிவிட்டார். கிளியன் யோசித்தான். 

வழமையாக அவன் வருட விடுமுறையில் வரும்போது யாழ்ப்பாணத்தில் கூதிர் காலமாயிருக்கும். பாலை நிலத்திலும் மழைபெய்தால் தேவ வனமாகும் என்பது தெரிய சங்ககால நிலவியல் அறிவு தேவையில்லை. யாழ்ப்பாணத்தில் பத்துவயது குழந்தைக்கே அது தெரியும். சிவப்பு கம்பளிப் பூச்சிகள் மழைபெய்து வழிந்தோடிய இளவெய்யில் ஜொலிக்கும் நிலத்தில் ஊர்ந்துபோக காளான்களும் சேவல் கொண்டை செடிகளும் மண்ணில் முகிழ்க்க சுவர்களிலும் மதில்களிலும் பாசிபடர குழந்தைகளே காதலை உணர்கிற காலத்தில்தான் அவன் விடுமுறையில் வந்து வினோதினியோடு கூடுபவன். அவளுக்கேன் முதுவேனில் காலகொடிய வெக்கையில் வெடிமருந்து வியர்வை நாற்றத்தோடும் இரத்தவாடையோடும் வரும் முன்தலை வழுக்கையாகிப்போன உடம்பெல்லாம் உரோமம்கொண்ட ஒரு குள்ள குரங்கிடம் காமம் வந்தது? அப்படியே தூங்கிப்போனான். 

 அமாவாசைக்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. வளர்பிறைக்காலம் தொடங்கிவிட்டால் தங்களால் சாதிக்க முடியாமல் போய்விடும் என்பதை நன்கு தெரிந்தவர்கள் அடுத்த இரண்டு நாட்களும் காத்திருந்து ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். 

அமாவாசையன்று பல சகுனங்கள் புதினமாயிருந்தன. அன்று காலையில் லொறிக்குள் படுக்கப்போன கிளியனுக்கு தூக்கம் வரவேயில்லை. ஏற்கெனவே கர்னலைக் கொன்றுவிட்டதான வெற்றிக்களிப்பான பிரமையிலிருந்தான். கர்னலைக் கொன்றபிறகு அவனும் விநோதினியும் பம்பாயிலிருந்து ஒரு ஒஸ்றேலிய உல்லாசக் கப்பலிலேறி சிங்கப்பூருக்கு பயணிக்கிறார்கள். கைதேர்ந்த சீன மகப்பேற்று மருத்துவர் தம்பதிகளுக்கு பிள்ளைச்செல்வம் கிடைக்க வழிசமைக்கிறார். அபூர்வமாக அவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் கிடைக்கிறது. இவ்வாறாக பகல் கனவுகள் கண்டபடியே கிளியன் நித்திரையின்றி படுத்திருந்தான். சித்தப்பரின் குறட்டை அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

 “ நீ இருந்துபார் கர்னல் இண்டைக்கெப்படியும் வருவான்”

 என்று சித்தப்பர் சொல்ல இருவரும் விநோதினியின் வீட்டுப்பக்கம் நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது முன்சாமம். வீதியைத் தவிர்த்து ஒரு இடுகாட்டுக்குள்ளால் நடந்து கொண்டிருக்கும்போது நடுவில் நின்று தாக்குதலுக்கு இரகசிய ஒத்திகை பார்த்தார்கள். இருவரும் சாரத்தை மடித்துக் கட்டியிருந்தார்கள். சித்தப்பரின் கையில் ஒன்றரை முழ இரும்புக்கம்பி. கிளியன் கையில் கிறிஸ் கத்தி. கல்லறையில மர்ந்திருந்த ஒரு தனியன் ஆந்தை மட்டும் இவர்களைப் பார்த்த வண்ணமிருந்தது. வழமையான அவர்களது வாகை மரத்தில் ஏறிய பிறகு சித்தப்பர் சதித்திட்டத்தை கடைசியாக ஒரு தடவை இரகசியக்குரலில் சொல்லி சரிபார்த்தார்.

 “ டேய் கர்னல் காரால் இறங்கி வீட்டுக்குள்ள போறான். அப்ப அவன் கொஞ்சம் கூட நிதானமாயிருப்பான். நாங்கள் ஏதாவது வித்தியாசங்கள் வழமையைவிட தெரியுதோ எண்டு வடிவா அவதானிக்கிறம். பிறகு அவன் உள்ளபோன சத்தம் கேட்க நாங்கள் மரத்தால றங்கி வெளி வாசலிலை இடப்பக்கமும் வலப்பக்கமும் மறைவிலை பொசிசன் எடுத்து நிக்கிறம். இண்டைக்கு யன்னலேறி எட்டிப்பாக்கிறவேலையள் இல்லை. உள்ள போனவன் இரண்டு மணித்தியாலத்திலேயும் வெளியில வரலாம். இல்லாட்டி வாக்கிரோக்கி அலற பத்து நூசத்திலயும் வெளியில வரலாம். வாக்கிரோக்கி அலறி வந்தால் அவசரத்தில அலாதுபட்டு வருவான். இரண்டு மணித்தியாலத்தில வந்தால் தண்ணிகழண்ட சந்தோசத்தில கனவில நடக்கிறமாதிரி கொஞ்சம் கவனக்குறைவா வருவான். இந்த இரண்டுமே நாங்கள் தாக்க தோதான தருணங்கள். எங்களை அப்ப அவன் எதிர்பார்க்கமாட்டான். சரியோ” 

கிளியன் ஆம் என்று தலையாட்டினான். விநோதினியின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டேயிருந்தது. யாழ்ப்பாண தேங்காய் ரொட்டி கிளியனுக்கு மணந்த மாதிரியிருந்தது. சித்தப்பரிடம் வினவினான். சித்தப்பருக்கு அது மணக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் கூனி இறால் பொரியல் கிளியனுக்கு மணந்தபோது அவன் சித்தப்பரைப் பார்க்க அதை நுகர்ந்த அவரும் “இண்டைக்கு கட்டாயம் ஒரு முடிவு தெரியுமடா” என்று உடல்மொழியால் ஆமோதித்தார். பிறகு சுட்ட மரவள்ளிக் கிளங்கினதும் சுட்ட மீன் சம்பலதும் வாசனை விநோதினியின் வீட்டிலிருந்து வந்தபோது தூரத்தில் கார்ச் சத்தம் கேட்டது. கிளையில் இருந்தவர்கள் கிளையோடு ஒட்டிக்கொண்டு உசாரானார்கள். முன் லைற் அணைக்கப்பட்டருந்த கர்னலின் கார் எதிர்பார்த்ததைப்போல அவர்கள் இருந்த மரத்தடியில் தரிக்காமல் தொடர்ந்து போய் விநோதினி வீட்டுக்குமுன்போய் நின்றதும் தகரத்தில் ஏதோவிழும் சத்தம்கேட்ட சில கணங்களில் அக்காருக்குள்ளிருந்து பெருங்குண்டு வெடித்தது. மரத்திலிருந்தவர்கள் அதிர்ச்சியிலும் பயத்திலுமுறைய ஒருவன் ஓடிவருஞ்சத்தங் கேட்டது. கார்க் கண்ணாடிகளெல்லாம் வெடித்துச்சிதறும் சத்தமுங் கேட்டது. இருட்டில் அவன்முகம் வடிவாகத்தெரியாவிட்டாலும் அவன் ஓடிவரும் வேகத்தை வைத்து அவன் அவன் மிகத்திடகாத்திரமான இளைஞனாக இருப்பான் ஒரு இயக்ககாரனைப்போல என்று சித்தப்பர் மதிப்பிட்டார். வந்தவன் இவர்களின் மரத்தைக் கடந்து அடுத்திருந்த மதில் மீது ஏறிப்பாய்ந்தான். அவன் பாய்ந்த அதே கணங்களில் துவக்குச் சன்னங்கள் டுமீல் டுமீல் என்று வெளிவந்தன. எல்லாமாக முன்று வெடிகள். கன்னாபின்னா என்று எல்லாத் திசைகளிலும்போன சன்னங்களிலொன்று கிளியன் இருந்த மரக்கிளையை மயிரிழையில் ஊசிக்கொண்டு போனது. காயப்பட்டஒருவன் சேடமிழுத்து இருமுஞ்சத்தம் கர்னலின் காரிலிருந்து வந்தது. பிறகு வெடிகளில்லை. ஊரிலிருக்கிற எல்லா நாய்களும் குரைக்கத்தொடங்கின. விநோதினியின் வீட்டில் வெளிச்சமுமில்லை. சத்தங்களுமில்லை.மற்ற வீடுகளிலும் வெளிச்சங்கள் வரவில்லை. ஆனால் சனங்கள் எழுந்து அதிகாலையில் இரகசியம் பறையும் குரல்கள் வீடுகளிலிருந்து கேட்டது. 

 மிக இரகசியக்குரலில் சித்தப்பர் “டேய் கிளியா வடிவாக் கேள். ஏங்களுக்கு முதல் இப்ப பாஞ்சோடினவன் கர்னலுக்கு ஆப்பு வைச்சிட்டான் பாத்தியோ. இப்ப நாங்கள் வழமா வந்து மாட்டுப்பட்டுப்போனம். இப்ப நாங்கள் இறங்கி ஓடினமெண்டால் எங்கையாவது மாட்டுப்படுவம். மரத்திலேயே இருந்தமெண்டாலும் மாட்டுப்படுவம். உன்னையும் என்னையும் ஸ்ரீலங்கா உளவாளிகள் எண்டும் நாங்கள் தான் கிரனேட் எறிஞ்சனாங்கள் எண்டும் அவங்கள் திடமா நம்பக்கூடிய ஒரு நிலையில அம்பிட்டுப் போனம். கர்னல் செத்துப்போனானோ இன்னும் உயிரோடை இருக்கிறானோ எண்டதும் தெரியுதில்லை. நாங்கள் இப்ப காரடிக்கு ஓடிப்போய் காயம்பட்டவனுக்கு உதவ வந்த மக்கள் மாதிரிக்காட்டிறதுதான் தப்புறதுக்கு ஒரே வழியடா” 

 “ சித்தப்பா இப்பவும் அவன் காயத்தோட இருந்து நாங்கள்தான் கிரனேட் சார்ஜ் பண்ணினது என்டு சுட்டானெண்டால்”

 “ அப்ப பொர்றா சனங்கள் அல்லது இயக்கம் வரத்தொடங்க நாங்கள் சனத்தோட சனமா போவம். இப்ப கீழ இறங்கிமரத்தோட மறஞ்சிருப்பம்” 

 கத்தியை மரக்கிளையில் செருகி ஒளித்தான். கம்பியை நிலத்தில் சருகுகளுக்குள் மறைத்தார். இவர்கள் மரத்தடியில் மறைந்திருக்க வேகமாக ஒரு வாகனம் வந்தது. இவர்களைக் கடந்து கர்னலின் காரின் முன் சடுமென பிறேக் அடித்து நிண்டது. அது ஒரு பிக் அப் வாகனம். பின்னாலிருந்து ஆயுதம் தாங்கிய இரண்டு பொடியள் குதித்தார்கள். அவங்கள் கர்னலின் கார் கதவை திறந்த கணமே ஒரு பொடியன்

 “அய்யோ அண்ணா எங்கள விட்டிட்டீங்களே” 

என்று விக்கிவிக்கி அழத்தொடங்கினான். சித்தப்பர் கிளியனை தனக்கு பின்னால் வருமாறு சைகை காட்டிவிட்டு 

“அப்பன் என்ன நடந்தது ராசா. வெடிச் சத்தங்கள் குண்டுச்சத்தங் கேட்டது மக்காள்” 

என்று இங்கிருந்தே கத்திக்கொண்டு ஓடினார். காருக்குள் கர்னல் றிவோல்வரை இறுகப்பற்றியபடியே இரத்தவெள்ளத்தில் கிடந்தான். இடக்கால் குண்டுவெடிப்பில் முறிந்திருந்துது. கடைசிநேரத்திலும் தன்னுடைய முறிந்த காலுக்கு ஜீன்சை கிழித்துகட்டுப்போட்டிருந்தது சித்தப்பருக்கு நம்ப முடியாதிருந்தது. சித்தப்பர் பம்பரமாக இயங்கினார்.

 “தம்பியவை உடனே கர்னலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகோணும். வாகனத்தின்ரை பின்பெட்டியை இங்கை கார்க் கதவுக்குக்கிட்ட கொண்டுவாப்பு” 

என்றவர் கதவைத் திறந்து கர்னல் சரிந்துகிடந்த கார் ஆசனத்தை பின்னுக்கு இழுத்தார். இந்தக் கோலத்தில் இருக்கும் காயக்காரனை எவ்விதம் தூக்குவது என்று ஒருகணம் யோசித்தவர். 

“பொடியள் வடிவாக் கேட்டுக்கொள்ளுங்கோ. கிளியன் நீ இரண்டு கமக்கட்டுக்குள்ளேயும் கையைவிட்டு தோள்பக்கத்தாலை தூக்கு. அப்பன் நீங்கள் இரண்டு பேரும் ஆயுதத்தை கீழ போட்டிட்டு இடுப்பின்ரை இரண்டு பக்கமும் நிண்டு பெல்ற்றிலை பிடிச்சு இடுப்பை தூக்கிறயிள். நான் பக்குவமா முறிந்துதொங்கிற காலோட மற்றக்காலையும் தூக்கிறன். நீ இறைவர் தம்பி பக்கத்திலை பார்த்துக்கொண்டு வா. ஆராவது பிசகினால் உடனை அந்த இடத்தில பிடிக்கிறாய்” 

என்று உத்தரவு கொடுத்தார். அப்படியே கர்னலை பின் பெட்டியில் ஏற்றினார்கள். கிளியனின் மடியில் கர்னலின் தலையிருந்தது. சித்தப்பர் தனது சேட்டையும் கிளித்து கர்னலின் கிழிந்த காலுக்கு மேலும் கட்டுப்போட்டுக்கொண்டு கால் மாட்டிலிருந்தார். இரண்டு பொடியங்களும் ஆயுதங்களுடன் பெட்டியின் இருகரைகளிலும் நிற்க வாகனம் நகரத்தொடங்க மோட்டசைக்கிளில் இயக்கத்தின் இன்னொரு பெரியவன் வந்தான். ஒருவன் ஆயுதத்துடன் பின்னாலிருந்தான். பெரியவன் பாய்ந்து ஏறி முதலில் கர்னலின் கழுத்திலிருந்த சயனைட் நஞ்சு மாலையை கிழித்து தனது பொக்கற்றில்போட்டான். பிறகு கர்னல் தனது இரண்டு கைகளாலும் பற்றியபடி வைத்திருந்த மக்னம் 357 றிவோல்வரைபக்குவமாய் களைந்தான்.

 “ அண்ணைக்கு இப்பிடி ஒருவன் குண்டெறிய நீங்கள் எங்கையெடா போன நீங்கள்” 

என்று மெல்லிய குரலில் திட்ட ஆயுதத்தோட நிற்கிற இரண்டு பொடியளும் அழத்தொடங்கினார்கள். பெரியவன் கர்னலின் றிவோல்வரை அவர்களுக்கு காட்டியபடியே 

 “ பாருங்கோடா அண்ணை மூண்டுதரம் சுட்டிருக்கிறார். பிறகு குண்டெறிஞ்சவன் அருகிலிருப்பான் பிறகும் வருவான் எண்டு தன்ரை மயக்கத்திலயும் மூண்டு வெற்றுக்கோதுகளுக்கும் புது ரவை எடுத்துப்போட்டிருக்கிறார். “ 

 என்று ஆறு ரவையும் புதிதாக இருப்பதை றிவோல்வரை சுழற்றிக் காண்பித்தபின்னர் அதனை தனது இடுப்பில் செருகினான்.

 ஆஸ்பத்திரிக்குப் போய்ச்சேரும் வரையும் சித்தப்பருக்கும் பெறாமகனுக்கும் நெஞ்சில் தண்ணீர் இல்லை. நடுங்கிக்கொண்டிருந்த தங்களது கைகளை பெரிய பிரயத்தனப்பட்டு மறைத்தார்கள். தங்கள் மீது ஏதாவது விசாரணை வருமோ என்று பயந்தவாறிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் தாதிகளும் சிப்பந்திகளும்கடமையை பொறுப்பெடுக்க வெளியே மாறினார்கள். 

கிளியன் சேட்டிலும் சாரத்திலும் கர்னலின் இரத்தம். சித்தப்பரின் சாரம் இரத்தத்திலேயே தோய்ந்திருந்தது. 

அவ்விரவிலும் வெடிகுண்டு மற்றும் துவக்குச்சூட்டுச் சத்தம்கேட்டு வந்த ஒரு சனக்கூட்டம் ஆஸ்பத்திரிக்கு வெளியில் காத்திருந்தது. அக்கூட்டம் முதலில் வெளியே வந்தவர்களிடம் புதினம் விசாரித்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று விக்கினேஸ்வரனும் ஒரு அந்நியன் போல அவர்களிடம் கேள்வி கேட்டான். சனங்களை களற்றி விட்டு லொறி தரித்திருக்கும் இடம் நோக்கி நடக்க விக்கினேஸ்வரனும் தனது சைக்கிளை உருட்டியபடி இடைவெளிவிட்டு பின்தொடர்ந்தான். ஒரு மூத்திர ஒழுங்கை வளைவிலிருந்த இருட்டில் சந்தித்தார்கள். மொக்கன் கடையில் மூன்று கொத்து ரொட்டி வாங்கிக்கொண்டு யாரும் பின்தொடர்ந்து வராமல் பார்த்துக்கொண்டு வர விக்னேஸ்வரனைப் பணித்தார்கள். வழியில் வந்த ஒரு சலவைக்குளத்தில் ஆடைகளிலும் உடம்பிலுமிருந்த இரத்தத்ததை கழுவினார்கள். 

 “மடுமாதா நீ கேட்டமாதிரி அவன்ரை ரத்தத்தை உனக்கு காட்டிப்போட்டாள் பாத்தியோ கிளியா. கேதீச்சரநாதரும் மடுமாதாவும் சேர்ந்து செய்த கூட்டுத்தாக்குதல் இப்பிடித்தான்ரா இருக்கும். இது பாலாவி எண்டு நச்சுக்கொண்டு வடிவா தீர்த்தமாடடா” 

என்று உற்சாகமாய்ப் பறைந்தார். விக்கி லொறிக்கருகில் காத்திருந்தான். லொறிப் பெட்டிக்குள் மூவரும் சாராயம் குடித்தபடி பறைந்தார்கள். மாத்தையாவின்ரை ஆளோ அல்லது வேறை இயக்ககாரரோ எறிந்திருக்கலாம் என்று விக்கி அபிப்பிராயப்பட்டான். அவன் மூன்று பிறிஸ்டல் சிகரெட்டை பொக்கற்றுக்குள்ளால் எடுத்தான். மூவரும் புகைத்தார்கள். விடிவதற்கு கொஞ்ச நேரமே இருந்தது. இருள் இருக்கும்போதே சந்தேகம் வராமல் லொறியை நகரைவிட்டு பலமைல்கள் விலக்கிச் செல்வதே நல்லது என்றார் சித்தப்பர். அவசரமாக ஆனால் அனுபவித்து கொத்துரொட்டியை சாப்பிட்டார்கள். விக்கி தனது சைக்கிளையும் லொறிக்குள் போட்டுக்கொண்டு நாவற்குளிபாலம் தாண்டி சிறிது தூரம் வரை வந்தான்.

" ஒரு மாதத்தில் சவூதிக்கு முழுக்கு போட்டிட்டு ஒரேயடியாய் ஊருக்குவாறன். வினோதினியட்ட ஒண்டும் தெரியாதமாதிரிப் போய்க்கதைச்சு அவளின்ரை நிலவரங்களை எழுது” 

என்று சொல்லி பிரிந்தார்கள் நண்பர்கள். 

“நீ கவனமடா மோன” 

என்று விக்கியை எச்சரித்தார்.சித்தப்பர்.

 நாவற்குழிப்பாலத்தில் விக்கி சைக்கிளை நிறுத்தினான். தனக்கென்று ஒளித்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பற்றினான். விடிவெள்ளி தெரிய உப்பாற்றிலிருந்து வரும் தென்றல் அவன் முகத்தில் பட தனிமையிலும் பெருமையிலும் அனுபவித்தபடி புகைத்தான். இளவேனிற் காலத்திற்கு இன்னும் இரண்டு கிழமைகளே இருந்தன. (முற்றும்)

வேறு சிறுகதைகள்


Comments

Post a Comment

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்